Home இலங்கை பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்படுகிறதா? வலுவடைகிறதா? செல்வரட்னம் சிறிதரன்

பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்படுகிறதா? வலுவடைகிறதா? செல்வரட்னம் சிறிதரன்

by admin

மூன்று தசாப்தங்களுக்கு மேலாக நடைமுறையில் உள்ள பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை பலதரப்பட்டவர்களினாலும் வலுவாக முன்வைக்கப்பட்டு வந்துள்ளது. ஆயினும் அந்தக் கோரிக்கை முழுமையாக நிறைவேற்றப்படவில்லை.
 யுத்த மோதல்கள் முடிவடைந்து ஏழரை வருடங்களாகின்ற நிலையிலேயே, பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்குப் பதிலாகப் புதிய சட்டம் ஒன்றை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது.
அரச படைகளுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட ஆயுதப் போராட்டத்தை நசுக்குவதற்காக, ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன கோலோச்சியபோது, கடந்த 1979 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 20 ஆம் திகதி பயங்கரவாதத் தடைச்சட்டம் (தற்காலிக ஏற்பாடுகள்) என்ற பெயரில் மூன்று வருடங்களுக்கு செல்லுபடியாகத் தக்க வகையில், தற்காலிகமாகக் கொண்டு வரப்பட்டது.
ஆனால் மூன்று வருடங்களின் பின்னர், 1982 ஆம் ஆண்டு பத்தாவது திருத்தச் சட்டத்தின் கீழ், தற்காலிகமானது என்ற குறிப்புடன், பயங்கரவாதத் தடைச்சட்டம் (தற்காலிக ஏற்பாடுகள்) என்ற அதே பெயரில் நிரந்தர சட்டமாக்கப்பட்டு, நீடித்து நிலைத்து நிற்கின்றது.
மனித உரிமைகளையும், அடிப்படை உரிமைகளையும் மீறிய வகையில் எல்லையற்றதும், எதிர்த்துக் கேட்க முடியாத வகையிலுமான அதிகாரங்களை பொலிசாருக்கு வழங்கியுள்ள பயங்கரவாதத் தடைச்சட்டத்தை இல்லாமற் செய்ய வேண்டும் என்பதே பொதுவான கோரிக்கையாகும்.
ஆனால், அரசாங்கம் அந்தக் கோரிக்கையை ஏற்று பயங்கரவாதத் தடைச்சட்டத்தை ஒழிப்பதற்குத் தயராக இல்லை. பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்குப் பதிலாகப் புதிய சட்டம் ஒன்று கொண்டு வரப்படும் என்றே அரசாங்கம் அறிவித்துள்ளது. அந்த அறிவித்தலுக்கு ஏற்ற வகையில் புதிய சட்டத்தைக் கொண்டு வருவதற்கான நகல் வரைபு தயார் செய்யப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
இந்தப் புதிய சட்டமானது, பயங்கரவாதத் தடைச்சட்டத்திலும் பார்க்க மோசமானதாக வடிவமைக்கப்பட்டிருப்பதாகப் பலரும் சுட்டிக்காட்டியிருக்கின்றார் கள். புதிய சட்டம் நடைமுறைக்கு வருமேயானால், முன்னரிலும்பார்க்க மோசமான விளைவுகளை மக்கள் சந்திக்க நேரிடும் என்ற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
புதிய சட்டம் சிறுபான்மை இன மக்களையே அதிகம் பாதிக்கத் தக்கதாக அமைந்திருக்கும் என்று கருதப்படுவதனால், சிறுபான்மை இன மக்களின் அரசியல் கட்சிகள் இந்தச் சட்டத்திற்ஏ எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றன. பல்வேறு விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டிருக்கின்றன.
