Home இலங்கை சமூக வாழ்க்கையில் ஆழ ஊடுருவியுள்ள இராணுவம் – பி.மாணிக்கவாசகம்

சமூக வாழ்க்கையில் ஆழ ஊடுருவியுள்ள இராணுவம் – பி.மாணிக்கவாசகம்

by admin

முன்னாள் போராளிகள் என்பதற்காக தொடர்ந்து விளக்கமறியலில் வைத்திருக்க முடியாது என கூறிய யாழ் மேல் நீதிமன்றம் ஐந்து சந்தேக நபர்களுக்கு நிபந்தனைகளுடன் பிணை வழங்கியிருக்கின்றது. தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனைக் கொலை செய்ய சதித் திட்டம் தீட்டினார்கள் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இந்த ஐந்து பேரையும் கிளிநொச்சி நீதிமன்றம் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டிருந்தது. ஒன்பது மாதங்களாக விளக்கமறியலில் இருந்து வரும் இவர்களைப் பிணையில் விட வேண்டும் எனக்கோரி யாழ் மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவைப் பரிசீலனை செய்து, இரு தரப்பு வாதங்களைக் கேட்டதன் பின்னர் நீதிபதி இளஞ்செழியன் இவர்களுக்குப் பிணை வழங்கியுள்ளார்.
யாழ் மேல் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ள இந்த வழக்கு தொடர்பாக ஆராய்வதற்காக போராளிகள் என்பதற்காக சந்தேக நபர்களைத் தொடர்ந்து விளக்கமறியலில் வைத்திருக்க முடியாது என்ற கூற்று இங்கு கையாளப்படவில்லை. அதையும்விட மிக முக்கியமான ஒரு விடயத்திற்காகவே இந்த கூற்று இங்கு குறிப்பிடப்படுகின்றது.
விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தம் முடிவடைந்து எட்டு வருடங்கள் கடந்துவிட்டன. இரண்டாவது அரசாங்கம் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கின்றது. ஆனால் யுத்தத்திற்குக் காரணமாகிய இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வு காண்பதற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.
அது மட்டுமல்லாமல், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் மந்த கதியிலேயே இடம்பெற்று வருகின்றன. இறுதிக்கட்ட யுத்த மோதல்கள் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலேயே மிக மோசமாக இடம்பெற்றிருந்தன. இதனால் இந்த மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் ஒப்பீட்டளவில் மிக மோசமான பாதிப்புகளுக்கு முகம் கொடுத்திருந்தார்கள்.
ஆக்கிரமிப்பல்ல மக்களுக்கு உதவுவதே நோக்கம் 
யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் அதிகூடிய இராணுவ பிரசன்னம் காரணமாக வடமாகாணத்தில் உள்ள மக்கள் தமது சிவில், பொருளாதார, அரசியல், கலை கலாசார வாழ்க்கை முறைகளில் பல்வேறு இடையூறுகளையும், கஸ்டங்களையும் துன்பங்களையும் அனுபவித்து வருகின்றார்கள். இதன் காரணமாகவே வடமாகாணத்தில் இராணுவத்தைப் பாதுகாப்புக்கான இராணுவமாக அல்லாமல் ஆக்கிரமிப்புப் படையாக மக்கள் நோக்குகின்றார்கள். இந்த வகையிலேயே  இராணுவத்தை அங்கிருந்து வெளியேற்ற வேண்டும் என்ற கோரிக்கை பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் இருந்து எழுந்தது. அந்தக் கோரிக்கை இப்போது பல்வேறு வடிவங்களிலான இராணுவ அடக்குமுறைக்கு எதிரான போராட்டமாகவும் பரிணமித்திருக்கின்றது. ஆனாhல், இந்தக் கோரிக்கையும் போராட்டங்களும் இராணுவத்தினாலும், அரசாங்கத்தினாலும் உரிய முறையில் கவனத்தில் எடுக்கப்படவில்லை.
