தேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வது குறித்து இன்று ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாட உள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
தனக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை தோற்கடித்த பின்னர் நாடாளுமன்றத்தில் உள்ள பிரதமரின் அலுவலகத்தில் நேற்றிரவு நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
நம்பிக்கையில்லாப் பிரேரணையை தோற்கடிக்க உதவிய அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்வதாக கூறிய பிரதமர், ஜனவரி 8 புரட்சியை பின்நோக்கி நகர்த்த இடமளிக்க போவதில்லை எனவும் கூறியுள்ளார்.
மேலும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகளை கவனத்தில கொண்டு குறைகளை திருத்திக்கொண்டு தேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகித்த ஒரு பகுதியினர் வெளியேறியுள்ளதாகவும் அது குறித்தும் ஜனாதிபதியிடம் பேச உள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.
“எமக்கு ஆதரவாக வாக்களித்தவர்களுடன் இணைந்து ஆட்சியை முன்னெடுத்துச் செல்வோம்”
Apr 4, 2018 @ 18:04
“நம்பிக்கையில்லா பிரேரணையில் எமக்கு எதிராக வாக்களித்தவர்களின் உதவியின்றி ஆதரவாக வாக்களித்தவர்களுடன் இணைந்து ஆட்சியை முன்னெடுத்துச் செல்வோம்” என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக கூட்டு எதிரணியினரால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பு பாராளுமன்றத்தில் இடம்பெற்றது.
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக 76 பேரும் எதிராக 122 பேரும் வாக்களித்துள்ள நிலையில், நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பில் 26 பேர் கலந்துகொள்ளவில்லை. குறிப்பாக அமைச்சர்களான மஹிந்த அமரவீர, நிமால் சிறிபால டி சில்வா, துமிந்த திஸாநாயக்க, மஹிந்த சமரசிங்க, விஜித் விஜயமுனி செய்சா, சரத் அமுனுகம, ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய, பியசேன கமகே, நிஷாந்த முத்தஹெட்டிகம, பௌஷி, சிரியாணி விஜேவிக்ரம ஆகியோர் வாக்கெடுப்பிற்கு சமுகமளிக்கவில்லை. இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.
இதேவேளை, பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த 76 பேரில் 13 பேர் ஸ்ரீலங்க சுதந்திரக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்குகின்றனர். இந்த நிலையில் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மேலதிக 46 வாக்குகளால் தோல்வியடைந்தது. இதனையடுத்த பாராளுமன்ற கட்டடிடத் தொகுதியில் ஏற்பாடுசெய்யப்பட்ட விசேட ஊடகவியலாளர் மாநாடு சற்றுமுன்னர் பிரதமர் தலைமையில் இடம்பெற்றது.
இவ் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்தத் தெரிவித்த பிரதமர், நம்பிக்கையில்லா பிரேரணையில் எமக்கு எதிராக வாக்களித்தவர்களின் உதவியின்றி ஆதரவாக வாக்களித்தவர்களுடன் இணைந்து ஆட்சியை முன்னெடுத்துச் செல்வோம். இது தொடர்பாக நாளை அல்லது நாளை மறுதினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்த பேச்சுவார்த்தை நடத்தி ஆட்சியை எவ்வாறு கொண்ட செல்வது என்று தீர்மானம் எடுக்கப்படும். அத்துடன் ஐக்கிய தேசியக்கட்சியில் மறுசீரமைப்பு மேற்கொண்டு கட்சியை பலமாக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு முடியுமான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுப்போம் என வும் பிரதமர் தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய முன்னணிக்கு தேவையான அரசாங்கமொன்று உருவாக்கப்படும் – ரணில்
ஐக்கிய தேசிய முன்னணிக்கு தேவையான அரசாங்கமொன்று உருவாக்கப்படும் என பிரதமர் ரணில்விக்ரமசிங்க அறிவித்துள்ளார். ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் குழுவிற்கு இது குறித்து பிரதமர் அறிவித்துள்ளார். பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மான யோசனை குறித்த வாக்கெடுப்பு நடத்தப்பட முன்னதாகவே பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி, அரசாங்கத்தின் மறுசீரமைப்பு பணிகள் இன்றைய தினம் முதல் ஆரம்பிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்றைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திக்க உள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.