Home இலங்கை சாந்தன்: இரண்டு ஆயுள் தண்டனைகள் இரண்டு பிரேத பரிசோதனைகள் – நிலாந்தன்!

சாந்தன்: இரண்டு ஆயுள் தண்டனைகள் இரண்டு பிரேத பரிசோதனைகள் – நிலாந்தன்!

by admin

 

சாந்தன் இந்திய உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டவர்.பொதுவாக இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் ஆயுள் தண்டனை எனப்படுவது விடுமுறை நாட்களைக் கழித்து பார்த்தால் 15 ஆண்டுகள்.சிறை,சிறப்பு முகாம் போன்ற இடங்களில் சாந்தன் தடுத்து வைக்கப்பட்டிருந்தது 33 ஆண்டுகள். அப்படிப்பார்த்தால் அவர் இரண்டு ஆயுள் தண்டனைகளை முடித்துவிட்டார். அதற்கு பின்னரும் அவர் தாயகம் திரும்புவதற்கு அனுமதிக்கப்படவில்லை.தமிழகத்தில் உள்ள சட்டச் செயற்பாட்டாளர்கள் தமிழக அரசைக் குற்றஞ்சாட்டுகின்றார்கள்.

இந்த விடயத்தில் தாயகத்தில் உள்ள அரசியல்வாதிகளும் பொறுப்புணர்ந்து செயல்படவில்லை. இந்திய மண்ணில் பாரதூரமான குற்றச் செயல்களுக்காக தண்டிக்கப்பட்டவர்கள்,விடுவிக்கப்பட்ட பின் அவர்கள் இந்தியர்களாக இருந்தால் வீட்டுக்கு போகலாம்.வெளிநாட்டவர்களாக இருந்தால் நாடு கடத்தப்படுவார்கள்.அல்லது இந்தியாவில் அவர்களைப் பொறுப்பேற்கக்கூடிய உறவினர்கள் இருந்தால் அவர்களிடம் போகலாம்.சாந்தன் தாயகத்துக்கு வர விரும்பினார்.தன் தாயுடன் இறுதிக் காலத்தைக் கழிக்க விரும்பினார்.அவரோடு தடுத்து வைக்கப்பட்டிருந்த ஏனையவர்கள் இப்பொழுதும் திருச்சி சிறப்பு முகாமில்தான்.தண்டனைக் காலம் முடிந்த பின் விடுதலை செய்யப்ட்ட வெளிநாட்டவர்கள் அவர்களுடைய நாட்டுக்குத் திரும்பும் வரையிலும் அவ்வாறு தடுத்து வைக்கப்படுகின்றார்கள்.

விடுவிக்கப்பட்ட சாந்தன் நாட்டுக்குத் திரும்பினால் இலங்கைச் சட்டங்களின் பிரகாரம் அவருக்கு ஆபத்து ஏற்படுமா என்ற ஒரு பயம் அவருக்காக உழைத்த சட்டச் செயற்பாட்டாளர்கள் மத்தியில் காணப்பட்டது.நாட்டிலுள்ள தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அது தொடர்பாக நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பி,உரிய அமைச்சரிடம் உத்தியோகபூர்வமாக ஒரு பதிலை பெறுவது நல்லது என்றும் அவர்களிற் சிலர் அபிப்பிராயப்பட்டார்கள்.ஆனால் அது தொடர்பாக எடுக்கப்பட்ட முயற்சிகள் எவையும் வெற்றி பெறவில்லை.தமிழ் அரசியல்வாதிகளில் ஒருவருக்கு அது தொடர்பாக எழுதப்பட்ட மின்னஞ்சலுக்குப் பதில் கிடைக்கவில்லை.சில அரசியல்வாதிகள் எங்கே, யாரிடம் அதைக் கேட்க வேண்டுமோ அங்கே கேட்காமல், சாந்தனின் வீட்டுக்கு போய் அவருடைய தாயாரைக் கண்டு படமெடுத்துக் கொண்டார்கள்.

இவ்வாறு சாந்தனை விடுவிப்பதற்கு யாரிடம் கதைக்க வேண்டும்?எங்கே போராட வேண்டும்? என்பது தொடர்பாக தமிழ் அரசியல் சமூகம் தெளிவற்றுக் காணப்பட்டது.அல்லது பொறுப்போடு நடந்து கொள்ளவில்லை.அல்லது மூத்த சட்ட மற்றும் சிவில் சமூகச் செயற்பாட்டாளரான ஒருவர் கூறுவது போல அதற்கு வேண்டிய அரசியல் பெருவிருப்பம்-political will-அவர்களிடம் இருக்கவில்லை.

திருச்சி சிறப்பு முகாமானது இதற்கு முன்னிருந்த சிறைகளை விடக் கொடுமையானது என்று அங்கு இருப்பவர்கள் கூறுகிறார்கள்.அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையைச் சேர்ந்த போதைப் பொருள் வியாபாரிகள் சிறப்பு முகாமுக்குள் இருந்தபடியே தமது வியாபாரத்தைத் தொடர்ந்தமை கண்டு பிடிக்கப்பட்டது.அதன்பின் முகாமில் கட்டுப்பாடுகள் அதிகரித்தன.அது அரசியல் கைதிகளையும் பாதித்தது.சாந்தனைப் போன்றவர்கள் ஏனைய கைதிகளிடமிருந்து பிரிக்கப்பட்டு தனியறைகளில் வைக்கப்பட்டார்கள். சுற்றிவரக் கண்காணிப்பு. உடற்பயிற்சி செய்ய முடியாது.அவர்கள் தடுத்து வைக்கப்பட்ட அறைகளோடு கழிப்பறைகளும் இணைக்கப்பட்டிருந்தபடியால் வெளியே நடமாடுவதற்கும் வரையறைகள் இருந்தன.சிறைக்குள் சாந்தன் பெருமளவுக்கு ஒரு சன்னியாசி போலாகிவிட்டார் என்று வழக்கறிஞர் ஒருவர் சொன்னார்.பெருமளவுக்குத் தனித்திருப்பதாகவும் எல்லாவற்றிலிருந்தும் விடுபட்டவர் போல காணப்பட்டதாகவும் அவர் சொன்னார்.சிறப்பு முகாமில் அவர் சோறு சாப்பிடாமல் கஞ்சி மட்டும் தருமாறு கேட்பதாகவும் கூறப்பட்டது.சிறப்பு முகாமும் சாந்தனின் உடல் கெடுவதற்கு ஒரு காரணம்.முடிவில் அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படும் ஒரு நிலை வந்த பொழுது மீண்டும் அவரது குடும்பத்தவர்கள் தமிழ்த் தேசிய அரசியற் சமூகத்தை அணுகினார்கள்.

அப்பொழுதும் தமிழ்த் தேசிய அரசியற் சமூகம் அதே மந்தத்தனத்தோடு பொறுப்பின்றி நடந்து கொண்டது.சாந்தனை நாட்டுக்குள் கொண்டு வருவது தொடர்பான முடிவை இலங்கையில் எடுக்க வேண்டியது வெளிவிவகார அமைச்சும் பாதுகாப்பு அமைச்சும்தான்.சம்பந்தப்பட்ட அமைச்சுக்களோடு மிகவும் பிந்தித்தான்,அதாவது அவர் இந்திய உச்ச நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டு கிட்டத்தட்ட 14 மாதங்களின் பின்னர்; அதிலும் குறிப்பாக அவர் இறப்பதற்குச் சில கிழமைகளுக்கு முன்புதான் தொடர்பு கொள்ளப்பட்டிருக்கிறது.

தமிழ்த் தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் அந்த விடயத்தில் ஜனாதிபதியை,வெளி விவகார அமைச்சரை அணுகிய அதே காலப்பகுதியில் சாந்தனின் குடும்பத்தவர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை அணுகியிருக்கிறார்கள்.மற்றொரு யாழ்ப்பாண நாடாளுமன்ற உறுப்பினராகிய அங்கஜனும் அதில் அக்கறை காட்டியிருக்கிறார்.அதாவது சாந்தனின் விடயத்தில் தமிழ்த் தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமல்ல,அதற்கு வெளியே உள்ள தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சரும் அரசாங்கத்தை அணுகியதன் விளைவாகத்தான் நாடு திரும்புவதில் சாந்தனுக்கு இருந்த தடைகள் அகற்றப்பட்டன.

