Home இலங்கை தனிநாட்டுக் கோரிக்கைக்கு பூட்டுப் போடுகிறதா புதிய அரசியல் அமைப்பு?

தனிநாட்டுக் கோரிக்கைக்கு பூட்டுப் போடுகிறதா புதிய அரசியல் அமைப்பு?

by editortamil
குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்:-

ஒரே தேசம் ஒரே மதம் என்ற நிலைப்பாட்டுக்கு தமிழ் கட்சிகள் முன்வந்திருப்பது வரலாற்றில் இதுவே முதல் தடவை என்று இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பெருமிதம் அடைந்துள்ளார். ஒன்றுபட்ட தேசத்திற்குள் வாழவும் பௌத்த மத்திற்கு முன்னுரிமை அளிக்கவும் தமிழ் தலைவர்கள் உடன்பட்டுள்ளனர் என்பதே பிரதமரின் கருத்தாகும். தமிழ்க் கட்சி்கள் தமது பாரம்பரிய நிலைப்பாட்டை தளர்த்திருப்பதாகவும் பிரதமர் கூறியுள்ளார். அரசியல் பிரச்சினை காரணமாகவே போர் மூண்டது என்றும் தமிழ் தலைவர்கள் சமஷ்டியை கோரினர் என்றும் போருக்குப் பிறகும் அந்த நிலமை காணப்பட்டது என்றும் தற்போது தாம் ஒரு தீர்வை இடைக்கால அறிக்கையில் எட்டியிருப்பதாகவும் இலங்கைப் பிரதமர் தெற்கில் நடந்த நிகழ்வொன்றில் கூறியுள்ளார்.

தமிழ் மக்கள் சுயாட்சியை கோரியது தமிழ் மக்களின் பாரம்பரிய நிலைப்பாடு என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறுவதும் தற்போது அந்த நிலையை விட்டு இறங்கி தமிழ் தலைவர்கள் வந்திருப்பதாக கூறுவதும் கூர்ந்து கவனிக்ககத் தக்கது. “நாங்கள் சமஷ்டி என்று தொங்கிக்கொண்டிருக்கக்கூடாது. எத்தனையோ உலக நாடுகளில் எந்தப் பெயரும் குறிப்பிடப்படாமல் அதிகாரங்கள் பகிரப்பட்டுள்ளன” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் கூறியிருக்கிறார். சுயாட்சி அம்சங்கள் புதிய அரசியல் அமைப்பில் இடம்பெற்றுள்ளதா? அல்லது பெயர் குறிப்பிடப்பட்டாம் அந்த அதிகாரங்கள் இடம்பெற்றுள்ளனவா? அல்லது எவ்வகையான தன்மை வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு வழங்கப்படும் என்பன தெளிவாக உணர முடியாதுள்ளது.

ஆனால், இலங்கைத் தீவில் தமிழ் மக்கள் முகம் கொடுத்த, முகம் கொடுத்து வரும் இனவாத ஒடுக்குமுறைகளுக்கும் இனவாத இன அழிப்புக்கும் எத்தகைய தீர்வு வேண்டும்? எது முடிவு என்பது தமிழ் மக்கள் தரப்பால் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டது. கடந்த காலத்தில் இலங்கை அரசு தமிழ் மக்களின் உரிமை விடயத்தில் நடந்து கொண்ட வரலாற்று அனுபவமே இதற்கு காரணம். பிரித்தானியர்களின் வெளியேற்றத்தின் பின்னர், இலங்கையை ஆட்சி செய்த ஆட்சியாளர்கள் தமிழ் மக்களின் உரிமையை பறித்து வந்ததுடன் தமிழ் மக்கள்மீது இன அழிப்புச் செயல்களையும் நடாத்தி வந்தனர். வரலாறு முழுவதும் தமிழ் மக்களை மேலாதிக்கத்தால் அடக்கி ஒடுக்கி அழித்து வந்துள்ளனர்.

இந்தக் கசப்பான அனுபவங்கள் காரணமாக, இந்தக் கசப்பான வரலாறு காரணமாக, தமிழ் அரசியல் தலைவர்கள் முன்னெடுத்த முயற்சிகளின் தோல்வியின் காரணமாக தனித் தமிழ் ஈழமே தீர்வு என்ற கொள்கையுடன் தமிழ்ப் போராளிகள் ஆயுதத்தை கையில் எடுத்தனர். முப்பதாண்டு காலம் அகிம்சைப் போராட்டம் நடைபெற்றது. அடுத்த முப்பதாண்டு காலம் ஆயுதப் போராட்டம் நடைபெற்றது. தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் ஈழத் தமிழ் மக்கிளன் உரிமைப் போராட்டத்தை உலகறியச் செய்தது. ஈழத் தீவில் தமிழ் மக்களின் இன உரிமை பறிக்கப்படுவதையும் குறித்து உலகம் அவதானம் செலுத்தியது. எனினும் தமது அரசியல் நலன்களை அடிப்படையாகக் கொண்டே ஈழத் தமிழ் மக்களின் பிரச்சினையை உலகம் அணுகியது.

