Home இலங்கை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வட்டுக்கோட்டை தீர்மானம்! குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வட்டுக்கோட்டை தீர்மானம்! குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்

by admin
 
 
தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தில் முக்கிய நிகழ்வொன்றாக வரலாற்றில் இடம்பெற்றது வட்டுக்கோட்டை தீர்மானம். 42 வருடங்களாக புரையோடிப் போன இனப்பிரச்சினையை தீவிரத்தை இன்றும் எடுத்தியம்புகிறது இத் தீர்மானம். தனிநாடு கோரிய போராட்டம், ஆயுதப் போராட்டம் என்று ஈழத் தமிழர்கள் கடந்து வந்த பாதைகளை தீர்மானித்த வட்டுக்கோட்டை தீர்மானம் இன்றும் தமிழ் அரசியல் தலைவர்களையும் சிங்களத் தலைவர்களையும் நோக்கி ஒரு கேள்வியாக நிற்கிறது. இதுபோல் ஒரு நாளில் குளோபல் தமிழ்ச் செய்திகள் வெளியிட்ட கட்டுரை இங்கே மீள் பிரசுரம் செய்யப்படுகின்றது.
1976ஆம் ஆண்டு மே மாதம் 14ஆம் திகதி வட்டுக்கோட்டை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இன்றோடு அத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு நாற்பத்திரண்டு ஆண்டுகள் கடந்துவிட்டன. யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் தமிழர் விடுதலைக் கூட்டணி இந்த தீர்மானத்தை நிறைவேற்றியிருந்தது. மித வாத அரசியலில் தமிழ் தரப்புக்கள் சந்தித்த தோல்விகள் மற்றும் அனுபவங்களால் தனித் தமிழீழம் அமைக்கப்படவேண்டும் என்ற தீர்மானத்திற்கு நகர்ந்தமையே வட்டுக் கோட்டைப் பிரகனடம் ஆகும்.
தந்தை செல்வநாயகம் தலையில் கூடிய மாநாட்டில் 01. இலங்கைத் தீவின் வடக்கு, கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கிய பாரம்பரிய, சுதந்திரம் மற்றும் இறையாண்மை கொண்ட தமிழர் தாயகம் வேண்டும்.02.அதில் ஒரு தேசிய இனமாக தமிழரின் அரசியல் இலக்கை அவர்களே தீர்மானித்துக் கொள்ளும் தன்னாட்சி உரிமை வேண்டும்.03. அதற்காக முழுமூச்சான பயணத்தை அஞ்சாத அர்ப்பணிப்புக்களோடு நாம் முன்னெடுக்கவேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.
ஒரு தேசிய இனத்தை பாதுகாக்கும் பொருட்டு தமிழீழ அரசை மீளளித்தல் மற்றும் மீள உருவாக்குதல் என்ற காரணத்தை இந்த தீர்மானம் கொண்டிருந்தது. இலங்கை 1948இல் சுதந்திரமடைந்த பின்னர் தமிழ் மக்களின் உரிமைகள் மறுக்கப்பட்ட, அதற்காக முப்பத்தெட்டு ஆண்டுகள் இலங்கை அரசுகளுடன் பேச்சுவார்த்தைகளும் போராட்டங்களும் இடம்பெற்ற நிலையில் கொண்டுவரப்பட்ட இந்த தீர்மானம், தமிழர் விடுதலைப் போராட்டத்தில் மிகவும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது,
இதுவே ஆயுதப் போராட்டத்திற்கும் அடிதளமிட்ட நிகழ்வாகும். சுமார் நாற்பது வருடங்களாக மதிவாத அரசியலில் சந்தித்த தோல்விகளும் இலங்கை அரசின் உறுதியான தமிழர் ஒடுக்குமுறைச் செயற்பாடுகளும் ஆயுதப் போராட்டத்திற்கு வித்திட்டன. வட்டுக்கோட்டை தீர்மானம் நிறைவேற்றப்பட்டு நாற்பது ஆண்டுகள் கடந்துள்ளபோதும் இலங்கையின் இனப்பிரச்சினை தீர்க்கப்படாத ஒன்றாகவே தொடர்கிறது என்பதே இந்தத் தீர்மானத்தை இன்னும் உயிர்ப்பிக்கிறது.
வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கு பேராதரவளிக்கும் முகமாக வடகிழக்கு தமிழ் மக்கள் பெரும் எழுச்சியோடு தமிழர் விடுதலைக் கூட்டணியில் போட்டியிட்ட தமது பிரதிநிதிகளை வெல்ல வைத்தார்கள். தனித் தமிழ் ஈழத்திற்கான ஆணையை அந்த தேர்தலில் வடகிழக்கு மக்கள் முன்வைத்தார்கள். அதனை ஒரு ஜனநாயகப் போராட்டமாக மேற்கொண்டார்கள். பிரிந்து செல்லல் மாத்திரமின்றி சாதியற்ற, பண்பாடு,பாரம்பரிய விழுமியங்களை பாதுகாக்கும், சம உரிமை கொண்ட ஒரு தேசத்தையே வட்டுக்கோட்டைத் தீர்மானம் பிரதிபலித்தது.