ஆனால்,அப்பொழுது எல்லாமே பிந்திவிட்டது.விமானத்தில் பயணம் செய்ய முடியாத அளவுக்கு சாந்தன் நோயாளியாகி விடடார் என்று ராஜீவ் காந்தி மருத்துவமனையின் டீன் ஒரு வழக்கறிஞரிடம் கூறியுள்ளார்.முடிவில், சாந்தனின் உயிரற்ற உடலைத்தான் அவருடைய தாய்க்குக் காட்ட முடிந்தது.விடுதலை செய்யப்பட்ட பின்னரும் அவர் ஒரு கைதியாகவே இறந்தார்.உயிருடன் இருக்கும் போது அவர் இரண்டு ஆயுள் தண்டனைகளை அனுபவித்தார்.உயிர் பிரிந்தபின் அவருடைய உடலை இரண்டு தடவைகள் போஸ்மோர்டம் செய்திருக்கிறார்கள்.முதலில் இந்தியாவில் பின்னர் இலங்கையில்.

சாந்தனுக்காக தாயகத்தில் உள்ள தமிழ் அரசியல் சமூகம் பெரிய அளவில் போராடவில்லை.இப்பொழுதும் சிறப்பு முகாம்களில் இருப்பவர்களை விடுதலை செய்யவதற்காக யார் போராடுகிறார்கள்?சாந்தனோடு சிறையில் வைக்கப்பட்டிருந்த இந்தியப் பிரஜையாகிய பேரறிவாளனை விடுவிப்பதற்காக அவருடைய தாயார் அற்புதம்மாள் தொடர்ச்சியாகப் போராடினார்.ஒரு தாயின் நிகரற்ற போராட்டங்களில் அதுவும் ஒன்று.கிழக்கில் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து உயிர் துறந்த அன்னை பூபதியின் போராட்டத்தைப்போல அது முன்னுதாரணமானது.ஈழத் தமிழ் அரசியலில் தாயக களத்துக்கு வெளியே நடந்த ஓர் அன்னையின் மகத்தான போராட்டமாக அற்புதம்மாளின் 32 ஆண்டுகாலப் போராட்டம் காணப்பட்டது.

சாந்தனை விடுவிப்பதற்காக அல்லது நாட்டுக்குள் கொண்டு வருவதற்காக தமிழ் அரசியல் சமூகம் குறிப்பிட்டுச் செல்லக்கூடிய போராட்டம் எதையும் முன்னெடுத்திருக்கவில்லை.அது மட்டுமல்ல, சாந்தனை நாட்டுக்குள் கொண்டு வருவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதிலும் தமிழ் அரசியல்வாதிகளிடம் பொருத்தமான அணுகுமுறைகள் இருக்கவில்லை.சாந்தனின் குடும்பம் சலிப்படைந்து,களைப்படைந்து,ஒரு விதத்தில் விரக்தியடைந்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை நோக்கிப் போனது.

ஆனால் தமிழ் தேசியக் கட்சிகள் தங்கள் சொந்தக் கட்சிக்குள் பதவிப் போட்டி என்று வரும் பொழுது எப்படியெல்லாம் போராடுகிறார்கள்?கடந்த வாரம் தமிழ்த் தேசிய அரசியலின் இயலாமைகளை நிரூபித்த ஒரு வாரம். முதலாவது சாந்தனின் மரணம்.இரண்டாவது தமிழரசுக் கட்சி நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டமை.அங்கே அவர்கள் புத்திசாலித்தனமாக நடந்தார்களா இல்லையா என்பது வேறு கதை. கட்சிக்குள் வந்த பிணக்கை கட்சிக்குள்ளேயே தீர்க்க முடியவில்லை என்பது ஒரு பாரதூரமான தோல்வி.அதனைத் தீர்ப்பதற்கு கட்சிக்கு வெளியேயும் சிவில் சமூகங்கள் இல்லை என்பது மற்றொரு தோல்வி.கடந்த 15 ஆண்டு காலத் தோல்விகளுக்கு அந்தக் கட்சி பொறுப்பு என்ற படியால் அது அழியட்டும்;அதன் வாக்குகள் தென்னிலங்கைக் கட்சிகளுக்குப் போனால்கூட பரவாயில்லை என்று கருதுமளவுக்கு சில சிவில் சமூகப் பிரதிநிதிகள் காணப்படுகிறார்கள் என்பது அதைவிடத் தோல்வி.