மாறாக தேசிய பாதுகாப்புக்காகவே வடக்கில் இராணுவத்தினர் வைக்கப்பட்டிருக்கின்றார்கள். மீண்டும் ஒரு யுத்த மோதல் அல்லது ஆயுதக் கிளர்ச்சி ஏற்பட்டுவிடக் கூடாது என்ற முக்கிய காரணத்திற்காகவே அவர்கள் வடக்கில் நிலைகொண்டிருக்கின்றார்கள். அவர்கள் வெறும் தேசிய பாதுகாப்புக்காக அங்கு இருக்கவில்லை. அவர்கள் யத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்வுக்கான செயற்பாடுகளான புனர்வாழ்வுச் செயற்பாடுகளிலும் பெரும் பங்காற்றி வருகின்றார்கள்.
இந்த அடிப்படையில் அவர்கள் பல மக்கள் நலத்திட்டங்களை முன்னெடுத்திருக்கின்றார்கள். பெருமளவிலான பொதுமக்களுடைய காணிகளை அவர்கள் கைப்பற்றியிருந்தாலும், இராணுவ முகாம்களைச் சூழ்ந்துள்ள பிரதேசங்களில் வாழ்கின்ற மக்களும், ஏனைய பொதுமக்களுக்கும் இராணுவத்திற்கும் இடையே நல்லுறவு நிலவுகின்றது. யுத்தத்திற்குப் பின்னரான காலத்தில் வடபகுதி மக்களை மகிழ்ச்சியாகவும் நிறைவு கொண்டவர்களாகவும் வைத்திருப்பதற்கு, சமூக வாழ்க்கைச் செயற்பாடுகளில் இராணுவத்தினர் கொண்டுள்ள வகிபாகமானது பெருமளவில் பங்களிப்பு செய்து வருகின்றது என்று இராணுவமும், அரசாங்கமும் கூறி வருகின்றன. ஆனாhல், இது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கின்ற ஒரு நடவடிக்கை என்பதே யதார்த்தம்.
இராணுவ மயப்படுத்தப்பட்ட சமூகம் 
மேலோட்டமான பார்வையில் இராணுவத்தினருடைய பிரசன்னம் யுத்த காலத்தைப் போன்று மிகவும் வெளிப்படையாகக் காணப்படவில்லை என்பது உண்மைதான். அதேவேளை முன்னைய ஆட்சிக் காலத்தின்போது இராணுவத்தினர் பொதுமக்கள் மத்தியில் நடமாடி அவர்களுடைய நாளாந்த வாழ்க்கை நடவடிக்கைகளில் அத்துமீறி மூக்கை நுழைத்திருந்த நிலைமையும் இப்போது இல்லை என்பதும் உண்மைதான்.
ஆனால், வன்னி;ப்பிரதேசத்தில் குறிப்பாக கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் இராணுவம் சிவில் வாழ்க்கையில் ஆழ ஊடுருவியிருக்கின்றது. இந்தப் பணியை சிவில் பாதுகாப்புத் திணைக்களம், இந்த மாவட்டங்களில் சந்தடியின்றி சாதாரணாக முன்னெடுத்திருக்கின்றது. இராணுவத்தினரால் வழங்கப்பட்ட புனர்வாழ்வுப் பயிற்சியின் பின்னர் சிவில் வாழ்க்கைக்குத் திரும்பியுள்ள ஆண் பெண் இருபாலாரான முன்னாள் போராளிகளையும், யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு, குடும்பப் பொறுப்புக்களை ஏற்பதற்கு நிர்ப்பந்தி;க்கப்பட்டுள்ள இளம் பெண்களையும்  மற்றும் இத்தகைய குடும்பங்களைச் சேர்ந்த இளம் பெண்களையும் வேலைக்கு அமர்த்தியுள்ளதன் மூலம் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் ஊடாக இங்கு சமூக வாழ்க்கை இராணுவ மயப்படுத்தப்பட்டிருக்கின்றது.
