ஜெருசலேம் விவகாரத்தில் டிரம்பின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இயேசு கிறிஸ்து வாழ்ந்த இடமாக கருதப்படும் நஸ்ரேத்தில் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஜெருசலேம் இஸ்ரேலின் தலைநகரம் என்பதை அங்கீகரிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் அண்மையில் அறிவித்திருந்தமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருப்பதுடன் அரபு நாடுகளில் பதட்டத்தையும் உருவாக்கி உள்ளது.
இந்நிலையில், டிரம்பின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கிறிஸ்துவர்களின் மிக முக்கிய புனிதத்தலமான, இயேசு கிறிஸ்து வாழ்ந்த இடமாக கருதப்படும் நஸ்ரேத்தில் இந்த ஆண்டிற்கான ஒருசில கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன.
டிரம்ப் ஜெருசலேமைப் பற்றி கூறிய கருத்தினால் தாம் இப்போது சர்ச்சையான சூழ்நிலையில் இருக்கிறோம் எனவும் எனவே பாரம்பரியமாக கிறிஸ்மஸ் தினத்தன்று நடைபெறும் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளை ரத்து செய்ய முடிவு செய்துள்ளோம் எனவும் நஸ்ரேத் நகர செய்தித்தொடர்பாளர் சலிம் ஷரரா இதுகுறித்து தெரிவித்துள்ளார்.
எனினும் ஆண்டுதோறும் நடாத்தப்படும், சந்தைகள், கடைகள், மற்றும் கிறிஸ்மஸ் ஆலய வழிபாடு ஆகியன வழக்கம் போல நடைபெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு வெளியான சிறிது நேரத்தில் பெத்லகேம் மற்றும் ரமல்லா நகரில் உள்ள பேராலயங்களில் அலங்கரிக்கப்பட்டிருந்த விளக்குகள் அணைக்கப்பட்டுள்ளன.
பாலஸ்தனத்தின் ஜெருசலேம் நகருக்கு இஸ்ரேல் – பாலஸ்தீனம் ஆகிய இரு நாடுகளும் உரிமை கொண்டாடி வருகின்றன. இருநாடுகளுமே அந்த நகரை தங்கள் நாட்டின் தலைநகரம் என அறிவித்துள்ள போதும் அதனை பெரும்பாலான நாடுகள் அதனை ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.