பயங்கரவாதத் தடைச்சட்டமானது, அரசாங்கத்திற்கு எதிராக ஆயுதமேந்திப் போராட்டம் நடத்திய தமிழ் இளைஞர்களைக் குறிவைத்து உருவாக்கப்பட்டது என்றும், அதற்கேற்ற வகையிலேயே அதன் நடைமுறை விதிகள் வகுக்கப்பட்டிருக்கின்றன என்ற குற்றச்சாட்டும் உள்ளது.
நாடு முழுவதற்குமான சட்டமாக இது கருதப்பட்ட போதிலும், தமிழ் மக்கள் அதிகமாக வசிக்கின்ற  வடக்கு கிழக்கு மாகாணங்களிலும், மலையகப் பிரதேசங்களிலும் மற்றம் கொழும்பு, நீர்கொழும்பு போன்ற பிரதேசங்களிலும் இந்தச் சட்டம் விசேடமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தள்ளது. நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் பயங்கர நிலைமை
பயங்கரவாதத் தடைச்சட்டமானது பயங்கரவாதத்தையும், பயங்கரவாதிகளையும் இல்லாமற் செய்வதற்காகவே கொண்டு வரப்பட்டதாகக் கூறப்படுகின்றது.
ஆயினும், இந்தச் சட்டத்தில் பயங்கரவாதம் என்றால் என்ன, பயங்கரவாதிகள் என்றால் யார் என்பதற்கான வரைவிலக்கணம் வழங்கப்படவில்லை என்று சட்ட வல்லுனர்கள் கூறுகின்றார்கள். ஆயினும் அரசாங்கத்திற்கும் பொதுமக்களுக்கும் எதிரான கிளர்ச்சிகளில் அல்லது குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களைக் கைது செய்வதற்குரிய அதிகாரத்தை இந்தச் சட்டம் பொலிசாருக்கு வரையறையற்ற வகையில் வழங்கியிருப்பதைப் பலரும் சுட்டிக்காட்டியிருக்கின்றனர்.
அது மட்டுமல்லாமல், இந்தச் சட்டத்தின் கீழ் எண்ணற்றவர்கள் – குறிப்பாக தமிழ் இளைஞர் யுவதிகள், கைக்குழந்தைகளுடனான தாய்மார்கள், முதியவர்களும்கூட மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள்.
அரசியலமைப்பின் 84 ஆவது உறுப்புரைக்கு அமைவாக, மனித உரிமைகளையும், அரசியலமைப்பில் உறுதி செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளையும் மீறும் வகையிலான இந்தச் சட்டத்தை ஜே.ஆர்.ஜயவர்தன அரசாங்கம் நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலத்தைப் பயன்படுத்தி அன்று நிறைவேற்றியது. .
அரசியலமைப்பின் 84 ஆவது உறுப்புரையானது, நம்ப முடியாதத் தன்மையைக் கொண்டிருக்கின்றது என வர்ணித்துள்ள சட்ட வல்லுனர்கள், அரசியலமைப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள நியதிகளுக்கு முரணான அம்சங்களை உள்ளடக்கிய ஒரு சட்ட வரைபையும்கூட, சட்டமாக்குவதற்கு நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலம் இருந்தால் போதும் என்று கூறுகின்றது என்பதைச் சுட்டிக்காட்டியிருக்கின்றார் கள்.
அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஏதேனும் ஒரு விதிக்கு முரணான வகையிலான அம்சங்களைக் கொண்டிருக்கின்ற ஒரு சட்;டத்தை நிறைவேற்றுவதற்கு முன்னர், அதற்குரிய சட்ட வலு, சட்ட ரீதியான நிலைப்பாடு என்பன குறித்து, கருத்தறிவதற்காக உச்ச நீதிமன்றத்தை நாட வேண்டும் என்ற சட்ட நியதி நடைமுறையில் இருந்த போதிலும், பல்வேறு பாதிப்புக்களை ஏற்படுத்த வல்ல, பயங்கரவாதத் தடைச்சட்டம் நாடாளுமன்றப் பலத்தைக் கொண்டு உருவாக்கப்பட்டது என்றும் அவர்கள் குறித்துக் காட்டியிருக்கின்றார்கள்.