இந்த இராணுவ மயப்படுத்தல் நடவடிக்கையானது அரசியல்வாதிகள், சமூகச் செயற்பாட்டாளர்கள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள், பெண் உரிமைச் செயற்பாட்டாளர்கள் என எந்தத் தரப்பினராலும் கண்டு கொள்ளப்படாத ஒரு விடயமாகக் காணப்படுகின்றது. அவர்கள் இதனை அறிந்திருந்தும் அதுகுறித்து எதையும் செய்ய முடியாதவர்களாக இருக்கின்றார்களோ என்னவோ தெரியவில்லை.
ஆனால் இந்த விடயத்தை ‘அடையாளம் கொள்கை ஆய்வுக்கான நிலையம்’ ஓர் ஆய்வறிக்கையின் மூலம் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது. குடும்பப் பொருளாதாரத்துக்கான தொழில் வாய்ப்பு, முன்பள்ளிக் கல்வி, என்பவற்றின் ஊடாக மக்களுடைய வாழ்க்கையில் ஊடுருவியுள்ள பாதுகாப்புத் திணைக்களம் அவர்களுடைய சமூக வாழ்க்கையை என்னென்ன வழிகளில், எந்த அளவுக்குப் பாதித்திருக்கின்றது என்பதை அந்த அறிக்கை வெளிப்படுத்தியிருக்கின்றது.
பொருளாதாரத்துக்காக இராணுவத்தில் தங்கியிருக்கும் நிலை
இராணுவத்தினரிடம் சரணடைந்ததாகத் தெரிவிக்கப்படுபவர்கள், படையினரால் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலின் பின்னர் இராணுவத்தினரால் புனர்வாழ்வுப் பயிற்சி வழங்கி சமூகத்தில் இணைக்கப்பட்டவர்களுக்கு சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் ஊடாக கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ள பண்ணைகளில் அரசாங்கம் வேலை வாய்ப்பை வழங்கியிருக்கின்றது.
அதேபோன்று யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து பின்னர் மீள்குடியேற்றம் நடைபெற்றுள்ள கிராமங்களில் உள்ள குழந்தைகளுக்கான முன்பள்ளிகளில் பணியாற்றுவதற்கான ஆசிரிய நியமனங்களும் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தினால் வழங்கப்பட்டுள்ளது. பண்ணைகளில் தொழில் செய்பவர்களுக்கும் முன்பள்ளி ஆசிரியைகளுக்கும் மாதம் 30 ஆயிரம் ரூபா சம்பளம் இராணுவத்தால் வழங்கப்படுகின்றது.
யுத்தம் முடிந்த கையோடு இடம்பெயர்ந்தோருக்கான மனிக்பாம் இடைத்தங்கல் முகாமில் அபயமளிக்கப்பட்டிருந்த இடம்பெயர்ந்த மக்களுக்கான மீள்குடியேற்ற நடவடிக்கைகள் 2010 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. மீள்குடியேற்றத்துக்கான இடங்களைத் தெரிவு செய்வது, மீள்குடியேறும் குடும்பங்களைத் தெரிவு செய்வது, அந்தக் குடும்பங்களை அந்தந்த இடங்களுக்கு வாகனங்களில் கொண்டு செல்வது போன்ற அனைத்து விடயங்களிலும் சிவில் அதிகாரிகளிலும்பார்க்க, இராணுவத்தினரே முதன்மை இடம்பெற்றிருந்தனர்.
மீள்குடியேற்றப் பிரதேசங்களில் இராணுவத்தினருடைய பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளும் மிகவும் இறுக்கமாக இருந்தன. இதனால் மீள்குடியேறிய மக்கள் பொது அமைப்புக்களினதும், நிறுவன ரீதியான தனியாரினதும் உதவிகளைப் பெற முடியாத நிலைமை ஏற்பட்டிருந்தது. அரசாங்கம் வழங்கிய நிவாரண உதவிகளுக்கு அப்பால் ஒருசில அரச சார்பற்ற நிறுவனங்களின் வாழ்வாதார உதவிகளைத் தவிர பிறருடைய வாழ்வதாரத்துக்கான தொழில்வாய்ப்புக்கள் அந்த மக்களை அணுக முடியாத சூழலும் ஏற்படுத்தப்பட்டிரு;நதது.
