தமக்குத் கிடைக்கும் கேள்விகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து வாராவாராம் முதலமைச்சர் கௌரவ நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அவர்கள் பதில் தந்து வருகின்றார். இந்த வாரத்துக் கேள்வி இதோ –
கேள்வி: வட கிழக்கை இணைக்க வேண்டும் என்ற உங்கள் கோரிக்கை சிங்கள முஸ்லிம் தலைவர்களுக்கு எரிச்சலை மூட்டுவதாகக் கூறப்படுகிறதே. அதை விடுத்து இனப்பிரச்சினைக்கான தீர்வினைப் பெற முடியுமா?
பதில்: நல்ல கேள்வி. முதலில் இனப்பிரச்சினை என்பது என்ன, அதற்கு எதற்காக ஒரு தீர்வைத் தேடுகின்றோம் என்பது புரிந்து கொள்ளப்பட வேண்டும். இனப்பிரச்சினை என்றால் என்ன? அது ஏன் ஏற்பட்டது? தமிழ்ப் பேசும் மக்கள் நீர்கொழும்பில் இருந்து வடகிழக்கு ஊடாக கதிர்காமம் வரை தமது வாழ்க்கை முறையையும் மொழியையும் பாதுகாத்து வாழ்ந்து வந்தார்கள். அதே போன்று கண்டியச் சிங்களவர்களும் கீழ்நாட்டு சிங்களவரும் உருகுணைச் சிங்களவர்களும் தத்ததமது பிரதேசங்களில் வாழ்ந்து வந்தார்கள். வாணிபம், வணிகம் போன்றவை அவர்களை இணைத்தன் அல்லது யாராவது ஒரு அரசன் தன்னாட்சியை விரிவுபடுத்த எத்தனித்த போது போர்கள் வெடித்தன. பின்னர் அடங்கிப் போய்விட தமிழ்ப் பேசும் பிரதேசங்களில் தமிழ்ப் பேசுபவர்களே தொடர்ந்து வாழ்ந்து வந்தனர்.
இவர்களின் வாழ்க்கை முறை வெளிநாட்டுக்காரர்கள் உள்நுழைய மாற்ற மடைந்தது. முதலில் போர்த்துக்கேயர், அதன் பின் டச்சுக்காரர், கடைசியாக ஆங்கிலேயர் ஆகியோர் இங்கு வர மக்களின் வாழ்க்கை முறையில் மாற்றங்கள் ஏற்பட்டன. வேற்று மொழிகள் வேற்று மதங்கள் படிப்படியாக இங்கு வேரூன்றின. அவற்றின் ஆதிக்கத்தை அனுமதிக்க மறுத்த உள்ளனர் அரசர்கள் போரிட்டு முரண்படவும், தமக்குள் சேர்ந்து வெளியாருடன் போரிடவும் தலைப்பட்டனர்.
காலக்கிரமத்தில் ஆங்கிலேயர் ஆட்சி நிலை பெற்றது. 1833ம் ஆண்டில் முழு இலங்கையும் ஆங்கிலேயர் நிர்வாக ஒருமைப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டன. அதாவது 185 வருடங்களுக்கு முன்னர் தான் காலாதிகாலமாகத் தனித்து வாழ்ந்த இந்நாட்டின் வௌ;வேறு மக்கட் கூட்டங்கள் ஒரே நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டனர். நிர்வாக மொழியான ஆங்கிலம் ஓரளவு படித்தமக்களை ஒன்றிணைத்தது. மக்கள் நடமாட்டங்கள் அதிகரிக்கத் தொடங்கின. வேற்று மதங்கள் இனங்களை ஒன்றிணைத்தன. நூற்றாண்டு காலமாக ஒரே இடத்தில் வாழ்ந்து வந்த தமிழ்ப் பேசும் மக்கள் தொழில், வாணிபம் நிமித்தம் குடிபெயர ஆரம்பித்தார்கள். ஆங்கிலேயர் காலத்தில் தமிழர்கள் நாடு பூராகவும் பரந்து வாழ்ந்தார்கள். உதாரணத்திற்கு பல தமிழ்க் குடும்பங்கள் கிட்டத்தட்ட 100, 150 வருடங்களுக்கு முன்னர் வடகிழக்கில் இருந்து வந்து கொழும்பில் குடியேறின. கல்லூரிகளில் பல்லின மக்களும், பன்மொழி மக்களும், பல்மத மக்களும் ஒருமித்து கல்விகற்றனர். ஆனால் அவர்களை ஆங்கில மொழியே ஒன்று சேர்த்தன. என் இளமைக் காலத்தில் நான் சிங்களவர், தமிழர், பறங்கியர், இந்திய வம்சாவழியினர், முஸ்லீம்கள், மலாய்க்காரர், சீனர் என்ற பல்வித மாணவர்களுடன் சேர்ந்து கல்வி கற்றேன். ஆங்கில மொழி எம்மை இலங்கையர் என்று அடையாளங் காண வைத்தது.