ஒருவர் ஒரு குற்றத்தைச் செய்திருக்கின்றார், அல்லது அந்தக் குற்றச்செயலைச் செய்யப் போகின்றார் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் எவரையும் கைது செய்வதற்கு பொலிசாருக்கு பயங்கரவாதத் தடைச்சட்டம் அதிகாரம் வழங்கியிருக்கின்றது.
கைது செய்யப்பட்டவரை 72 மணித்தியாலங்களுக்குள் ஒரு நீதவானிடம் முன்னிலைப்படுத்த வேண்டும். அவ்வாறு முன்னிலைப்படுத்தப்படுபவரை வழக்கு முடியும் வரையில் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கான உத்தரவை பொலிசாரின் வேண்டுகோளுக்கு அமைவாக நீதவான் வழங்க வேண்டும் என்பதும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் விதிகளாகும். எனினும் விசாரணைக்காக ஒன்றரை வருட காலம் பிணையின்றி தடுத்து வைத்திருப்பதற்கும் இந்தச் சட்டம்
அனுமதியளித்திருக்கின்றது.
தடுப்புக்காவல் உத்தரவுகள் மூன்று மாதத்திற்கு ஒரு தடவை பாதுகாப்பு அமைச்சரின் அனுமதியோடு அவருடைய செயலாளரிடம் இருந்து பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டிருக்கின்றது. இந்த வகையிலேயே விசாரணைகள் முடியவில்லை என்ற காரணத்தைக் காட்டி சட்டத்திற்கு உட்பட்ட வகையிலும், சட்டத்திற்கு அமைவாகத்தான் தடுத்து வைத்திருக்கின்றார்களா என்று சந்தேகம் கொண்டு கேள்வி எழுப்புகின்ற நிலையிலும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் பலர் நீண்டகாலமாகத் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றார்கள்.
சந்தேகத்தின் பேரில் மட்டுமல்லாமல் தேடப்பட்டு வருகின்ற ஒருவரைப் பற்றிய தகவல்களைத் தெரிவிக்கவில்லை என்ற காரணத்திற்காகவும் ஒருவரைக் கைது செய்யவும், கைது செய்யப்பட்டவர்களைத் தடுத்து வைத்துள்ள காலப்பகுதியில் வேண்டிய இடங்களுக்கு வேண்டிய நேரத்தில் புலன் விசாரணை என்ற போர்வையில் கொண்டு செல்லவும், தேடுதல் நடத்தவும் பொலிசாருக்குப் பயங்கரவாதத் தடைச்சட்டம் அதிகாரம வழங்கியிருக்கின்றது.
நீதிமன்றத்தின் அனுமதியின்றி தேடுதல் நடத்த, ஒருவரைத் தடுத்து நிறுத்தி விசாரணை செய்ய, வாகன்களைத் தடுத்து நிறுத்தி தேடுதல் நடத்த என பலவகைப்பட்ட அதிகாரங்களை பயங்கராவதத் தடைச்சட்டம் பொலிசாருக்கு அள்ளி வழங்கியிருக்கின்றது.
இந்த அதிகாரங்களை, அரசாங்கத் தரப்பினரால் குறிப்பிடப்படுகின்ற பயங்கரவாதச் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துகின்றோம் என்ற போர்வையில், தமக்கு எதிராக, நியாயமான கோரிக்கைளை முன்வைத்து போராட்டம் நடத்திய மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், அரசாங்கத்தின் நடவடிக்கைகளை விமர்சனம் செய்த ஊடகவியலாளர்கள், அரசியல் செயற்பாட்டாளர்கள் என பலதரப்பட்டவர்களையும் அரசாங்கங்கள் அடக்கி ஒடுக்கியிருக்கின்றன.
இதன் மூலம் பேச்சுரிமை, எழுத்துரிமை உள்ளிட்ட ஜனநாயக முறையின் கீழான பல அடிப்படை உரிமைகளை மீறும் வகையில் பயங்கரவாதத் தடைச்சட்ட விதிகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்திருக்கின்றன. ஆட்சி மாற்றத்தின் பின்னரும் இந்த நிலைமை முழுமையாக மாற்றம் அடைந்துள்ளது என்று கூறுவதற்கில்லை என்பது மனித உரிமைச் செயற்பாட்டாளர்களின் கருத்தாகும்.