இந்த சந்தர்ப்பத்திலேயே மீள்குடியேற்றப்பட்ட பிதேசங்களில் புனர்வாழ்வுப் பயிற்சியின் பின்னர் சமூக வாழ்க்கையில் இணைக்கப்பட்டு, தொழில்வாய்ப்பின்றி தடுமாறிக் கொண்டிருந்த முன்னாள் போராளிகளுக்கு சிவில் பாதுகாப்புத் திணைக்களம் பண்ணைகளில் தொழில்வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது. அதே போன்று இந்தப் ப்pரதேசங்களில் ஆரம்பிக்கப்பட்ட முன்பள்ளிகளில் ஆசிரியைகளுக்கான நியமனங்களையும் அந்தத் திணைக்களம் வழங்கியது. அத்துடன் ஏற்கனவே செயற்பட்டு வந்த முன்பள்ளிகளில் பணியாற்றிய ஆசிரியைகளுக்கு அந்தத் திணைக்களம் தானே முன்வந்து சம்பளத்தை வழங்கி, அவர்களையும் தன்னுடன் இணைத்துக் கொண்டது.
சமூக அரசியல் பொருளதாரச் செயற்பாட்டு சீர்குலைவு
பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு இந்தத் தொழில்வாய்ப்பு ஒரு வரப்பிரசாதமாகவே அமைந்திருந்தது. ஆனால், குடும்பப் பொருளாதாரத்துக்காக சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் ஊடாக இராணுவத்திலேயே அவர்கள் தங்கியிருக்க நேர்ந்தது. இதுவே பிரச்சினைகளுக்கு அடிப்படையாகிவிட்டது என்று ‘அடையாளம் கொள்கை ஆய்வுக்கான நிலையத்தின் அறிக்கை சுட்டிக்காட்டுகின்றது.
போரினால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்திற்கு வழியற்றிருந்த சமூகத்தினருக்கு சிவில் பாதுகாப்புத் திணைக்களம் பேருதவியாக வாழ்வாதார உதவிகளை வழங்கியது. இதுவே, தமது குடும்பப் பொருளாதாரத்திற்காக அவர்களை இராணுவத்தில் தங்கியிருக்க வேண்டிய நிலைமைக்கு ஆளாக்கியிருக்கின்றது. இவ்வாறு தங்கியிருப்பதே பிரச்சினைகளுக்கு அடிப்படையாகும். இத்தகைய பொருளாதார தங்கியிருப்பானது சிவில் சமூக மற்றும் அரசியல் ஈடுபாட்டில் நேரடியானதும், மறைமுகமானதுமான ஒடுக்குமுறைக்கும் உள்ளுர் பொருளாதார வளர்ச்சியை கட:டுப்படுத்தி, அந்த சமூக அடையாளத்தையும், அதன் கட்டமைப்படன் கூடிய ஒருங்கிணைவையும் சீர்குலைப்பதற்கும், இதற்கும் மேலாக அந்த சமூகத்தைச் சார்ந்த பெண்களை ஓரங்கட்டி வைப்பதற்கும் வழிகோலியுள்ளது என அந்த அறிக்கை கூறுகின்றது. கின்றது.