ஒரு இனம் ஒடுக்குமுறையை சந்திக்கின்றபோது, ஜனநாயகம், அதன் சுய உரிமைகள் மறுக்கப்படுகின்றபோது, அந்த இனம் பிரிந்து சென்று தனக்கான ஆட்சியை அமைக்க உரித்துடையது என்பதை அனைத்துலக மக்கள் சார்ந்த உரிமைக் கொள்கைகள் ஏற்றுக்கொள்கின்றன. இலங்கைத் தீவில் பூர்வீகமாக வாழந்த தமிழ் தேசிய இனம் இத்தகைய ஒரு தீர்மானத்திற்கு செல்லுகின்றது எனில் அது எத்தகைய ஒடுக்குமுறையை சந்தித்தது என்பதையே இங்கு புரிந்துகொள்ளப்ட வேண்டியது. ஆனால் நாற்பது ஆண்டுகள் ஆகியும் இலங்கை அரசியலில் அதைப் புரிந்துகொள்ளவில்லை என்பதுதான் துரதிஷ்டமானது.
வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை, இலங்கை அரசுகள் கடுமையாக விமர்சிப்பதன் அர்த்தம் என்பது அதன் பின்னாலுள்ள உண்மைகளையும் நியாங்களைளும் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலை வேட்கையையும் ஏற்கத் தயாரில்லை என்பதேயாகும். வட்டுக்கோட்டைத் தீர்மானம், ஓர் கடுமையான தீர்மானமாக கூறும் அரசுகள் என்ன தீர்வைத்தான் தமிழ் மக்களுக்கு வழங்கின? தமிழ் மக்களின் சுய உரிமை குறித்த பிரச்சினைக்கு – இலங்கையில் புரையோடிப் போன இனப்பிரச்சினைக்கு எந்தவொரு தீர்வையும் இதுவரையில் முன் வைக்காதது ஏன்? இதனைக் கடுமையான தீர்மானம் என்பதும் இதனை நிராகரிப்பதும் சுய உரிமை மறுப்புக்கான, பேரினவாத அதிகாரப் போக்கின் வெளிப்பாடே.
கடந்த பொதுத் தேர்தலில் சமஷ்டி அரசாட்சியை முன்வைக்க வேண்டும் என்று கோரி தமிழ் மக்கள் வாக்களித்திருந்தார்கள். வட்டுக்கோட்டைத் தனித் தமிழீழ தீர்மானத்தின் பின்னர், ஆயுதம் ஏந்தி தனி நாடு கோரி நடத்தப்பட்ட தீர்மானத்தின் பின்னர், 13ஆவது அரசியல் திருத்தம் தமிழ் மக்களால் நிராகரிக்கப்படும் நிலையில் இந்த சமஷ்டியை வடகிழக்கு மக்கள் வலியுறுத்தியுள்ளனர். வட்டுக்கோட்டைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு நாற்பது ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் சமஷ்டி கோரிக்கையை இலங்கை அரசு எவ்வாறு அணுகப் போகிறது என்பதே இனப்பிரச்சினை தொடர்பில் இலங்கை ஆட்சியாளர்கள் எத்தகைய கரிசனையை கொண்டுள்ளார்கள் என வெளிப்படுத்தப் போகிறது.
சமஷ்டித் தீர்வு பிரிவினையல்ல என்றும் வடகிழக்கை பூர்வீககமாகக் கொண்ட தமிழ் இனம் தன்னுடைய இறைமையை, இழந்த ஆட்சியை கோருவது அந்த இனத்தின் உரிமை என்றும் தமிழ் தலைமைகள் வலியுறுத்துகின்றன. அத்துடன் சமஷ்டி ஆட்சிமுறையே தமது இலக்கு என்றும் அதிலிருந்து ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை என்றும் தமிழ் தலைமைகள் மக்களிடத்தில் உறுதி வழங்கியுள்ளன. மறுபுறத்தில் சமஷ்டிக்கு இடமில்லை என்றும் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படும் என்றும் இலங்கை அரசு சிங்கள மக்களிடம் சொல்கிறது.
முன்னைய காலத்தில் தமிழ் ஈழத்திற்கும், தயாரில்லை, மகிந்த ஆட்சியில் 13இற்கும் தயாரில்லை, இப்போது சமஷ்டிக்கும் தயாரில்லை என்றால் தென்னிலங்கையில் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வாக என்னதான் இருக்கிறது? தமிழ் மக்களுக்கு சுய நிர்ணய உரிமை உண்டென்று பெரும்பாலான சிங்கள மக்கள்,சிங்கள முற்போக்காளர்கள் ஏற்றுக்கொள்கின்றனர். ஆனால் தமக்கிடையிலான அரசியல் அதிகாரப் போட்டிக்கான பேசு பொருளுக்காக ராஜபகச்வைப் போன்ற இனவாதிகள் அதனை குழப்புகின்றனர்.