இது ஒரு தேர்தல் ஆண்டு.ஜனாதிபதித் தேர்தலில் தற்போதுள்ள நிலவரங்களின்படி அரச தரப்பு;எதிர்க்கட்சி;ஜேவிபி என்று மூன்று அணிகள் போட்டியிடக்கூடிய வாய்ப்புகள் தெரிகின்றன.தென்னிலங்கையில் படித்த நடுத்தர வர்க்கத்தின் மத்தியில் ஜேவிபி ஆதரவு அலை ஒன்று வீசுகிறது.அது வாக்குகளாக மாறுமா?இல்லையா?அல்லது அதை கண்டு பயந்து ஏனைய வலதுசாரிக் கட்சிகள் தங்களுக்கு இடையே ஐக்கியத்துக்கு போகுமா? இல்லையா? என்பதனை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

மேற்சொன்ன மூன்று தரப்புக்களும் போட்டியிட்டால்,சிங்கள மக்களின் வாக்குகள் மூன்றாகப் பிரியும்.அப்பொழுது தமிழ்த் தரப்பு ஒரு தீர்மானிக்கும் சக்தியாக மேலெழக்கூடிய வாய்ப்புகள் அதிகமாகும்.ஆனால் அவ்வாறு அரசியல் களத்தில் துணிந்து புகுந்து விளையாடுவதற்கு யாரும் இருப்பதாகத் தெரியவில்லை.உள்ளதில் பெரிய கட்சி நீதிமன்றம் ஏறத் தொடங்கிவிட்டது.மற்றொரு கட்சி தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக அறிவித்துவிட்டது.அதாவது துணிந்து புகுந்து விளையாடத் தயாரில்லை.ஒரு பொது வேட்பாளரை நிறுத்தப் போவதாகக் கூறிய குத்து விளக்குக் கூட்டணி அதைக் குறித்து பேசிக் கொண்டிருக்கிறதே தவிர செயல்படுவதாகத் தெரியவில்லை.தமிழரசுக் கட்சி தமிழ்ப் பொது வேட்பாளரை ஆதரிக்காவிட்டால் குத்துவிளக்குக் கூட்டணி அந்தப் பரிசோதனையில் இறங்குமா?

இந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் வெல்லப்போகும் கட்சி அல்லது கூட்டு, அடுத்த ஆண்டு அனேகமாக பொது தேர்தலை வைக்கும்.தொடர்ந்து மாகாண சபைத் தேர்தல்,உள்ளுராட்சி சபைத் தேர்தல் போன்றன வைக்கப்படலாம்.அதாவது வரும் இரண்டு ஆண்டுகளும் தேர்தல் ஆண்டுகளாக அமையக்கூடிய வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.தமிழ் மக்கள் மத்தியில் இப்பொழுது மக்கள் இயக்கம் எதுவும் இல்லை.இருப்பதெல்லாம் தேர்தல் கேட்கும் கட்சிகள்தான்.அடுத்தடுத்து வரும் இரு தேர்தல் ஆண்டுகளை எதிர்கொள்ள தமிழ்த் தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட கட்சிகளிடன் என்ன உபாயம் உண்டு? நிர்ணயகரமான ஒரு காலகட்டத்தில்,அரங்கில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடக்கூடிய தரப்புக்களை இந்தியாவும் அமெரிக்காவும் ஏனைய பேரரசுகளும் அணுகிக் கையாள முற்படும் ஒரு காலகட்டத்தில்,அரங்கில் துணிந்து புகுந்து விளையாட வேண்டிய தமிழ்த் தரப்பு என்ன செய்து கொண்டிருக்கிறது?

அரசியலில் துணிந்து புகுந்து விளையாடும் தரப்புகள்தான் ரிஸ்க் எடுக்கும்.ரிஸ்க் எடுக்கும் தரப்புகள்தான் கனவுகளை நோக்கி யதார்த்தத்தை வளைக்கும்.தலைமை தாங்கும்.துணிந்து புகுந்து விளையாடும் தரப்புகள்தான் வரலாற்றை உருவாக்குகின்றன.உட்கட்சிச் சண்டையை நீதிமன்றத்துக்கு கொண்டு போகும் கட்சிகள் வரலாற்றை உருவாக்குவதில்லை.அதுமட்டுமல்ல தேர்தல் வரும்பொழுது தமிழ்த் திரைப்படங்களில் கடைசி நேரத்தில் விசிலடித்துக் கொண்டு வரும் போலீஸ்போல அறிக்கை விடும் சிவில் சமூகங்களும் வரலாற்றைத் தீர்மானிப்பதில்லை.

 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More