இதன் காரணமாகவே இந்தச் சட்டத்தை இல்லாதொழிக்க வேண்டும் என்று கோரிக்கையை மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் மட்டுமல்லாமல், மனித உரிமைகள் அமைப்புக்கள், ஐநா மனித உரிமைப் பேரவை உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்களும் சர்வதேச நாடுகளும் இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்தி வருகின்றன. ஐநா மனித உரிமைப் பேரவையில் இலங்கையின் அனுசரணையுடன் கடந்த வருடம் நிறைவேற்றப்பட்டுள்ள பிரேரணையிலும் பயங்கரவாதத் தடைச்சட்டம் இல்லாதொழிக்கப்பட வேண்டும் என்பது முக்கிய அம்சமாக இடம்பெற்றிருக்கின்றது.
இந்த அழுத்தத்தையடுத்தே பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்குப் பதிலாகப் புதிய சட்டம் கொண்டு வரப்படும் என்று உறுதியளித்து. அதற்கான வரைபுகளை அரசாங்கம் இப்போது தயாரித்திருக்கின்றது.
புதிய வரைபு என்ன சொல்கின்றது?
பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்குப் பதிலாகக் கொண்டு வரப்படவுள்ள புதிய சட்டமானது, மேலோட்டமான பார்வையிலேயே, பல சந்தேகங்களையும் கேள்விகளையும் எழுப்பியிருக்கின்றன என்று மனித உரிமைச் செயற்பாட்டாளர்களும், சட்ட வல்லநர்களும் கூறுகின்றனர்.
சுருக்கமாகக் குறிப்பிடுவுதாயின், புதிய சட்ட வரைபானது, தேசத்தின் மீதான அச்சுறுத்தல், தாக்குதல், தேசத்தின் ஐக்கியம், ஆட்புல ஒருமைப்பாடு பாதுகாப்பு அல்லது அதன் இறைமை என்பவற்றை மாற்றுதல் அல்லது அதற்கு எதிராகச் செயற்படுதல் மட்டுமல்லாமல், எந்தவொரு இறைமையுள்ள தேசத்;திற்கும் எதிராகச் செயற்படுதல் என்பவற்றை முக்கிய குறிக்கோள்களாகக் கொண்டிருக்கின்றது.
தேசிய கொள்கையை பின்நோக்கச் செய்ய அல்லது மாற்றியமைப்பதற்கு அரசாங்கத்தை அல்லது இறைமையுள்ள ஓர் அரசாங்கத்தை சக்திமிக்கவகையில் நிர்ப்பந்திப்பதும்  தடைசெய்யப்பட்ட நடவடிக்கையாகக் குறிப்பிடப்பட்டிருப்பதை கவலைக்குரிய ஒரு விடயமாக விடயமறிந்தவர்கள் குறிப்பிட்டிருக்கின்றனர்.
அரசாங்கக் கொள்கைகளை மறுசீரமைப்பதற்காகச் செய்யப்படுகின்ற பிரசாரங்கள் அல்லது விழிப்புணர்வுச் செயற்பாடுகள் இதன் மூலம் தடை செய்யப்படுகின்றது. அது சட்டத்திற்கு மாறானது. சட்டத்திற்கு விரோதமானது என குறிப்பிடப்பட்டிருப்பது குழப்பகரமாகவும், அதேவேளை கவலையளிப்பதாகவும் உள்ளது என அவர்கள் சுட்டிக்காட்டியிருக்கின்றார் கள்.
அரசியல் கொள்கை ரீதியில் அரசாங்கத்தில் மாற்றங்களைக் கொண்டு வருவதற்காக வன்முறை சார்ந்த தீவிரத்தன்மை கொண்ட செயற்பாடுகளை முன்னெடுப்பதும் குற்றச் செயலாகக் குறிப்பிடப்பட்டிருப்பது பலருக்கும் சிந்தனைக்கும் அதேவேளை, வியப்புக்கும் உரியதாக்கியுள்ளது.
 ‘அரசியல் கொள்கை ரீதியில் அரசாங்கத்தில் மாற்றம்’ என்ற சொற்தொடர் பயன்படுத்தப்பட்டிருப்பதற்கு முக்கிய உள்நோக்கம் இருக்க வேண்டும். இதன் நடைமுறை ஜனநாயக உரிமைகளைப் பாதிக்கத்தக்கதாக அமைந்துவிடுமோ என்ற அச்சம் அவர்களிடம் ஏற்படுத்தியிருப்பதாகவே கருத முடிகின்றது.
