தற்போதைய சூழலில் சமூக ஊடகங்கள் என்பவை கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்தின் புதியதொரு பரிமாணமாக பரந்துசெல்கின்றது. ஊடகவியலாளர்கள் மட்டுமே எழுதலாம்,பேசலாமென்ற எல்லையினை தாண்டி மக்கள் ஒவ்வொருவரும் தங்களது மனதில் தோன்றுவதை வெளிப்படுத்தும் கருத்துச்சுதந்திரத்தை அண்மைக்காலமாக சமூக ஊடகங்கள் தோற்றுவித்து வழங்கிவருகின்றன.
ஆனாலும் இலங்கையில் மாறி மாறி ஆட்சிக்கதிரையேறும் அரசுக்களையும் அவர்களது முகவர்களையும் பொறுத்தவரையில் ஊடக சுதந்திரம் முதல் கருத்து சுதந்திரம் வரை விருப்பத்துக்குரிய ஒன்றாக என்றுமே இருப்பதேயில்லை. இதனால் தான் 44 ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகப்பணியாளர்கள் கொல்லப்பட்டிருக்கின்றார்கள் அல்லது காணாமல் போகச்செய்யப்பட்டுள்ளனர். பலர் இன்றுவரை விசாரணைகள் என்ற பேரில் அலைக்கழிக்கப்படுகின்றனர்.
அண்மையில் இணைய செய்தி ஒன்றிற்காக இளம் குடும்பஸ்தர் ஒருவர் கொழும்பு வரை விசாரணைக்கு சென்றுவரவேண்டியிருந்தது. இதன் பின்னணியில் தமிழ் பெண் அமைச்சர் ஒருவர் இருந்திருந்த கதை வெளியே பலருக்கு தெரிந்திருக்கவுமில்லை.
இந்நிலையில் வவுனியா வடக்கு பிரதேச செயலகத்துக்கு முன்பதாக காணப்பட்ட மரமொன்றின் கீழே ‘மரம் நடுகை மாதம்’ என்ற, பதாகை கட்டப்பட்டிருந்தது. சொல்வது ஒன்று, செய்வது ஒன்று என்ற அர்த்தத்தை தரக்கூடிய அந்தக் காட்சியைக்கைபேசியில் படமெடுத்து அதனை முகப்புத்தகத்தில் பதிவேற்றியதுடன் அதனைப் பார்த்த பலர் பகிரவும் இளைஞர்கள் சிலர் வழி கோலியிருந்தார்கள்.
மறைப்பதற்கு ஏதுமற்ற பெருவெளியில் காணப்பட்ட தகவலொன்றை சமூக வலைத்தளங்களில் வெளிப்படுத்துவது பாரதூரமான குற்றமல்ல.தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல்களை பெறுவதற்கான சூழலை ஏற்படுத்தியுள்ளதாக இலங்கை அரசோ பிரச்சாரப்படுத்தி வருகின்றது.ஆனால் அதே அரசின் ஊதியம் பெறும் அதிகாரிகளோ பொதுவெளியில் காணப்பட்ட தகவல் தொடர்பில் முகநூலில் வெளிப்படுத்திய இளைஞர்கள் மீது அச்சுறுத்தும் வகையில் காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளனர்.அடக்கு முறைகளின் நீட்சியான அவர்களது மனேபாவமே இதற்கு காரணமாக அமைந்துள்ளது.
கருத்து சுதந்திரத்திற்காக உயிர்களை ஆகுதியாக்கிய ஊடகத்துறையே தமிழர் தாயகத்தில் இருந்து வந்திருந்தது. அது தொடர்ந்தும் கருத்து சுதந்திரத்திற்காக ஓங்கி குரல் கொடுக்கும். பொதுமக்களது கருத்துச் சுதந்திரத்தைக் காவு வாங்கும் வவுனியா வடக்கு பிரதேச செயலக அதிகாரிகள் இதற்கான விளக்கத்தை பொது வெளியில் முன்வைக்க யாழ்.ஊடக அமையம் பகிரங்கமாக கோருகின்றது. அத்துடன் காவல்துறையில் முறைப்பாடு செய்வதென்ற இத்துப்போன உத்தி மூலம் இளைஞர் சமூகத்தை அச்சமூட்ட மேற்கொண்ட முயற்சிகளையும் யாழ்.ஊடக அமையம் வன்மையாக கண்டிக்கின்றது.
அத்துடன் ஊடக சுதந்திரத்திற்காக குரல் கொடுக்கும் அதேவேளை தமிழ் தேசிய சிந்தனை சார்ந்த சமூக நலன்களிற்கு குந்தகம் விளைவிக்காத கருத்து சுதந்தந்திரத்தை பேணிப்பாதுகாக்க யாழ்.ஊடக அமையம் உறுதியுடன் மக்களுடன் இணைந்து என்றுமே நிற்குமென்பதையும் அறியத்தருகின்றோம்.
இணைப்பாளர்
யாழ்.ஊடக அமையம்