முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளனை பரோலில் விட சட்டத்தில் எந்த தடையும் இல்லை என முதலமைச்சருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
பேரறிவாளன் உள்ளிட்டவர்கள் கடந்த 25 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் பேரறிவாளனை சிறையில் இருந்து பரோலில் விடுவிக்குமாறு அவரது தாய் அற்புதம்மாள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார். அண்மையில் இந்த விவகாரம் தொடர்பாக தமிழக சட்டப்பேரவையிலும் இது வலியுறுத்தப்பட்டது.
இந்நிலையில், நேற்றையதினம் செய்தியாளர்களை சந்தித்த சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் பேரறிவாளனை பரோலில் விடுவிப்பது தொடர்பாக சட்டத்துறையின் கருத்தை கேட்டு அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி அறிவித்திருந்தார் எனவும் பேரறிவாளனை பரோலில் விடுவிக்க சட்டத்தில் எந்த தடையும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் விடுதலை செய்வதற்கான நடவடிக்கையை எடுக்கலாமென என்று சட்டத்துறை சார்பில் பரிந்துரைத்துள்ளதாகவும் இந்த கோப்புகளின் அடிப்படையில் முதலமைச்சர் நல்ல முடிவு எடுப்பார் என்று எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.