கதைசொல்லும் கலை உலகப் பண்பாட்டிற்குரியது. இதன் வரலாறுதொன்மையானது. தமிழ் பண்பாட்டிலும் கதை சொல்லிகள் பற்றிய கதைக்கு நீண்ட வரலாறு உண்டு,கதை சொல்லிகள் பற்றிப் பலகதைகளும் உண்டு.
ஆயினும் எமதுகாலத்தில் நாம் கண்ட,கேட்ட கதை சொல்லிக் கலை வல்லமையாக மாஸ்ரர் இ. சிவலிங்கம் காணப்படுகின்றார்.
ஓவ்வொருகிராமங்களிலும்,ஓவ்வொரு வீடுகளிலும், அற்புதமான கதை சொல்லிகள் பாட்டா, பாட்டி உருவில் வாழ்ந்திருக்கிறார்கள், வாழ்ந்தும் வருகிறார்கள்.
கதை சொல்லிகளின் சமகால முக்கியத்துவத்தை உணர்ந்தும் உணர்த்தும் வகையிலும் கதைத் திருவிழாக்கள் மூன்றாவது கண் உள்ளுர் அறிவுதிறன் செயற்பாடுகளுக்கான நண்பர்கள் குழுவினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
கிழக்குப்பல்கலைகழக நுண்கலைத்துறை மற்றும் சுவாமிவிபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்திலும் கதை சொல்லிகள் பற்றிய பங்கு கொள்செயல் மையஆய்வுகள் முன்னெடுக்கபட்டு வருகின்றன. இவற்றில் எல்லாம் கிராமங்களில் வாழும் மூத்தோர்கள், இளையோர்கள், சிறுவர்கள் தம் கலைஆற்றல்கள் தோன்றித் துலங்கி இருக்கின்றன.
அன்றாடம் இன்றும் வீடுகளில் கதைசொல்லிகள் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். சிறுவர்களின் கற்பனை உலகத்தையும்,சிந்தனை உலகத்தையும் தீர்மானித்து கொண்டுதான் இருக்கிறார்கள்.
இந்த பின்னனியில்தான் கதை சொல்லுதலை ஆர்வத்திற்குரிய கலைவாழ்வாக வரித்துக் கொண்ட கலை ஆளுமை மாஸ்ரர் இ.சிவலிங்கம் பற்றிப் பேசவேண்டி இருக்கின்றது.
வானொலிமாமா என்று பிரபலமாகப் பேசப்படும் மாஸ்ரர் இ.சிவலிங்கம் அவர்கள் வாய்மொழி மூலமாகவும், எழுத்து மூலமாகவும் சிறுவர் கதை கூறுதலை ஓயாது முன்னெடுத்து வந்துகொண்டிருக்கும் கலைஆளுமை.
தொன்மை மரபான தொழில்முறை கதை சொல்லிகள் பற்றிய கற்பனைகளுக்கும்,சிந்தனைகளுக்கும் உயிரான உருவம் தந்து கொண்டிருக்கும் ஒற்றைப் பிரதிநிதியாக வாழ்ந்து கொண்டிருக்கும் மாஸ்ரர் இ.சிவலிங்கம் அவர்களின் கலைப்பணியும் பயணமும் அறிந்து கொள்ளப்படவேண்டியது, ஆராயப்பட வேண்டியது.
கதைசொல்லும் கலை வாழ்வைஅவர் தேர்ந்தெடுத்து கொள்வதற்கும் அதில் ஓயாது பயணிப்பதற்குமான உள்ளார்ந்தசக்தியாக இருந்ததும், இருப்பதும் எது?
பொருளாதார ரீதியாகவும், சமூகரீதியாகவும் பெறுமதியை கொண்டுவராத இப்பயணம் சவால்களையும்,சங்கடங்களையும் கடந்து சமூகரீதியான பெறுமதியை பெற்றுக் கொள்ளும் வகை செய்தது எங்ஙனம் சாத்தியமாயிற்று என்பவை புரிந்து கொள்ளலுக்கு உரியவை.
சிறுவர்களின் நாயகமும் நட்சத்திரமுமாகத் திகழ்ந்து நடமாடும் கதை சொல்லியாக வாழ்க்கையை வரித்து கொண்ட மாஸ்ரர் இ.சிவலிங்கத்தை பெரியோர் உலகம் எப்படி பார்த்துப் புரிந்து கொள்ள முனைந்திருக்கின்றது என்பதும் சிறுவர்களாக கதை கேட்டு வளர்ந்து பெரியவர்களாக வளர்ந்திருக்கும் என்னைப் போன்றவர்கள் மாஸ்ரர் இ.சிவலிங்கம் – வானொலிமாமா என்ற கலைஆளுமையை எந்தவகையில் நினைவில் வைத்துக் கொண்டிருக்கின்றோம் என்பதும் சிந்திக்கப்படவேண்டியது.
