வெளிநாடுகளின் செயற்கைக்கோள்கள் மூலம் இந்தியாவில் பல தொலைக்காட்சி அலைவரிசைகள் மத்திய அரசின் அனுமதி இன்றி ஒளிபரப்பாகி வருகின்ற நிலையில் இவற்றை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசு இஸ்ரோவின் உதவியை நாடி உள்ளது.
இந்தியாவில் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் அலைவரிசைகள் மத்திய செய்தி ஒலிபரப்புத்துறை அமைச்சகத்திடம் அனுமதி பெற வேண்டிய கட்டாயம் உள்ள போதும் சீனா, ரஷ்யா உட்பட பல வெளிநாட்டு செயற்கைக்கோள்களின் இந்தியாவில் சட்டவிரோதமாக ஒளி பரப்பாகி வருகிறது.
இந்தப் பட்டியலில் இந்தியா வில் தடை செய்யப்பட்ட ஆபாச அலைவரிசைகள் பாகிஸ்தான் அலைவரிசைகள் ஆகியவை வடகிழக்கு உள்ளிட்ட பல பகுதியில் ஒளிபரப்பாகி வருவதாகக் கூறப்படுகிறது. இதேபோன்று அந்த செயற்கைக்கோள்கள் இந்தியாவில் ஒளிபரப்பாகும் சில அலைவரிசைகளை உள்வாங்கி தங்கள் நாடுகளின் பல பகுதிகளில் இலவசமாக ஒளிப்பரப்பி வருவதாக வும் இந்தப் பட்டியலில் கட்டணம் வசூலிக்கப்படும் தமிழ் அலைவரிசைகள் பலவும் இடம் பெற்றுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் சட்டவிரோதமாக வெளிநாடுகளின் அலைவரிசைகள் பார்ப்பது நாட்டின் பாதுகாப்புக்கான அச்சுறுத்தலாக அமைவதனால் இந்த செயற்கைக்கோள்களைக் கட்டுப்படுத்த ஒரு புதிய கருவியை கண்டுபிடிக்குமாறு இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திடம் (இஸ்ரோ) வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது