தென்பகுதி அரசியல் கட்சிகளை பொறுத்தவரை தமக்கிடையேயான முரண்பாடுகள், போட்டிகள், மற்றும் இந்தியா, சீனா போன்ற நாடுகளின் ஆதிக்க பிரச்சினைகள் எல்லாவற்றையும் தமது பிரதான அரசியல் விவகாரமாக மாற்றி வடக்கு கிழக்கு பிரச்சினையை வேறு திசைக்கு கொண்டு செல்வதில் ஒருமித்த கருத்தடன் செயற்படுகின்றன. அ.நிக்ஸன்-
நல்லாட்சி அரசாங்கத்திற்குள் இருக்கும் முரண்பாடுகள், ஊழல் மோசடிகள், மற்றும் இந்தியா, சீனா ஆதிக்க போட்டிகள் போன்ற சிக்கலான நிலைமைகள் நீடித்து வரும் நிலையில் இனப்பிரச்சினை தீர்வின் முக்கியத்துவம் குறைக்கப்பட்டு வேறு அரசியல் நோக்கி செல்லும் சூழல் தற்போது காணப்படுகின்றது. 2009ஆம் ஆண்டு மே மாதத்தின் பின்னர் இனப்பிரச்சினை விவகாரம் உள்நாட்டு விடயம் என்ற தொணியில் மஹிந்த ராஜபகச அரசாங்கம் பேசியதை நல்லாட்சியும் தொடர்ந்து செய்கின்றது.
ஏற்றுக்கொள்ளும் நிலைமை
ஆனாலும் தற்போது ஏற்பட்டுள்ள புதிய அரசியல் பாதை இனப்பிரச்சினையின் வரலாற்றை மாற்றி இலங்கையை இந்திய சீனா உள்ளிட்ட மேற்குலகநாடுகளின் போட்டிக் களமாக்கியுள்ளது. விரும்பியோ விரும்பாமலோ ஏனைய சிங்கள அரசியல் கட்சிகளும் இந்த புதிய சூழலுக்குள் தள்ளப்பட்டுள்ளனர். அத்துடன் இனப்பிரச்சினை விவகாரத்தை பேசுபொருளாகக்கூட இல்லாமல் செய்வதில் ஐக்கியதேசிய கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் திட்டமிட்டு மேற்கொண்ட ஏற்பாடுகளை அந்த சிங்கள கட்சிகளும் மனதளவில் விரும்புகின்றன.
2009ஆம் ஆண்டு போர் அழிக்கப்பட்ட பின்னர் செய்ய வேண்டிய முதல் வேலையாக மீள்குடியேற்றம் மக்களின் இயல்பு வாழக்கையை ஏற்படுத்துதல் போன்ற யுத்தத்தின் பக்கவிளைவுகளுக்கு தீர்வுகாணும் பல திட்டங்கள் காணப்பட்டன. சர்வதேச சமூகமும் அதற்கு முன்னுரிமை கொடுக்குமாறு வலியுத்தி வந்தது. அத்துடன் நிரந்த அரசியல் தீர்வை முன்வைக்க வேண்டிய முழுப் பொறுப்பும் அரசாங்கத்துக்குரியது என ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சர்வதேச பொது அமைப்புகளும் வலியுறுத்தி வந்தன.
நல்லாட்சியின் தந்திரம்
எனினும் கடந்த எட்டு ஆண்டுகளில் யுத்தத்தின் பக்க விளைவுகளுக்குக் கூட உரிய முறையில் தீர்வுகள் முன்வைக்கப்படவில்லை. அவ்வாறு சில வேலைத் திட்டங்களை செய்தாலும் கூட அவற்றையும் தமது அரசியல் தேவைக்காக பயன்படுத்துகின்ற அல்லது இதுதூன் தமிழ் மக்கள் கேட்ட அரசியல் உரிமை என்பதுபோல பிரச்சாரம் செய்யப்படும் நிலையைத்தான் காணமுடிந்தது. ஆனாலும் தற்போது உட்கட்சி மோதல் இந்தியாவுடனா, சீனாவுடனா உறவை பேணுவது என்ற சர்ச்சைகள் இலங்கை குறித்த சர்வதேசத்தின் பார்வையை மாற்றியமைத்துள்ளன.
மைத்திரி ரணில் நல்லாட்சியின் பின்னர் இரண்டு விடயங்களை அவதானிக்க முடிந்தது. ஓன்று- நிரந்த அரசியல் தீர்வின் முக்கியத்துவத்தை குறைத்து அரசியலமைப்பு திருத்தம் என்ற போர்வைக்குள் நிர்வாக முறையிலான சில அதிகாரங்களை மாகாணங்களுக்கு அல்லது பிராந்தியங்களுக்கு வழங்குதல்- இரண்டாவது ஜெனீவா மனித உரிமைச் சபையின் போர்க்குற்ற விசாரணைகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான சர்வதேச விசாரணையை இல்லாமல் செய்தல் அல்லது உள்ளுர் விசாரணை என்று கூறி காலத்தை இழுத்தடித்தல்- இந்த இரு விடயங்களிலும் நல்லாட்சி அரசாங்கம் தீவி;ரமாக ஈடுபட்டு வருகின்றது. அத்துடன் குறிப்பிட்டளவு இந்த இரு திட்டங்களையும் தமக்குச் சாதமாக நல்லாட்சி அரசாங்கம் நிறைவேற்றியும் உள்ளது.