தமிழ் சமூகத்திற்குள்ளே ஆழமாக ஊடுருவுவதற்கு சிவில் பாதுகாப்புத் திணைக்களமே முழுமுதற் கருவியாக அமைந்திருக்கின்றது. இவ்வாறு இராணுவ மயப்படுத்தலை கிளர்ச்சித் தடுப்புத் திட்டத்தின் ஓர் அங்கம் என்று அரசாங்கம் சர்வதேச சமூகத்திற்கு மூடிய கதவுகளுக்குள்ளே தற்காத்துக் கொண்ட போதிலும், யுத்தத்தின் பின்னர் உருவாகியுள்ள தமிழ் அரசியல் செயற்பாட்டுக்கான இடைவெளியையும் அரசியல் செயற்பாடுகளையும் கட்டுப்படுத்துவதே அதன் உண்மையான நோக்கம் என்றும் அற்த அறிக்கை சுட்டிக்காட்டியிருக்கின்றது.
அத்துடன், தமிழ் அரசியல் நீண்ட காலத்திற்கு இயல்பு நிலையை எட்ட முடியாமல் இருப்பதற்கும், அரச மேலாண்மை மிக்க சிங்கள தேசியவாதச் செயற்பாட்டை சவாலுக்கு உட்படுத்துவதைச் செயலிழக்கச் செய்வதற்கும் இந்த இராணுவ மயப்படுத்தல் நடவடிக்கைகள்   வழி சமைத்துள்ளன எனவும் அந்த அறிக்கை கூறுகின்றது.
வன்னியில் உண்மையானதொரு ஜனநாயக சமூகம் மலர்வதைத் தடுப்பதற்காகத் தொடர்கின்ற இராணுவமயப்படுத்தல் செயற்பாடுகளில் சிவில் பாதுகாப்புத் திணைக்களம் என்பது ஓர் அங்கம் மட்டுமே. நாட்டின் தலைநகராகிய கொழும்பில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை வைத்து வன்னியில் ஜனநாயக சுதந்திரங்களை எட்டுவதற்குரிய அரசாங்கத்தின் முன்னேற்றத்தை அளவிட முடியாது. ஏனெனில் உண்மையான ஜனநாயகத்தை அடைவதற்காக மிகச் சிறிய அளவிலான மாற்றங்களே அங்கு நிகழ்ந்திருக்கின்றன எனவும் அந்த அறிக்கை குறிப்பிட்டிருக்கின்றது.
சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் கட்டமைப்பு
வடகிழக்கு பிரதேசங்களின் எல்லைக் கிராமங்கள் உட்பட, திருகோணமலை, அம்பாறை, வெலிஓயா (மணலாறு), கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய ஆகிய பிரதேசங்களில் வேறு வேறான 23 தலைமை அலுவலகங்களை சிவில் பாதுகாப்புத் திணைக்களம் கொண்டிருக்கின்றது. இவற்றின் ஊடாக, நன்கொடைச் செயற்பாடுகளுக்கான சேவா வனிதா, விளையாட்டுத்துறை பயிற்சிக்கான விளையாட்டுக்கான நிதிப் பிரிவு, போன்ற பல்வேறு பிரிவுகளில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன.
ஆனால் வன்னிப்பிரதேசத்தில் குறிப்பாக கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் திட்டப்பிரிவு நடைமுறைப்படுத்தப்படுகின்றது. இந்தப் பிரிவின் கீழேயே பண்ணை விவசாயம், கால்நடை விவசாயம் மற்றும் சிவிலியன்களுக்கான வேலைத்திட்டங்கள் என்பன நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தில் அதி உயர் மட்டபோரியல் பயற்சி பெற்ற சிப்பாய்களும், தொழிலுக்காக இணைக்கப்பட்ட சாமான்யர்களும் பணியாற்றுகின்றார்கள். ஆயினும் இவர்கள் அனைவரையும் இராணுவ சிப்பாய்கள் என்றும், சிவில் பாதுகாப்புப் படையினர் எனவுமே அழைக்கின்றார்கள்.