தற்போது கொண்டு வரப்படும் அரசியல் திருத்தம் குறித்த இடைக்கால அறிக்கையை, வடக்கு மாகாண சபை நிராகரித்துள்ளது. தம்மால் பரிந்துரைக்கப்படும் விடயங்களை உள்ளடக்கும் பட்சத்தில் அதனை ஏற்றுக்கொள்ளுவது குறித்து பரிசீலிக்க முடியும் என்றும் வடக்கு மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். புதிய அரசியலமைப்பு வடக்கு கிழக்கு தனி நாடாக பிரிந்து செல்ல முடியாத பூட்டைப் போடும் விதமாகவே அமைக்கப்படவுள்ளமையை இடைக்கால அறிக்கை உணர்த்துகிறது. இலங்கை ஐக்கிய இராட்சியம் – ஒருமித்த நாடு என்பதும் மாகாண சபையோ, எந்த அதிகார சபையோ இலங்கையின் ஆட்புலத்திற்கு உட்பட்ட பகுதியை தனி நாடாக பிரகடனப்படுத்த முடியாது என்று வலுவாக குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

இலங்கையின் எந்தவொரு மாகாணத்தையோ, பகுதியையோ தனியாக்குவதற்கு வாதாடவோ, நடவடிக்கைகளை மேற்கொள்ளவோ கூடாது என்றும் பரிந்துரை இடம்பெற்றுள்ளது. தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் ஏற்றுக்கொள்ளப்படாத நிலையில், அவர்களின் சுதந்திரமான வாழ்வு உறுதிப்படுத்தப்படாத நிலையில் அவர்களின் விடுதலையை சுதந்திரத்தை பூட்டுப் போட்டு மூடும் ஒரு நிலையை புதிய அரசியல் அமைப்பு ஏற்படுத்துகின்றதா என்ற சந்தேகமே வலுக்கின்றது. போர் முடிவடைந்த பின்னர், மகிந்த ராஜபக்ச அரசுக்குப் பின்னர், இனப்படு கொலை குறித்த குற்றத்திலிருந்து தப்பித்துக் கொள்வதற்கு மைத்திரிபால சிறிசேன அரசு பல முன்னேற்றங்களைக் கண்டுள்ளது.

அதற்குப் பின்னர், தமிழ் மக்களின் தனிநாட்டுக் கோரிக்கையை நீர்த்துப்போகச் செய்வதற்கும் அதனை முழுமையாக தோற்கடிப்பதற்குமான செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது. புலிகள் தோற்கடிக்கப்பட்டாலும் அவர்களின் கொள்கை தோற்கடிக்கப்படவில்லை என்று ஜனாதிபதி மைத்திரி பால தடவை கூறியுள்ளார். போர் முடிவடைந்த பின்னர், புலிகளற்ற சூழலில், ஆயுதமற்ற சூழலில் தமிழ் மக்களின் தனிநாட்டுக் கோரிக்கை வலுப்பெறும் என்பதையும் அதற்கு சர்வதேச ஆதரவு நிலைகள் ஏற்படும் என்பதையும் நன்கு உணர்ந்த இலங்கை அரசு அதற்கேற்ப காய்களை நகர்த்தி வருகிறது. சர்வதேசத்தின் பகையை சம்பாதிக்காமை, பெயருக்கு ஒரு அரசியல் திருத்தத்தை உருவாக்குதல் என்பவை மூலம் இதனை மேற்கொள்ளப் பார்க்கின்றது.

போரில் தனிநாட்டு விடுதலைக் கோரிக்கையை நிராகரித்த அரசு, தற்போது அரசியல் ரீதியாக தனிநாட்டுக் கோரிக்கையை தோற்கடிக்கும் செயற்பாட்டில் இறங்கியுள்ளது. மகிந்த ராஜபக்ச போரில்மூலம் தனிநாட்டுக் கோரிக்கைக்கான ஆயுதப் போராட்டத்தை அழித்த பெயரை பெற்றுக்கொண்டார். ரணில் விக்கிரமசிங்க அரசியல் ரீதியாக தனிநாட்டுக் கோரிக்கையை அழித்துப் பெயர் பெறும் முயற்சியில் ஈடுபடுகிறார். உலகில் அண்மையில் இடம்பெற்ற சில நிகழ்வுகள் ஈழத் தமிழ் மக்கள் மத்தியிலும் நம்பிக்கைகளை ஏற்படுத்தியுள்ளன.

வேறுபாடான பூகோள அரசியல்களுக்கு அப்பால் மக்களிடத்தில் இத்தகைய நம்பிக்கை எழுபவை இயல்பானவை. குர்திஷ்தான் மற்றும் கட்டலோனியாவில் நடைபெற்ற வாக்கெடுப்பு என்பன ஈழத் தமிழ் மக்களிடையேயும் நம்பிக்கையை ஏற்டுத்தியுள்ளன. ‘குர்திஷ்தானின் தனிநாட்டுக்கான பொதுசன வாக்கெடுப்பு ஈழத்தமிழர்களுக்கு உற்சாகத்தினை தந்துள்ளது. இலங்கையில் வடக்கு கிழக்கில் வாழும் மக்களிடையேயும் இலங்கைத் தீவை பூர்வீகமாகக் கொண்ட மக்களிடையேயும் பொதுசன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்” என்று நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் வலியுறுத்தியிருப்பது கவனிக்கத் தக்க விடயம்.

