ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் இன்று கிண்ணியா தள மருத்துவமனைக்கு சென்று நிலைமைகளை ஆராய்ந்துள்ளாh. மருத்துவமனையின் குறைபாடுகள் தொடர்பாக விசாரித்த ஜனாதிபதி மருத்துவமனையின் பணிக்குழுவினருடன் சினேகபூர்வ உரையாடலில் ஈடுபட்டதுடன் அவர்களது தங்குமிட வசதிகள் உள்ளிட்ட பொதுப்பிரச்சினைகள் தொடர்பாகவும் கேட்டறிந்தார் என ஜனாதிபதி செயலக ஊடககுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
அதன்பின்னர் டெங்கு நோயாளர்களுக்கு சிகிச்சையளிக்கப்படும் வார்ட்டுத் தொகுதியைப் பார்வையிட்ட ஜனாதிபதி அங்குள்ள நோயாளர்களுக்கான வசதிகளை அவதானித்ததுடன் கிழக்கு மாகாணத்தில் துரிதமாகப் பரவிவரும் டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதற்காக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் பற்றியும் கேட்டறிந்துள்ளார்.
அத்துடன் கிண்ணியா தள மருத்துவமனையை நவீனமயப்படுத்தி மேலதிக வசதிகளை ஏற்படுத்தித்தருமாறு பிரதேசவாசிகளால் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளும் இடத்துக்கு சென்ற ஜனாதிபதி மருத்துவமனையை வெகு விரைவில் நவீனமயப்படுத்தித் தருவதாக மக்களுக்கு உறுதியளித்தார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது