மத்திய அரசுடன் மோதல் நீடித்து வருவதால், ரிசர்வ் வங்கி ஆளுனர் உர்ஜித் படேல் 19ம் திகதி பதவிவிலக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நிதி பற்றாக்குறையை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி தனது கையிருப்பு பணத்தில் பெரும்பகுதியை மத்திய அரசுக்கு மாற்ற வேண்டும் உள்ளிட்ட 3 கோரிக்கைகளை ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு அண்மையில் விடுத்திருந்த போதும் ரிசர்வ் வங்கி அதற்கு உடன்படவில்லை.
இதனையடுத்து மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிய ரிசர்வ் வங்கி துணை ஆளுனர் ஆச்சார்யா , ரிசர்வ் வங்கியின் தன்னாட்சி அதிகாரத்தை மதிக்காத அரசு, கடும் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து ரிசர்வ் வங்கி மீது மத்திய அரசு தரப்பில் வெளிப்படையாக விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருவதுடன் தனது 3 கோரிக்கைகளுக்கு ரிசர்வ் வங்கியை பணிய வைக்க ரிசர்வ் வங்கி சட்டத்தின் 7-வது பிரிவை பயன்படுத்தி, மத்திய அரசு உத்தரவு பிறப்பிக்கும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், ரிசர்வ் வங்கியின் ஆளுனர் உர்ஜித் படேல், எதிர்வரும் 19ம் திகதி பதவி விலகக்கூடும் என செய்திகள் வெளியாகியுள்ளன.
மத்திய அரசுடனான மோதலால் உர்ஜித் படேல் சோர்வு அடைந்ததுடன், அவரது உடல்நிலையும் பாதிப்படைந்துள்ளது எனவும் ரிசர்வ் வங்கியின் நிர்வாக கூட்டம் 19ம் திகதி நடைபெறும்போது அவர் பதவி விலகுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது