Home இலங்கை சக்திக சத்குமார விடுதலை

சக்திக சத்குமார விடுதலை

by admin

சர்வதேச மற்றும் உள்ளூர் எதிர்ப்புகளுக்கு மத்தியில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட  விருது பெற்ற எழுத்தாளர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

”அர்த” என்ற பெயரில் இணையத்தில் சிறுகதையை வெளியிட்டு பௌத்தத்தை அவமதித்ததாக தெரிவித்து எழுத்தாளர் சக்திக சத்குமார சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச சாசனத்தின் கீழ்  2019 ஏப்ரல் முதலாம் திகதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

அதன் பின்னர், 130 நாட்கள் சிறைவாசம் அனுபவித்த அவர் 2019 ஓகஸ்ட் 8 ஆம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்டார்.

பௌத்த தகவல் மையத்தின் பணிப்பாளர் அங்குலுகஹ ஜினானந்த செய்த முறைப்பாட்டிற்கு அமைய  எழுத்தாளர் கைது செய்யப்பட்டார்.

ஜூன் 2019இல், இலங்கையில் ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள், அவரை நியாயமற்ற முறையில் கைது செய்து தடுத்து வைத்திருப்பதற்கு எதிராக ஒரு சர்வதேச போராட்டத்தை நடத்த ஆரம்ப ஒருங்கிணைப்பை மேற்கொண்டு சர்வதேசத்தில் கவனத்தை ஈர்த்தது.

எழுத்தாளர் சத்குமார மீதான வழக்கு பொல்கஹவெல  நீதவான் நீதிமன்றத்தில் 2021 பெப்ரவரி 9 செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

2021 ஜனவரி 25 அன்று சட்டமா அதிபர் சமர்ப்பித்த அறிக்கைக்கு அமைய எழுத்தாளர் சக்திக சத்குமார நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டதோடு வழக்கு நிறைவுக்கு கொண்டுவரப்பட்டது.

எந்தவொரு குற்றச்சாட்டும் அவர் மீது பதிவு செய்யப்படவில்லை என சட்டத்தரணி சஞ்சய வில்சன் ஜெயசேகர சமூக ஊடகங்களில் தெரிவித்துள்ளார்.

சிறையில் அடைக்கப்பட்ட சமயம் அபிவிருத்தி அதிகாரியாக பொது சேவையில் பணியாற்றிய சக்திக சத்குமார பிணையில் விடுவிக்கப்பட்ட பின்னர்  கடந்த 2019 டிசம்பர் 2ஆம் திகதி மீண்டும் பொது சேவையில் இணைந்துகொண்டார்.

மனித உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கில், சட்டமா அதிபர் திணைக்களம், ஒரு சட்டத்தை தவறாகப் பயன்படுத்தினால் 10 வருடங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கும் ஆபத்திலிருந்து தன்னை காப்பாற்றுவதற்காக, சிந்தனை மற்றும் கருத்துச் சுதந்திரத்திற்காக வாதிடும் இலங்கையர்கள் தீவிரமாக தலையீடு  செய்யுமாறு கடந்த ஆண்டு செப்டம்பரில், சக்திக சத்குமார அழைப்பு விடுத்தார்.

சர்வதேசத்தில் சக்திக

2020 மே 5ஆம் திகதி தன்னிச்சையான தடுப்புக்காவலுக்கான ஐக்கிய நாடுகளின் செயற்குழு (Working Group on Arbitrary Detention) தனது 87ஆவது அமர்வில், எழுத்தாளர் சக்திக சத்குமார   விசாரணைகளுக்கு முன்னதாக,  நான்கு மாதங்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்ததன் ஊடாக,  இலங்கை அரசாங்கம் அதன் சர்வதேச மனித உரிமைகள் கடமைகளுக்கு எதிராக செயற்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டியது.

 சக்தி சத்குமாராவை சர்வதேச மன்னிப்புச் சபை மனசாட்சியின் கைதியாக பெயரிட்டுள்ளது.

அமெரிக்காவின் ப்ரீடம் நவ் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளித்த ஐக்கிய நாடுகள் சபையும், கருத்துச் சுதந்திரத்தை பயன்படுத்தியமைக்காக, சக்திக சத்குமார தன்னிச்சையாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தது.

சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச சாசனத்தின்  கீழ் மக்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதன் ஊடாக, காவல்துறையினா் சட்டத்தை துஷ்பிரயோகம் செய்வதாக ஐக்கிய நாடுகள் சபையும் இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவும் பலமுறை குற்றம் சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது. #சக்தி_சத்குமார   #விடுதலை #விருது #எழுத்தாளர் #அர்த

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More