பயங்கரவாதத் தடைச்சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள – பயங்கரவாதத்துடன் நேரடியாகத் தொடர்புடைய செயற்பாடுகளுக்கு அப்பால், பயங்கரவாதத்துடன் சார்ந்ததாகக் கருதப்படுகின்ற உளவுபார்த்தல் உள்ளிட்டசெயற்பாடுகளும் குற்றச்செயல்களாகக் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. உளவுபார்த்தல் என்பது அதன் சாதாரண தோற்றத்தில் உள்ள கருத்தமைவைக் கடந்து, அந்தச்  செயற்பாட்டைக் குறிக்கின்ற பதத்தின் விரிந்த பரப்பானது கவலைக்குரியதாகக் கருதப்படுகின்றது.
‘இரகசியத் தகவல்களைத் திரட்டுதலும் வழங்குதலும்’ குற்றச் செயலாகக் குறிப்பிடப்பட்டிருப்பது குழப்பமான சொற்தொடராக நோக்கப்படுகின்றது. இரகசியத் தகவல்கள் என்பது பரந்துபட்ட பொருளைக் கொண்டிருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது என இந்த வரைபை முழுமையாக அறிந்தவர்கள் குறிப்பிட்டிருக்கின்றனர். இது பல மட்டங்களில் பல பிரச்சினைகளை உருவாக்கவல்லது என அவர்கள் கூறுகின்றனர்.
வெளிப்படைத் தன்மை வலியுறுத்தப்படுகின்ற காலகட்டத்தில், தகவல் அறிகின்ற உரிமைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ள சூழலில் பரந்து விரிந்த பொருள்கோடலைக் கொள்ளத்தக்க  இத்தகைய ஒரு சொற்தொடரின் மூலம் ஒரு குற்றச் செயல் பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்குப் பதிலான சட்டம் ஒன்றில் குறிப்பிடப்பட்டிருப்பது இனந்தெரியாத அச்சத்தை ஏற்படுத்தியிருக்கின்றது என அவர்கள் சுட்டிக்காட்டியிருக்கின்றனர்.
புதிய சட்ட வரைபில் குற்றச் செயல்கள் தொடர்பில் தேடுதல் நடத்துவது, சோதனைகள் நடத்துவது, உள்ளிட்டச் செயற்பாடுகளும், குற்றச் செயல்களுக்கான தண்டனைகளாக ஆயட்காலச் சிறைத் தண்டனை, சிறைத் தண்டனை, சொத்துக்கள் பறிமுதல் உள்ளிட்ட பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் நியதிகளும் மாற்றமின்றி நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருப்பது பது மொந்தையில் பழைய கள் என்ற நிலைமையையே காட்டுகின்றது.
பயங்கரவாதத் தடைச்சட்டத்தினால், தமிழ் மக்களே பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள் என்பதில் எந்தவிதமான சந்தேகமுமில்லை. தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்கான போராட்டங்கள் வீறுகொண்ட நிலைமை காரணமாகவே பயங்கரவாதத் தடைச்சட்டம் உருவாக்கப்பட்டது என்பதும் பகிரங்கமான விடயமாகும்.
கடந்த 1983 ஆம் ஆண்டு தமிழ் மக்களுக்கு எதிரான வன்முறைகள் கொழும்பிலும் யாழ்ப்பாணம் மலையகம் உள்ளிட்ட நாட்டின் பல இடங்களிலும் அரச பயங்கரவாதமாக முன்னெடுக்கப்பட்டிருந்ததை எவரும் இலகுவில் மறக்க முடியாது. இரு முனைகளிலானதோர் இன அழிப்பு நடவடிக்கையாகவே அந்த கறுப்பு ஜுலை வன்முறைகள் தமிழர்களுக்கு எதிராகக் கட்டவிழ்ந்துவிடப்பட்டிருந்தன.
உயிரழிப்பு மற்றும் உடைமையழிப்பு என்று தமிழ் மக்களைக் கொன்றொழிப்பதற்காகவும் குறிப்பாக தமிழ் மக்களின் பொருளாதாரத்தை முழுமையாக அழிப்பதற்காகவுமே தமிழ் மக்கள் மீதான அந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.