பாரபட்சமும் ஒடுக்குமறையுமே பிரிந்து செல்லும் நிலைக்கு தள்ளுகிறது. ஸ்பெயின் அரசால் வஞ்சிக்கப்பட்ட கட்டலோனியா மாகாணமும் பிரிந்து செல்கிறது. சுயநிர்ணய உரிமைக்காகப் போராடும் ஒடுக்கப்படும் மக்களுக்கு மற்றுமொரு நம்பிக்கையை கட்டலோனியாவும் ஏற்படுத்தியுள்ளது. மேற்குறித்த இரண்டு பிராந்தியங்களும் தனிப் பிராந்தியங்களாக, அதாவது சுயாட்சி அலகை கொண்ட பகுதிகளாக காணப்படுகின்றன. அதன் காரணமாக அவைகளால் பிரிந்து செல்லுவதற்கான வாக்கெடுப்பை நடாத்த இயன்றது. இலங்கையில் மேற்கொள்ளப்படும் புதிய அரசியலமைப்பு திருத்த முயற்சிகளில் சுயாட்சிக்கான தன்மைகள் முற்றாக ஒழிக்கப்பட்டு குறிப்பாக, பிரிந்து செல்லும் வழிகளை மூடும் வேலைகள் இடம்பெறுகின்றன.

இதுவே பேரினவாத மனநிலை. இதுவே மேலாதிக்க மனநிலை. தமிழ் மக்களை தொடர்ந்தும் அழிக்கும் ஒடுக்கும் மனநிலை. தமிழர் நிலங்களை அபகரித்துக் கொண்டு, அவர்களின் தாயகத்தை ஒடுக்கிக் கொண்டு, அவர்களுக்கான உரிமைகளை மறுத்துக்கொண்டு, இனப்படுகொலைக்கு நீதியை வழங்காமல் ஒற்றையாட்சியின் கீழ் தமிழ் மக்களை தொடர்ந்தும் இலங்கை அரசு ஒடுக்கினால் எதிர்காலத்தில் இலங்கை அரசு கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும். அரசியல் அமைப்பு திருத்தம் என்பது ஈழப்போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் என்றால் 13ஆவது திருத்ததின் போதே இப் போராட்டம் கைவிடப் பட்டிருக்கும்.

இலங்கை அரசு தமிழ் மக்களை மாபெரும் இனப்படுகொலைக்கு உள்ளாக்கியது. உத்தியோகபூர்வமான போர் நடவடிக்கையின் மூலம் இலங்கை இனப்படுகொலையைப் புரிந்தது. அதனை வரலாற்று ரீதியாக நடாத்தி வந்துள்ளது. இதற்கான ஆதாரங்கள் பலவும் வெளிவந்துள்ளன. அரசியல் அமைப்பு ரீதியாக தனிநாடாக பிரிந்து செல்வதை இலங்கை அரசு தடுத்தாலும், அது நிகழ்த்திய மாபெரும் இனப்படுகொலை, இலங்கை அரசின் கீழ் தமிழ் மக்கள் ஒருபோதும் நிம்மதியாக வாழ முடியாது என்பதையும் பிரிந்து செல்வதே தீர்வு என்பதையும் உணர்த்தியுள்ளது. அதுவே தமிழ் மக்கள் பிரிந்து சென்று தனியான தேசம் ஒன்றை அமைத்துக்கொள்ள உபயோகிக்கும் போராட்ட ஆயுதமாகவும் காணப்படுகின்றது.

இலங்கை கடந்து வந்த வரலாற்றின் அடிப்படையில், தமிழ் மக்கள் தங்களை தாங்களே ஆளும் ஒரு ஆட்சியை வழங்காமல், அவர்களை தொடர்ந்தும் ஒடுக்கும் முனைப்புக் கொண்ட அரசியல் சூழல் காணப்படுமாக இருந்தால், மீண்டும் அது தனி நாட்டுக் கோரிக்கைக்கே இட்டுச் செல்லும். இப்போது மேற்கொள்ளப்படும் அரசியல் அமைப்பு தமிழ் மக்களின் அபிலாசைகளை புறந்தள்ளும் பட்சத்தில் இலங்கை அரசு ஒருபோதும் தமிழ் மக்களின் உரிமைகளை அவர்களுக்கு வழங்காது என்ற அனுபவம் உணர்த்தப்படும். இறைமை கொண்ட தமிழ் மக்கள் தமக்கான தனித் தேசத்தை நோக்கி தொடர்ந்து போராடும் நிலைக்கே தள்ளப்படும். இலங்கை அரசு போடும் பூட்டுக்கள் தமிழர்களின் போராட்டத்தை வலுவாக்குமே தவிர, ஒரு போதும் விடுதலைக்கான போராட்டத்தை முடக்கிவிடாது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More