கடந்த 2012 ஆம் ஆண்டு ஆரம்பி;க்கப்பட்ட சிவில் பாதுகாப்புத் திணைக்களத்திற்கான ஆட்சேர்ப்பின் மூலம் தற்போது கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் 3500 பேர் வரையில் தொழில் புரிந்து வருகின்றார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் முன்னாள் விடுதலைப்புலி போராளிகள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் பண்ணைத் தொழிலாளிகளாகவும், முன்பள்ளி ஆசிரியைகளாகவும் பணியாற்றி வருகின்றார்கள்.
சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தைச் சேர்ந்த இவர்கள் பண்ணைகள் மற்றும் முன்பள்ளி ஆசிரிய பணிகளுக்கு அப்பால், இராணுவம் ஈடுபடுத்தப்படுகின்ற விசேட பணிகளான வெள்ளமீட்புப் பணிகள், டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் போன்றவற்றிலும் இராணுவத்தினால் ஈடுபடுத்தப்படுகின்றார்கள். அத்துடன் விசேட நிகழ்வுகளிலும், அவ்வப்போது அரசியல் ரீதியாக முன்னெடுக்கப்படுகின்ற எதிர்ப்பு நடவடிக்கைகளிலும்கூட இவர்கள் பயன்படுத்தப்படுவதாக இந்த அறிக்கை தொடர்பான தகவல்கள் திரட்டப்பட்டபோது கருத்து வெளியிட்டவர்கள் தெரிவித்திருக்கின்றார்கள்.
பண்ணைகளின் வருமானமும் பணியாளர்களின் நிலைமையும்
கிளிநொச்சி மாவட்டத்தில் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தினால் நடத்தப்படுகின்ற பண்ணைகளில் 2016 ஆம் ஆண்டு ஒரு கோடியே 33 லட்சத்து, 41 ஆயிரத்து 441 ரூபா 80 சதமும், முல்லைத்தீவு மாவட்டப் பண்ணைகளில் ஒரு கோடியே 58 லட்சத்து 24 ஆயிரத்து 661 ரூபா 55 சதமும் நிகர இலாபமாகப் பெறப்பட்டிருக்கின்றது. கடந்த ஆண்டுக்கான செயற்திட்ட அறிக்கையில் அந்தத் திணைக்களம் இந்தத் தகவல்களை வெளியிட்டிருக்கின்றது. இரண்டு மாவட்டங்களிலும் 2016 ஆம் ஆண்டு மாத்திரம் 2 கோடியே 91 லட்சத்து 66 ஆயிரத்து 103 ரூபா 35 சதம் (29இ166இ103 ரூபா 35சதம் – கிட்டத்தட்ட 190,000 அமெரிக்க டொலர்கள்) இலாபமாகப் பெறப்பட்டிருக்கின்றது என ‘அடையாளம் கொள்கை ஆய்வுக்கான நிலையம்’ தனது அறிக்கையில் வெளிப்படுத்தியிருக்கின்றது.
பண்ணைத் தொழில் செய்பவர்களுக்கும், முன்பள்ளி ஆசிரியைகளுக்கும் மாதாந்தம் 30 ஆயிரம் ரூபா சம்பளம் வழங்கப்பட்ட போதிலும், அது அவர்களுடைய குடும்பங்களின் ஏனைய தேவைகளுக்குப் போதாத நிலையே நிலவுகின்றது. மீள்குடியேற்றப் பிரதேசங்களுக்குப் படையெடுத்துள்ள நிதி நிறுவனங்களின் நுண்நிதி கருத்திட்டச் செயற்பாட்டின் கடன் திட்டங்களுக்கு இந்தப் பண்ணைத் தொழிலார்களும், முன்பள்ளி ஆசிரியைகளும்கூட பலியாகிப் போயிருக்கின்றார்கள்.