என்னைப் போன்ற தலைமுறையினருக்கு கிடைத்திருக்கும் அற்புதஅனுபவம் இன்றைய தலைமுறையினருக்கு எந்தவகையில் கிடைக்கின்றன? மாஸ்ரர் இ.சிவலிங்கம் போன்றகலைஆளுமைகளின் வரவு இன்று தேவையாகி இருக்கிறதா அல்லது அற்றுப் போய்விட்டதா என்பது எம்முன் கிளர்ந்திருக்கும் பதிலளிக்கப்பட வேண்டிய விடயமாகும்.
எங்களது குழந்தைகள் யாருடைய கதைகளை, எந்தவகையிலான கதைகளைக் கேட்டுவளர்கிறார்கள்? எங்களது குழந்தைகளுக்கான கதைகளையார் உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள், எந்த நோக்கங்களுடன் உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்?
எங்களது குழந்தைகள் கதைகள் எதையும் கேளாதவர்களாகவும் கேட்க முடியாதவர்களாகவும் புலமைப் பரிசில் பயிற்சிப் புத்தகங்களாலும்,போட்டிப் பரீட்சை வினாத்தாள்களாலும் இவற்றிற்கான கொடூர அல்லது குரூரப்பயிற்சிகளாலும் வதைக்கப்பட்டவர்களாக வாழ நிர்ப்பந்திககப்படுவதன் சமூகப் பெருமையின் உள் நின்றியங்கும் பயங்கரவாதத்தின் அர்த்தம் எதுவாக இருக்கிறது?
நம்பிக்கையுடன் கூடியதொரு சமூக நடவடிக்கையான மிருகப்பலியிடுதலைக் குற்றமாகவும், நாகரிகமற்றதாகவும், மிருகத்தனமாகவும், மிலேச்சத்தனமாகவும் கதைபுனையும் புனிதத்துக்கானகுரல்கள் சிறுவர்களின் ஆன்மபலியிடுதலைக் கொண்டாடுவதன் சமூகஉளவியல் பொதுவெளியில் ஆழமாகஉரையாடப்படவேண்டியது.
அப்பொழுதுதான் மாஸ்ரர் இ.சிவலிங்கம் அவர்களை அடையாளமாகக் கொண்டு புதியதலைமுறைக் கதை சொல்லிகளின் உருவாக்கத்தின் அவசியத்தை உணர்ந்து கொள்ள முடியும். தான்தோன்றிக் கலை வல்லமையான மாஸ்ரர் இ.சிவலிங்கம் அவர்களின் அனுபங்களை மதிப்பீடு,மீள் மதிப்பீடுசெய்வதன் வாயிலாக புதியதலைமுறைக் கதைசொல்லிகளின் உருவாக்கத்தை முன்னெடுப்பது பொருத்தமாக இருக்கும்.
மாஸ்ரர் இ.சிவலிங்கம் அவர்களின் கதைசொல்லும் கலைப் பயணத்தை முன்னிறுத்தி, இது எவ்வாறு நிகழ்ந்தது என்று சிந்திப்பது மிகவும் முக்கியமானது.
ஏனெனில், கலைநிறுவனங்கள் அமைத்து போட்டிப் பரீட்சைகளும், நேர்முகங்களும் வைத்துத் தெரிவு செய்து பயிற்றுவிப்பதன் மூலமாக இத்தகைய ஆற்றல்களையும் ஆளுமைகளையும் உருவாக்குவது கேள்விக்குரியதாகவே இருக்கிறது.
ஆற்றலும், ஆளுமையும், அக்கறையும், ஆர்வமும், விருப்பும் தன்னகத்தே கொண்டிராது விடின் எதையுமே படைக்க முடியாது. இவை அனைத்தையும் பெற்ற ஒரு மாஸ்ரர் இ.சிவலிங்கம் போன்றவர்கள் சந்தர்ப்பங்களும் வாய்ப்புக்களும் பொருந்தி வரும் பொழுதுகலை ஆளுமைகளாக மேற் கிளம்புகிறார்கள். சந்தர்ப்பங்களும் வாய்ப்புக்களுங் கூட தேடலுக்கும் உலைச்சலுக்கும் ஊடாகத்தான் சாத்தியமாகின்றன.
