இந்தியாவின் மகாராஷ்ட்ராவில் அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களில் தனித்துப் போட்டியிட உள்ளதாக இந்திய அரசு கடும் ஆதரவு அமைப்பான சிவசேனா கட்சி அறிவித்துள்ளது. இதன் மூலம் பாரதிய ஜனதாவுடனான தனது நீண்ட கால அரசியல் கூட்டணியை அக்கட்சி அதிகாரப்பூர்வமாக முறித்துக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மும்பையில் இன்று நடைபெற்ற சிவசேனா கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
அதன் படி, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவின் மகனும், யுவசேனா அமைப்பின் தலைவருமான ஆதித்ய தாக்கரேவை, தேசிய செயற்குழு உறுப்பினராக தேர்வு செய்ய ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.மேலும் 2019இல் நடைபெறவுள்ள சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் சிவசேனா யாருடைய தயவும் இன்றி தனித்துப் போட்டியிட முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தேசிய செயற்குழு கூட்டத்தில் உரையாற்றிய உத்தவ் தாக்கரே, ஹிந்துத்துவா கொள்கைகளை முன்னிறுத்தி எந்த தேர்தலையும் சிவசேனா கட்சி எதிர்கொள்ளும் எனத் தெரிவித்தார்.
மகாராஷ்ட்ராவில், பாரதிய ஜனதாவும், சிவசேனாவும் கூட்டணி ஆட்சி நடத்திய போதிலும், இரு கட்சித் தலைமைக்கு இடையே இடைவெளி அதிகரித்து வருவதாக தொடர்ந்து செய்திகள் வெளியான நிலையில், தேர்தலில் தனித்துப் போட்டியிடுவோம் என சிவசேனா அறிவித்துள்ளது.