காலதாமதத்திற்கு பிரதான காரணம்
மேற்படி இரு திட்டங்களையும் நிறைவேற்ற திசைதிருப்பும் அரசியல் வேலைத் திட்டங்களில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தீவிரமாகவே ஈடுபட்டுமுள்ளார். குறிப்பாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை மையப்படுத்திய கூட்டு எதிர்க்கட்சியின் எதிர்ப்புகளை தமக்குச் சாதகமாக ரணில் பயன்படுத்தியுள்ளார். தற்போது மத்திய வங்கியின் பிணை முறி விவகாரம் மற்றும் புதிய அரசியலமைப்புக்கு எதிரான கருத்துக்கள் போன்றவற்றை பயன்படுத்தியும் காலதாமதம் ஏற்படுத்தப்படுகின்றது.
சீனாவுடனான அம்பாந்தோட்டை துறைமுக உட்படிக்கை, மத்தல விமான நிலையத்தை இந்தியாவுடன் சேர்ந்து கூட்டு அபிவிருத்தி செய்வதற்கான ஒப்பந்தம் ஆகியவற்றுக்கான எதிர்ப்புக்கள் போன்றவற்றையும் சாதகமாக பயன்படுத்தி இனப்பிரச்சினை தீர்வின் முக்கியத்துவம் குறைக்கப்படுகின்றது. ஆகவே இந்த அரசியல் அணுகுமுறை என்பது இரண்டு விடயங்களில் நல்லாட்சி அரசாங்கத்துக்கு சாதகமாக அமைகின்றது. ஒன்று தமது அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தை நீடிப்பதற்கு உதவுகின்றது. இரண்டாவது சிங்கள மக்கள் மத்தியிலும் மறுபுறத்தில் பௌத்த குருமாரிடமும் நற்பெயரை பெற அது வாய்ப்பாக அமைகின்றது.
பிணை முறி விவகாரம்
பிணை முறி விகாரத்தில் பிரதான இரு கட்சிகளும் முரண்பட்டாலும் நல்லாட்சியை குறைந்தது 2020 ஆம் ஆண்டு வரை கொண்டு செல்லவேண்டிய தேவை உள்ளது. அந்த அடிப்படையில் முரண்பாட்டில் ஓர் உடன்பாடாக இருதரப்பும் இணக்க அரசியல் நடத்தி அதன் மூலம் இனப்பிரச்சினை தீர்வின் முக்கியத்துவத்தையும் இல்லாமல் செய்யும் வேலைத் திட்டங்களில் இந்த கட்சிகளும் செயற்படுகின்றன. இந்த விடயத்தில் ஜே.வி.பி போன்ற கட்சிகளும் கூட்டு எதிர்க்கட்சியும் ஒருவகையான ஆதரவை கொடுக்கும் நிலைமை உண்டு.
ஒட்டுமொத்தமாக தென்பகுதி அரசியல் கட்சிகளை பொறுத்தவரை தமக்கிடையேயான முரண்பாடுகள், போட்டிகள், மற்றும் இந்தியா, சீனா போன்ற நாடுகளின் ஆதிக்க பிரச்சினைகள் எல்லாவற்றையும் தமது பிரதான அரசியல் விவகாரமாக மாற்றி வடக்கு கிழக்கு பிரச்சினையை வேறு திசைக்கு கொண்டு செல்வது என்பதில் ஒருமித்த கருத்தடன் செயற்படுகின்றனர். இவ்வாறான ஒருமித்த கருத்து என்பது 2009ஆம் ஆண்டு மே மாதத்தின் பின்னரான அரசியல் சூழலில் உருவாகினாலும் மைத்திரி, ரணில் நல்லாட்சியில்தான் அந்த சூழல்நிலை உறுதியாகமாற்றப்பட்டது.
தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் முரண்பாடு
அதற்கு ஏதுவாக தமிழரசுக் கட்சி உள்ளிட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பிலும் முரண்பாடுகள் உருவாக்கப்பட்டு அவர்களிடையே கூட ஒற்றுமையில்லாத நிலைமை ஏற்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழரசுக் கடசி நல்லாட்சி அரசாங்கத்துக்கு நேரடியான ஆதரவு வழங்குவதன் மூலமாகவும் அரசாங்கத்தின் சில பாதுகாப்பு மற்றும் வசதிகளுடன் செயற்பட்டு வருவதாலும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு என்ற கட்டமைப்பை உடைக்கும் கொழும்பின் திட்டம் வெற்றியளித்துள்ளது எனலாம். அதேவேளை வடமாகாண சபையை குழப்பி அங்கும் முரண்பாடுகள் உருவாக்கப்பட்டு உட்கட்சி பிரச்சினைகள் தோற்றுவிக்கப்ப்பட்டுள்ளன. தற்போது இந்த முரண்பாடுகள் குழப்பங்களை தீர்க்கும் முயற்சியில் அல்லது தமிழரசுக் கடசி முற்றுமுழுதாக பிரிந்து செல்லும் ஏற்பாடுகள் போன்றவற்றில் முழுக்கவனமும் செலுத்தப்படுவதால் பிரதான அரசியல் கோரிக்கைகளை கைவிடும் நிலை ஏற்பட்டுள்ளது.
வடக்கு கிழக்கில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் தற்போது இடம்பெறும் வாள்வெட்டுச் சம்பவங்கள், ஊர்ச் சண்டியர்களின் வன்முறைகள் போன்றவற்றையும் பயன்படுத்தி மக்களின் மன உணர்வுகளின் அச்சம் அல்லது வேண்டாம் எங்களை விட்டால் போதும் என்ற நிலை உருவாக்கப்படுகின்றது. ஆகவே இவ்வாறான மாறுதல்கள் என்பது நல்லாட்சியின் பின்னர் ஏற்பட்டவைதான். இதை உணர்ந்து செயற்படப்போவது யார்?