இந்த நிலை சுதந்திரத்தின் பின்னரும் நீடிக்கும் என்றே பெரும்பான்மை இனம் அல்லாதோர் நினைத்திருந்தனர். அதற்கேற்றவாறே ஆங்கிலேயர்களுக்கு உத்தரவாதங்களைச் சிங்கள அரசியல்த் தலைவர்கள் கொடுத்தும் இருந்தனர். முதல் அரசியல் யாப்பின் உறுப்புரை 29ல் பக்கச் சார்பான பாகுபாடு காட்டும் சட்டங்களை நாம் இயற்ற மாட்டோம் என்ற உத்தரவாதத்தை பெரும்பான்மையினர் கொடுத்திருந்தனர். அவர்களை வெள்ளையரும் பெரும்பான்மையினர் அல்லாதோரும் வெகுவாக நம்பினர்.
நடந்தது என்ன? மலையக மக்களின் வாக்குரிமை சுதந்திரம் கிடைத்த அடுத்த வருடமே பறிக்கப்பட்டது. அரசாங்க சேவையில் பரவலாகப் பதவி வகித்த வடகிழக்கு மாகாணத் தமிழ்ப் பேசும் மக்களின் வயிற்றிலும், பறங்கியர்கள், இந்திய வம்சா வழியினர், மலாய்க்காரர், சீனர் போன்றோரின் வயிற்றிலும் அடிப்பது போல் ‘சிங்களம் மட்டும் சட்டம்’ 1956ல் கொண்டு வரப்பட்டது. கிறீஸ்தவ மதத்தினர் பெரும்பான்மையாக நடாத்திய பல கல்லூரிகள் அரசாங்கத்தால் 1964ம் ஆண்டளவில் கையேற்கப்பட்டன. 1970களில் கல்வியில் சமநிலைப்படுத்தல் அறிமுகப்படுத்தப்பட்டு வடமாகாணத் தமிழ் மாணவ மாணவியரின் மேற் படிப்புக்குத் தடைகள் போடப்பட்டன. வடகிழக்கு மாகாணக் காணிகளில் அவ்வந்த மாகாண மக்களைக் குடியேற்றாது வெளியில் இருந்து சிங்களம் பேசும் மக்கள் கொண்டு வரப்பட்டு தொடர்ந்து வந்த அரசாங்கங்களினால் அவர்கள் அங்கு குறியேற்றப்பட்டார்கள்.
இவை யாவும் நடைபெற ஏதுவாக அமைந்தது நிலம்சார் பிரதிநிதித்துவமே. (Territorial Representation). கூடிய நிலம் சிங்கள மக்களுக்குச் சொந்தமாக இருந்ததால்; அவர்களின் பிரதிநிதிகள் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையினராகி தமிழ் மக்களுக்கு எதிராகவும் வேறு சிறுபான்மையினருக்கு எதிராகவும் சட்டங்களை ஆக்கவும் நடைமுறைப்படுத்தவும் வழி வகுத்தது. வடகிழக்கில் பெரும்பான்மையினரான தமிழ்ப் பேசும் மக்கள் முழுநாட்டிலும் சிறுபான்மையினர் ஆக்கப்பட்டனர். சுதந்திரம் கிடைத்து பத்து வருடங்களுக்கு மேலாக மலையகத் தமிழ் மக்கள் வாக்கின்றி வாழ்ந்து வந்தனர்.
ஆகவே இனப்பிரச்சினையின் அடிப்படைக் காரணம் சிங்கள அரசியல்வாதிகள் அதிகாரங்களைத் தம்வசப்படுத்தி மற்றைய இனங்களுக்கு எதிரான சட்டங்களைக் கொண்டு வந்தமையே. ஆங்கிலேயர் நாட்டை விட்டு வெளியேறிய போது இருந்த நிலையை நீடிக்க விட்டிருந்தார்களானால் இனப்பிரச்சினை ஏற்பட்டிராது, பொருளாதாரம் பாதிக்கப்பட்டிருக்காது, நிர்வாகம் சீர்குலைந்திருக்காது. நாடு வெற்றி நடைபோட்டிருந்திருக்கும். இந்த நாடு பல் மொழி, பல்லின, பன்மதங்கள் உள்ள நாடு என்பதை ஏற்க மறுத்து சிங்கள பௌத்த நாடாக இந் நாட்டை மாற்ற எத்தனங்கள் எடுக்கப்பட்டன. சரித்திரமே திரிபுபடுத்தி வெளியிடப்பட்டது. இதனால்த்தான் இனப் பிரச்சினை கூர்மை அடைந்தது.
சுமார் 200 வருடங்களுக்கு முன்னர் தத்தமது இடங்களில் வாழ்ந்து வந்த மக்கட் கூட்டங்கள் ஆங்கிலேயர்களின் நிர்வாக ஏற்பாட்டால் இந் நாட்டில் இடம் பெயர்ந்து வாழத் தலைப்பட்டார்கள். ஆங்கிலத்திற்கு முதலிடம் கொடுத்து ஆங்கிலேயர் காலத்து நிர்வாகத்தைத் தொடரச் சிங்கள அரசியல்வாதிகள் சுதந்திரத்தின் பின்னர் முன்வரவில்லை. அவ்வாறு முன்வந்திருந்தார்கள் எனில் முன்னர் கூறியவாறு இனப்பிரச்சினை ஏற்பட்டிராது. நாம் யாவரும் இலங்கையர் என்ற எண்ணம் எல்லோர் மனதிலும் சுடர்விட்டு எரிந்திருக்கும். சிங்கள மொழிக்கும் பௌத்தத்திற்கும் முன்னுரிமை கொடுக்க நினைத்ததால் சிங்கள பௌத்தர்கள் அல்லாதவர்கள் பாதிப்புக்கு ஆளானார்கள். இப்பொழுதும் அதே மனோநிலையில்த்தான் அரசியல் நகர்வுகள் இடம்பெற்று வருகின்றன. பௌத்தத்திற்கு முதலிடம், சிங்கள மக்களுக்குப் பெரும்பான்மை அதிகாரத்தை அளிக்கும் ஒற்றையாட்சி என்பனவே அவர்களின் கோரிக்கை. இந்தப் பின்னணியில்த்தான் வடகிழக்கு இணைப்பு நோக்கப்பட வேண்டும்.
இன்றைய வடகிழக்கின் நிலையை நோக்குங்கள். எமது மக்கள் பத்து இலட்சம் அளவில் வெளிநாடு சென்றுவிட்டார்கள். அரசாங்கம் வெளிமாகாணங்களில் இருந்து தமிழ்ப் பேசும் மக்கள் அல்லாதவர்களை வடகிழக்கில் குடியேற்றி வருகின்றார்கள். முன்னர் காலத்திற்குக் காலம் மீன் பிடிக்க வந்த தெற்கத்தைய மீனவர்கள் இப்பொழுது நிரந்தர வசிப்பிடங்களை அமைத்து தமிழ்ப்பேசும் பாரம்பரிய மீனவர்களின் வாழ்வாதாரங்களை பாதிப்படையச் செய்துள்ளார்கள். அவர்கள் தமது புலம் விட்டுச் செல்ல வழிவகுத்துள்ளார்கள். இராணுவம் ஒன்றரை இலட்சம் பேர் 65000 ஏக்கர் காணிகளில் வடமாகாணத்தில் நிலை கொண்டுள்ளார்கள். 13வது திருத்தச் சட்டத்தின் கீழ் எமக்குப் போதுமான அதிகாரங்கள் இல்லை. ஆளுநர் கூடிய அதிகாரங்களை வைத்துக் கொண்டுள்ளார். தெற்கில் இருந்து முதலீட்டாளர்கள், வணிகர், வாணிபர் என்று பலரும் வந்து எமது வளங்களைச் சூறையாடிச் செல்கின்றார்கள். உணவகங்கள் உள்ளிட்ட வியாபார ஸ்தலங்கள் பலவற்றை இராணுவத்தினரும் கடற்படையினரும் நடத்தி வருகின்றனர். அவர்களைக் கட்டுப்படுத்த எமக்கு அதிகாரம் இல்லை.
போதைவஸ்த்துப் பாவனை எம் இளைஞர்களிடையே பரவி வருகின்றது. அதனால் வன்முறையும் பரவி வருகின்றது. பாலியல் குற்றங்கள் மலிந்து வருகின்றன. கட்டுப்படுத்த எமக்கு அதிகாரம் இல்லை. வடகிழக்கில் தற்போதைய நிலை கவலைக்கிடமாக இருக்கின்றது என்பதை நான் கூறி வாசகர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை.
எமது தொகை குறைகின்றது. மற்றவர்களின் தொகை கூடுகின்றது. தமிழ் மக்களுடைய சனப் பெருக்க வீதமே சகல இனங்களுக்குள்ளும் ஆகக் குறைந்தது என்று கூறப்படுகின்றது. ஆகவே தமிழ் மக்களின் தொகை படிப்படியாக வீழ்ச்சி அடையத் தொடங்கியுள்ளது. இன்னிலையில் தமிழ்ப் பேசும் மக்கள் வடகிழக்கில் சேர்ந்து வாழ வேண்டுமா பிரிந்து வாழ வேண்டுமா? பிரிந்து வாழ்ந்தால் எமது நிலை சீர் கெட்டுவிடும். பறங்கியர்களுக்கு இந் நாட்டில் ஏற்பட்ட கதியே இன்னும் 25 வருடங்களில் எமக்கும் ஏற்பட்டுவிடும். எம்மவர் வெளியேறி விடுவார்கள். மிகுதி இருப்பவர்களைப் பெரும்பான்மைச் சமூகம் உட்கிரகித்துக் கொள்ளும். ஆகவே வடகிழக்கு இணைப்பு ஒன்றே எமக்குப் பலத்தை அளிக்கும். எமது மக்கட் தொகை அருகி வருவதைத் தடுக்கும்.
ஆனால் வட கிழக்கு இணைப்பு தமிழ்ப் பேசும் முஸ்லீம் மக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் உருவாக முடியாது. தமிழ்ப் பேசும் வடகிழக்கு அலகில் முஸ்லிம் மக்களுக்கு சமச்சீரில்லாத (Asymmetrical) தனி அலகை உருவாக்குவதன் மூலமே வடகிழக்கு இணைப்பு இனிச் சாத்தியமாகும். இந்தியாவின் பங்கு இதில் இனி இருக்காது என்பது தெளிவு. 18 வருடங்களுக்கு வடகிழக்கு இணைந்திருந்ததெனில் அது இந்தியாவின் உள்ளீடலால்த்தான்.
எனவே இன்றைய நிலையில் வடகிழக்கு இணைவு அவசியம் என்பது எம் மக்கள் யாவருக்குந்; தெரியப்படுத்தப்பட வேண்டும்.
வடகிழக்கு இணைப்பு இல்லாத தீர்வு தமிழ்ப் பேசும் மக்களைப் பாதிக்கும். பௌத்த சிங்கள மக்களின் கையை ஓங்க வைக்கும். இதனால் தமிழ்ப் பேசும் மக்களின் ஒற்றுமையும் சீர் குலைந்து போகும்.
எமது அதிகாரங்கள் பாதிக்கப்பட்ட நிலையிலேயே நாம் இன்று உள்ளோம். வடகிழக்கு இணைப்பு, சுயாட்சி, சமஷ்டி போன்ற கருத்துக்கள் வெறும் கருத்துக்கள் அன்று. எமது பாதுகாப்புக்கான கேடயங்கள். அவற்றை நாம் கைவிட்டால் எம்மை அடிபணிய வைப்பதும் அடியற்றுப் போக வைப்பதும் இலகுவாகிவிடும். இதனை எம்மக்கள் வரவேற்கின்றார்களா?
