வடக்கு கிழக்கில் உள்ள முகாம்களின் எண்ணிக்கை தெரியப்படுத்தப்படுமாயின் அதற்கேற்ப தாம் செயற்பட முடியும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார். இராணுவ முகாம்கள் மற்றும் படைவீர்களின் எண்ணிக்கையை குறைப்பது தொடர்பில், நாடாளுமன்றத்தில் எழுந்த சர்ச்சையையடுத்து பதிலளிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இராணுவத் தளபதியின் தீர்மானத்துக்கமையவே, படைகளில் மறுசீரமைப்புகள் முன்னெடுக்கப்படுகின்றன. பல பதவி நிலைகள் உள்ளன. அவை எச்சந்தர்ப்பத்திலும் குறைக்கப்படமாட்டாது என்று தெரிவித்த பிரதமர், முகாம்களின் எண்ணிக்கையைக் குறைப்பது தொடர்பில் குற்றஞ்சாட்டப்படுகிறதெனில் முகாம்களின் எண்ணிக்கையைத் தெரியப்படுத்துங்கள். அதற்கேற்ப செயற்பட முடியும் எனத் தெரிவித்தார்
அதேவேளை, ஆவா குழுவினர் பயங்கரவாதிகள் அல்லர். அவர்களை காவற்துறையினரே கையாள முடியும். இதில் சட்டம் ஒழுங்கு பிரச்சினையே உள்ளது எனத் தெரிவித்த பிரதமர், முகாம்கள் மற்றும் படையினர் விவகாரம் தொடர்பில், எதிர்க்கட்சியினர், இராணுவத் தளபதியுடன் சந்தித்துக் கலந்துரையாடலாம் எனவும் தெரிவித்துள்ளார்