ராஜபக்ச 13ஆவது திருத்ததச் சட்டத்தையே நடைமுறைப்படுத்த மறுத்தவர். பேரினவாதிகளைப் பொறுத்தவரையில் தமிழ் மக்களுக்கு எந்த உரிமையும் வழங்கக்கூடாது என்பதே அவர்களின் நிலைப்பாடு. சிங்களப் பேரினவாத அரசியலுக்குள் தமிழ் இனத்தை அழித்தொழிப்பதே அவர்களின் தீர்வு. சமஷ்டிக்கு இடமில்லை என்று ராஜபக்சக்களுகு அஞ்சி இன்றைய அரசு கூறுகிறதா? அப்படி எனில் ராஜபக்ச ஆட்சியும் தற்போதைய ஆட்சியும் தமிழரைப் பொறுத்தவரையில் ஒன்றல்லவா? தமிழ் மக்களின் உரிமையை அவர்களிடம் கொடுக்க வேண்டும் என்று பேசும் இன்றைய அரசாங்கம் சமஷ்டியை மறுப்பதன் ஊடாக “பேச்சு பல்லக்கு தம்பி பொடிநடை” என்று செயற்படுகிறதா?
வட்டுக்கோட்டைத் தீர்மானம் நிறைவேற்றி நாற்பத்தொரு ஆண்டுகள் ஆகியும் இலங்கையின் அரசியலும் இனப்பிரச்சினையும் தீர்வு குறித்த முனைப்புக்களும் சுய உரிமையை வழங்குதல் குறித்த அணுகுமுறைகளும் வட்டுக்கோட்டை தீர்மானம் நிறைவேற்றிய அதே காலத்திலேயே உழல்கிறது. ஒரு வகையில் இது வரலாற்றை கற்க மறுக்கும் செயல். இவ்வளவு அனுபவங்களை சந்தித்த பின்னரும் ஒரு தேசிய இனத்தின் சுய உரிமைகளை மீளளிக்க தயங்குவதும் தடைகளை ஏற்படுத்துவதும் ஆரோக்கியமானதல்ல.
‘தமிழ் மக்களுக்கு எதுவும் கொடாதே’ என்பவர்களின் பேரினவாத வெறிக்கு செவிசாய்க்க வேண்டுமெனில், இது யாருடைய ஆட்சி? இங்கு வாழும் தமிழ் மக்களின் எதிர்காலம் எப்படியானதாய் இருக்கும்? அறுபது வருடங்காக போராடும் ஒரு இனம் எத்தகைய நிலையை அடையும்? முப்பது வருடங்களாக ஆயுதம் ஏந்திய இனம் எதனை உணரும்? இவைகளை குறித்து இலங்கையை ஆள்பவர்களும் நாமும் உலகமும் சிந்திக்க வேண்டும். இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயம் இனப்பிரச்சினையின் கர்த்தக்களால் மிகவும் ஆழமாக சிக்கல் படுத்தி, அதில் அவர்களின் நலன்கள் இங்கே அறுவடை செய்யப்படுகின்றன.
இலங்கையை தற்போது ஆட்சி செய்யும் அரசு தமிழ் மக்களுடன் நல்லிணக்கத்தை கொள்வதாக கூறுகிறது. தமிழ் மக்களின் உரிமையை அவர்களிடம் வழங்கியிருந்தால் ஆயுதம் ஏந்தியிரார்கள் என்கிறது. தமது ஆட்சிக் காலத்தின் பாதிக் காலம் முடிந்த நிலையில் இன்னும் தீர்வு குறித்த முனைப்புக்கள் மந்தமாகவும் மறுக்கப்பட்ட நிலையிலும் உள்ளது தமிழ் மக்களின் அரசியல் தீர்வு குறித்த எதிர்பார்ப்பை அவ நம்பிக்கைக்குள் தள்ளுகிறது.
தமிழ் மக்கள் மீதான தொடர் இன ஒடுக்குமுறையும், தமிழ் மக்களின் சுய உரிமை மறுப்பும், ஜனநாயக வழியின் தோல்வியுமே வட்டுக்கோட்டைப் பிரகடனத்தை தோற்றுவித்தது. இப்போதும் தமிழ் மக்களின் உரிமைகளை மறுத்து அவர்களை கடுமையான இன ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கும் பேச்சுக்கள் தென்னிலங்கையில் நிகழ்த்தப்படுகின்றன. பேரினவாதப் போக்கு வீழ்ச்சியுறாதநிலையில், வடகிழக்கு மக்கள் இன்று சந்தித்துக்கொண்டிருக்கும் வாழ்வு என்பது தமிழ் மக்களை மீண்டும் மீண்டும் வட்டுக்கோட்டை தீர்மானத்திற்கு தள்ளக்கூடியது என்பதே இன்றைய வரலாற்றுச் சிறப்புமிக்க நாளில் சுட்டிக்காட்டத்தக்கது.
குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்

Spread the love
 
 
      

Related News

1 comment

Umamahalingam May 15, 2018 - 10:26 am

Timely reminder. Thank you.

Reply

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More