அந்த நிறுவனங்களின் கவர்ச்சிகரமான விளம்பரங்கள் கருத்தைக் கவரும் வரையிலான ஆசை வார்த்தைகளி; மயங்கி பல்வேறு பொருட்களை இவர்கள் கொள்வனது செய்ததனால் வீணான கடன் சுமைக்கும் இவர்கள் ஆனாகியிருக்கின்றார்கள். இதனால் குடும்பத்தில் ஒருவருடைய வருமானத்தை மாத்திரம்அ வைத்துக் கொண்டு குடும்பச் செலவையும் பிள்ளைகளின் கல்வி மற்றும் கடன் தவணைகளுக்கான பணக் கொடுப்பனவுகளையும் சமாளிக்க முடியாமல் கஸ்டத்திற்கு உள்ளாகியிருக்கின்றார்கள். காலையில் இருந்து மாலை 5 மணிவரையில் அவர்கள் பணியாற்ற வேண்டியிருப்பதனால் வேறு வருமானம் ஈட்டக்கூடிய வேலைகளுக்குச் செல்ல முடியாதிருப்பதாக அவர்கள் கவலை வெளியிட்டிருக்கின்றார்கள்.
பொறியில் சிக்கிய நிலைமை
அத்துடன் அவர்கள் இராணுவத்தினரால் நடத்தப்படுகின்ற பண்ணைகளில் பணியாற்றுவதனால், சமூகத்தில் இராணுவத்திற்காக வேலை செய்பவர்கள் என்ற அடையாளப்படுத்தலுக்கு உள்ளாகியிருக்கின்றார்கள். அதேபோன்று சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் சம்பளத்தில் பணியாற்றுகின்ற முன்பள்ளி ஆசிரியைகளும் ஏளனமாக சமூகத்தில் நோக்கப்படுவதுடன், பாடசாலைகளின் நிகழ்வுகளில் அடிக்கடி இராணுவத்தினர் பங்குபற்றுவதுடன், அங்கு வந்து செல்வதனால், அவர்களுடைய நடத்தைகள் குறித்தும் சமூகத்தில் கீழ்ப்பார்வையுடன் கூடிய கருத்து நிலவுகின்றது. இதனால் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தில் பணியாற்றுபவர்கள் சமூகத்தின் ஓர் அங்கமாக ஒருங்கிணைந்து வாழ முடியாமல் தனிமைப்படுத்தப்பட்டவர்களாக இருக்கின்றார்கள்.
இவர்கள் அரசியல் செயற்பாடுகளிலோ அல்லது சமூகச் செயற்பாடுகளிலோ இணைந்து செயலாற்றவோ பங்களிப்புச் செய்யவோ முடியாத நிலைமையும காணப்படுவதனால், இவர்கள் சார்ந்த சமூகம் தனக்குள்ளேயே பிளவுபட்ட ஒரு சமூகமாகத் திகழ்கின்றது. இங்கு கருத்துச் சுதந்திரத்திற்கும் ஜனநாயகச் செயற்பாடுகளுக்கும் இடமில்லாமல் போயிருக்கின்றது.
சிவில் பாதுகாப்புத் திணைக்கள வேலையை விட்டு வேறு தொழில் வாய்ப்புகளைத் தேடிச் செல்வதற்கு இவர்களால் முடியாதிருக்கின்றது. தொடர்ச்சியான இராணுவ அதிகாரிகளின் கண்காணிப்பு, அவர்களால் நடத்தப்படுகின்ற மாதாந்த கருத்தரங்குகள் சந்திப்புகளில் கலந்து கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் என்பவற்றினாலும், மாதாந்தம் பண்ணைகளுக்கு விஜயம் செய்து இவர்களை நோட்டமிடுகின்ற புலனாய்வுத் துறை அதிகாரிகளின் கண்காணிப்புச்செயற்பாடு போன்றவை காரணமாக இவர்கள் சிவில் பாதுகாப்புத் திணைக்கள வேலையை விட்டுச்செல்ல முடியாதவர்களாக – பொறியொன்றில் சிக்கிய நிலைமைக்கு ஆளாகியிருக்கின்றார்கள்.
