காவிரி விவகாரம் தொடர்பாக புதிய மனு தாக்கல் செய்வது தொடர்பான தமிழக அரசின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
காவிரி நதி நீர்ப்பங்கீடு தொடர்பாக காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பை எதிர்த்து தமிழகம், கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன.
இந்த வழக்கின் இறுதிக்கட்ட வாதம் கடந்த ஜூலை மாதம் ஆரம்பமான போதும் திகதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தமிழகத்திற்கு நடப்பாண்டில் காவிரியில் இருந்து 63 டி.எம்.சி. நீரை திறந்து விட உத்தரவிடக் கோரி தமிழக அரசு மனு தாக்கல் செய்வதற்காக உச்ச நீதிமன்றத்தில் அனுமதி கேட்டது. எனினும் தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம் காவிரி விவகாரத்தில் நடுவர் மன்ற தீர்ப்புக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் புதிய மனு தாக்கல் செய்வதை அனுமதிக்க முடியாது என தெரிவித்துள்ளது.
மேலும் இறுதிக்கட்ட வாதத்தின்போது, காவிரி நதி நீர் பங்கீடு விவகாரத்தில் மத்திய அரசின் செயல்பாடுகளுக்கு கண்டனம் தெரிவித்த உச்சநீதிமன்றம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் கால தாமதம் செய்வது மத்திய அரசின் தவறான அணுகுமுறை எனவும் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.