குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இலங்கை போக்குவரத்து சபை பேருந்து சாரதி தாக்கப்பட்டமையை கண்டித்தும் , வவுனியா மாவட்ட பேருந்து தரிப்பிடத்தை தமக்கு வழங்க கோரியும், இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் வடமாகாணம் தழுவிய போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
குறித்த போராட்டத்திற்கு ஆதரவு வழங்கும் முகமாக இன்றைய தினம் யாழ்.மாவட்டத்தை சேர்ந்த இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் பணிப்பகிஸ்கரிப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.
வவுனியாவில் அண்மையில் திறந்து வைக்கப்பட்ட பேருந்து நிலையத்தில் பேருந்துக்களை நிறுத்துவதில் தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சபை சாரதிகள் நடத்துனர்கள் இடையில் முறுகல் நிலை தொடர்ந்து காணப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் நேற்றைய தினம் புதன் கிழமை முல்லைத்தீவு சாலையில் சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து சபை பேருந்து சாரதி மீது வவுனியாவில் வைத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
குறித்த தாக்குதல் சம்பவத்தை கண்டித்தும், தாக்குதலாளிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் , அத்துடன் புதிதாக திறக்கப்பட்ட பேருந்து நிலையத்தை இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து நிலையமாக மாற்ற வேண்டும் எனவும் கோரிக்கையை முன் வைத்தே இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.