எமது மக்கள் தனிநாடு கோருவதையும் அதற்காக உணர்ச்சி மேலீட்டில் உரக்கக் கத்துவதையும் இனி நிறுத்த வேண்டும். இவ்வாறான கருத்துக்கள் அரசாங்கத்தைக் கெட்டியடையச் செய்யுமே தவிர எம்முடன் சுமூகமாக நடந்து கொள்ள உதவாது. வடகிழக்கு இணைப்பு என்பது தனி நாடொன்றை உருவாக்க நாம் போடுஞ் சதி என்றே அரசாங்கம் பிறநாட்டு இராஜதந்திரிகளுக்குக் கூறிவருகின்றது. அதனால் சர்வதேச கருத்துக்கள் வடகிழக்கு இணைப்புக்கு எதிராகவே இருக்கின்றது. முஸ்லிம் அரசியல் தலைவர்களின் எதிர்ப்பும் அரசாங்கத்திற்குச் சார்பாகவே அமைந்துவிட்டுள்ளது. தனிநாடு என்பது பிற வல்லரசுகளின் தயவுடனேயே இயற்றப்பட முடியுமே தவிர நாம் கேட்டுப் பெறக் கூடியதொன்றல்ல. அடித்துப் பறிக்க முடியும் என்ற கருத்தும் அண்மையில் மௌனிக்கப்பட்டுவிட்டது. நாம் தனித்து வாழத் தலைப்பட்டால் தலை நாடுகளின் சார்பாளர்களாகவே நாங்கள் மாற நேரிடும். என்றும் மாறாத பகைமையை எமது சிங்கள சகோதரர்களுடன் நாம் பாராட்ட வேண்டிய ஒருநிலை ஏற்படும். உண்மையில் ஆயுதங்கள் மௌனித்ததும் தனி நாட்டுக்கான கோரிக்கையும் அவற்றுடன் மௌனிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அந்த எண்ணத்தைச் சிலர் இன்னமும் தம் உள்ளங்களில் சுமந்து கொண்டிருக்கின்றார்கள். இதனால் இந் நாட்டு மக்களிடையே சுமூக உறவு ஏற்பட முடியாது என்பதை எம்மவர் ஆய்ந்துணர்வார்களாக! எமது மக்கள் வெளிநாடுகளில் இருந்து கொண்டு இங்கு எமது நிலைமையறியாமல் பேசுவதைத் தவிர்க்க வேண்டும். இங்கு இன சௌஜன்யம் வளர இடம் கொடுக்க வேண்டும்.
முஸ்லிம் தலைவர்கள் வடகிழக்குக்கு வெளியில்; இருந்து வரும் போது அவர்களின் தேர்தல் தொகுதியில் வடகிழக்கு இணைப்பு எடுபடாது என்ற காரணத்தினால் அவர்கள் வட கிழக்கு இணைப்பை எதிர்க்கவே செய்வார்கள். முஸ்லிம் தனி அலகொன்றை உறுதி செய்த பின் வடகிழக்கு இணைப்பு பற்றிய கருத்தறியும் பொறிமுறையொன்று நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். தமிழ்ப் பேசும் மக்களின் பாதுகாப்புக்கும் தனித்துவத்தைப் பேணுவதற்கும் நாம் எடுக்கும் நடவடிக்கைகளில் தெற்கில் உள்ள சிங்கள மக்களை உள்ளடக்க வேண்டும் என்று அரசாங்கத்தில் உள்ள சிலர் எதிர்பார்ப்பது நியாயமான ஒரு கோரிக்கை அன்று. எமது வருங்காலத்தை நாம் தீர்மானிக்க எமக்கு உரித்து அளிக்கப்பட வேண்டும்.
ஆகவே சிலருக்கு எரிச்சலை மூட்டுகின்றதோ இல்லையோ எமது பாதுகாப்புக்கும் நாம் தொடர்ந்து இங்கு வாழ்வதற்கும் ஏற்புடைத்தான ஒரு மார்க்கத்தை நாம் வலியுறுத்துவது எந்த விதத்திலும் பிழையாகாது. இவ்வாறு வடகிழக்கு இணைப்பில்லா இனப்பிரச்சினைத் தீர்வொன்றை நாம் நாடினால் எமது இனம் அழிய அது அடிகோலும் என்பதே உண்மை.
நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
முதலமைச்சர்
வடமாகாணம்