தன்னகத்தே ஆற்றலும் ஆர்வமும் கொண்ட இளம் ஆளுமைகள் உலைச்சல்களுக்கு ஆளாகாது வளரும் கலைகளுக்கான கல்வி நிறுவங்கள் வடிவம் பெற்றிருக்க வேண்டும்.தேடலும் தெரிவும் இத்தகைய ஆளுமைகளை இலக்காகக் கொண்டு வடிவமைக்கும் பொழுதுதான் கலைஆளுமைகளும் கலை நிறுவனங்களும் உருப்பெறுவது சாத்தியமாகும்.
மாஸ்ரர் இ.சிவலிங்கம் என்ற கதைசொல்லியான கலை ஆளுமையை முன்னிறுத்தி அவரது ஆற்றல் வளர்ச்சியையும் அனுபவத் திரட்சியையும் மதிப்பிட்டுப் புரிந்து கொள்வது அவசியமானது. ஏனெனில் கலை ஆளுமைகளின் உருவாக்கங்களில் அவர்கள் கொண்டிருக்கும் கருத்துநிலையும் முக்கிய கவனத்திற்குரியதாகக் கொள்ளப்படவேண்டும்.
இது தலைமுறைகளின் சிந்தனைத் திறத்தையும் விமரிசன நோக்கையும் வடிவமைப்பதில் முக்கியமான செல்வாக்கைச் செலுத்துகின்றது.
இந்த வகையில் மாஸ்ரர் இ.சிவலிங்கம் அவர்களின் கலை வல்லமையை மதிப்பீடு செய்யும் பொழுது, மாண்பு செய்யும் பொழுது அவரது கலைவல்லமை உட்கொண்டிருக்கும் கருத்துநிலை பற்றிய மதிப்பீடும் அவசியமானது.
ஏனெனில் கலைஆற்றலும் கருத்துநிலையும் வேறுவேறானவை அல்ல. கருத்துநிலையும் கலையாற்றலும் உள்ளும் உறையும் அல்ல. ஒன்றினுள்ளொன்று உள்ளுறைந்து நிற்பவை. ஓன்றை ஒன்று தீர்மானிப்பவை.
எனவே புதியகதை சொல்லிகளின் உருவாக்கத்திற்கான முன்னெடுப்பில் நீண்டகதை சொல்லிகளின் பாரம்பரியம் கொண்டதான கற்பனைகளுக்கும் கனவுகளுக்கும் உயிர்வடிவ மாதிரியாக விகசித்திருக்கும் ஆளுமையின் கதை சொல்லும் கலைவாண்மையும் சொல்லும் கருத்துநிலையும் பற்றி சிந்திப்பதற்கும், மதிப்பிடுவதற்கும் வரலாற்று பெருந்தெருவில் நவீன காலசந்திப்பின் மனிதஆளுமையான மாஸ்ரர் இரா. சிவலிங்கம் அவர்கள் படிப்பினையாக அமைவதன் காரணமாக மிகப்பெரும் மதிப்பிற்கும் மாண்பிற்கும் உரியவராகின்றார்.
தொன்மைக் கலையாம் கதை சொல்லும் கலையை வீட்டின், முற்றத்தின் வெளிகள் கடந்து பெரும் சமூகவெளிக்குள் கொண்டுவந்த ஆளுமை போற்றுதலுக்கு மட்டுமல்ல கற்றலுக்குமுரியவர்.
மாஸ்ரர் இ.சிவலிங்கம் அவர்களிடம் கதைகேட்டு வளர்ந்தவர்களின் காதுகளில் அவர் குரல் இருக்கும். அவர் சொல்லும் கதைகண்டு மகிழ்ந்தவர்களின் கண்களில் அவர் காட்சி இருக்கும்.
கதைசொல்லுதல் அற்புதமானகலை. கதைசொல்லிகள் அற்புதமான ஆளுமைகள். கதைசொல்லிகளிடம் கதைகளைக்கேட்டல் அற்புதமானஅனுபவம்.
கலாநிதிசி.ஜெயசங்கர்
1 comment
I am 70+. Master Sivalingam was the only man who made the people of all ages laugh.There is no one to replace his place. His humorous and hilarious stories and jokes imprinted in the minds of all his fans.
Master Sivalingam’s participation in any event surged more crowd because they all wanted to laugh.Making others laugh is a very rare gift given by God. He slightly resembles George.Bernard Show.