இந்த நிலைமை நீடிக்குமேயானால், சுதந்திரமும், ஜனநாயக உரிமைகளும் பறிக்கப்பட்ட ஒரு சமூகமாகவே எதிர்காலத்தில் வன்னிப்பிரதேச சமூகம் மாற்றமடையும் என்று ‘அடையாளம் கொள்கை ஆய்வுக்கான நிலையம்’  தனது அறிக்கையில் எச்சரிக்கை செய்திருக்கின்றது,
அரசுக்கும் சர்வதேசத்திற்கும் அழைப்பு 
சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தில் பணியாற்றுபவர்களின் ஊடாக இராணுவத்தைச் சென்றடைகின்ற இலாப நிதி உள்ளுரின் பொருளாதாரத்திற்கு வலு சேர்க்கும் வகையில் இந்தப் பண்ணைகளும் அவற்றில் பணியாற்றுபவர்களைம் வடமாகாண சபை பொறுப்பேற்று கூட்டுறவுச் சபைச் செயற்பாட்டுக்குள் உள்ளடக்க வேண்டும் என்று அந்த அறிக்கை பரிந்துரைத்திருக்கின்றது.
இந்த விடயத்தில் அரசியல்வாதிகளும் உரிய கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ள ‘அடையாளம் கொள்கை ஆய்வுக்கான நிலையம்’  சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் பண்ணைகளிலும் முன்பள்ளிகளிலும் பணியாற்றுபவர்களின் வாழ்வாதாரத்திற்கும் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியிருக்கின்றது.
அரசாங்கம் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் இருந்து இந்தப் பண்ணைகளை விடுவிக்க வேண்டும் என்பதுடன், அங்கு பணியாற்றுபவர்களின் மனித உரிமைகள் பேணப்படுவதற்காக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் மாதம் ஒருமுறை அங்கு விஜயம் செய்வதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியிருக்கின்றது.
இலங்கை அரசாங்கம் இணை அனுசரணை வழங்கியுள்ள ஐநா மனித உரிமைப் பேரவையின் 30ஃ1 மற்றும் 34ஃ1 தீர்மானங்களில் ‘அடையாளம் கொள்கை ஆய்வுக்கான நிலையம்’ வெளியிட்டுள்ள அறிக்கையின் பரிந்துரைகளையும் உள்ளடக்கி அவற்றை நிறைவேற்ற வேண்டும் என்று அசாங்கத்திற்கு சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுக்க வேண்டும் என அந்த அறிக்கை கோரியிருக்கின்றது.
யுத்தம் முடிவடைந்து எட்டு வருடங்களாகியுள்ள நிலையில் முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் என்ற காரணத்திற்காக இராணுவத்தின் புனர்வாழ்வுப் பயிற்சி பெற்றதன் பின்னர்; சமூகத்தில் சாதாரண வாழ்க்கை வாழ்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை அரசாங்கம் இராணுவத்தின் ஊடாக அடக்குமுறைக்கு உள்ளாக்கக் கூடாது. அவர்களும் இந்த நாட்டின் பிரஜைகள் என்பதை மனதில் இருத்தி அவர்களும் சாதாரண சிவில் வாழ்க்கையை சுதந்திரமும்  ஜனநாயக உரிமைகளையும் கொண்டவர்களாக வாழ்வதற்கு வழி செய்ய வேண்டும்.
புனர்வாழ்வுப் பயிற்சியின் பின்னர் அவர்கள் விடுதலை செய்யப்பட்டபோது, இந்த நாட்டின் சமூக, பொருளாதார, அரசியல் செயற்பாடுகளில் அவர்கள் பங்களிக்க வேண்டும் என்றும், அதன் ஊடாக இந்த நாட்டின் முன்னேற்றத்திற்காகச் செயற்பட வேண்டும் என்றும் அதற்கான உரிமைகளும் சுதந்திரமும் அவர்களுக்கு உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாகவும் கூறியதை அரசாங்கம் நினைவுபடுத்திச் செயற்பட முன்வர வேண்டும்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More