நாட்டின் முதலாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகிய ஜே.ஆர்.ஜயவர்தனவின் ஆட்சிக்காலத்திலேயே இது இடம்பெற்றிருந்தது.
 பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் பகுதி 1 குற்றங்கள் என்ற தலைப்பின் கீழ் 2 (1) எச் என்ற விதிமுறையில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றச்செயல்கள் மிக மோசமான முறையில் இந்த கறுப்பு ஜுலை வன்முறைகளின் போது தமிழ் மக்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்துவிடப்பட்டிருந்தன.
இனக்குழுமங்களிடையில் அல்லது மதம் சார்ந்த குழுமங்களிடையில் மோதல்கள் ஏற்படத்தக்க வகையிலான செயற்பாடுகளை முன்னெடுத்தல், பேசுதல், பிரசாரங்களைச் செய்தல், அடையாளங்களை பகிரங்கமாக வைத்தல், வன்முறைகளில் ஈடுபடுதல் என்பன பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் இந்தப் பிரிவின் கீழ் குற்றச் செயலாகப் பிரகடனப்படுத்தப்பட்டிருக்கின் றது.
இந்தச் சட்டத்தைக் கொண்டுவந்த அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தனவின் முன்னிலையிலேயே சிங்களக் குண்டவர்களினால் வகைதொகையின்றி தமிழர்கள் தாக்கப்பட்டார்கள். ஆனால் இந்தச் சட்டத்தின் கீழ் பகிரங்கமாகக் குற்றம் செய்தவர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை. அவர்கள் சட்டத்தின் முன்னால் நிறுத்தப்படவுமில்லை. மாறாக தமிழர்களை நோக்கி அவர்கள் பாதிப்படைந்திருந்த நிலையில் சமாதானம் என்றால் சமாதானம், போர் என்றால் போர் என்று அவர் அகம்பாவத்துடன் கருத்து வெளியிட்டிருந்தார்.
அவரைத் தொடர்ந்து ஆட்சிக்கு வநதவர்களும்கூட, பயங்காவாதத் தடைச்சட்டத்தைப் பயன்படுத்தி தமிழ் மக்களுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுத்தார்களேயொழிய கடும்போக்காளர்களான சிங்கள பௌத்த தீவிரவாதிகள் மத ரீதியான, இன ரீதியான வன்முறைகளைத் தூண்டத்தக்க வகையில் பிரசாரங்களை முன்னெடுத்த போதும், உணர்;ச்சி ததும்பிய உரைகளை ஆற்றிய போதும் பயங்கரவாதத் தடைச்சட்டம் அவர்கள் மீது பாயவில்லை.
சட்டம் என்பது பொதுவானதாக இருந்தாலும் பயங்கரவாதத் தடைச்சட்டம் தமிழ் மக்களை நோக்கியே தனது வலிமையான கரங்களை நீட்டி அவர்களை நசுக்கியது. துன்புறுத்தியது. இதன் காரணமாகத்தான் அந்தச் சட்டத்தை இல்லாமற் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. வலியுறுத்தப்பட்டது.
ஆயினும் அந்தச் சட்டத்திற்குப் பதிலாக இன்னும் மோசமான பல மறைமுகமான சட்ட அதிகாரங்களைக் கொண்ட புதிய சட்டத்தைக் கொண்டு வருவதென்பது போருக்குப் பின்னரான காலப்பகுதியில் இன நல்லிண்ககத்தை, தேசிய ஐக்கியத்தை உருவாக்க ஒருபோதும் உதவப் போவதில்லை.

Spread the love
 
 
      

Related News

1 comment

Eliathamby Logeswaran October 22, 2016 - 8:58 pm

புதிய மற்றும் பழைய பயங்கரவாதத் தடைச்சட்டங்களை இல்லாமற் செய்ய என்ன செய்ய வேண்டும் என்று செல்வரட்னம் சிறிதரனால் சொல்ல முடியுமா?

Reply

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More