குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
இந்தியா- இலங்கை இடையிலான நட்பை எவரும் குறைத்து மதிப்பிட இயலாது. என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தள்ளார். “சுவசொரிய” அம்புலன்ஸ் சேவையை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு இன்று யாழ்.மாநகரசபை மைதானத்தில் இடம்பெற்றிருந்தது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில், இந்தியா, இலங்கை ஆகிய நாடுகள் சமகாலத்தில் ஏழ்மை உள்ளிட்ட பல்வேறு சவால்களுக்கு முகம் கொடுத்தாலும் சமூக சேவைகள் மற்றும் சுகாதார நல சேவைகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றது.
அதனடிப்படையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு வந்திருந்தபோது எங்களுடையதும், மக்களுடையதும் கோரிக்கையினை ஏற்றுக் கொண்டு இன்று 1990 எனும் அம்புலன்ஸ் சேவையை ஆரம்பித்து தந்தமைக்காக இலங்கை மக்கள் சார்பில் மனமார்ந்த நன்றிகள்.
இது மட்டுமல்லாமல் யாழ்.மாவட்டத்தில் பலாலி விமான நிலையம் விஸ்த்தரிப்பு, காங்கேசன்துறை துறைமுகம் விஸ்த்தரிப்பு உள்ளிட்ட பல்வேறு உதவி திட்டங்களை இந்திய அரசாங்கம் செய்துள்ளது.
அது மட்டுமல்லாமல் வீட்டு திட்டங்களையும் வழங்கியுள்ளது. இப்போது மலையகத்தில் உள்ள மக்களுக்கான வீடுகளை வழங்குவதிலும் இந்திய அரசாங்கம் உதவிகளை வழங்குகிறது. இரு நாடுகளும் கலாசார ரீதியாகவும், நட்புரீதியாகவும், எவருக்கும் அடிபணிந்தவர்கள் அல்ல. எங்களுடைய நட்பை எவரும் குறைத்து மதிப்பீடு செய்ய இயலாது.
ஜனநாயகரீதியிலும் இரு நாடுகளுக்கும் இணைப்பு இருந்து கொண்டிருக்கின்றது. தொடர்ந்து இரு நாடுகளும் மக்களுக்கான சேவைகளை செய்து கொண்டிருக்கின்றோம். அந்தவகையில் எங்களுடையதும், மக்களுடையதும் கோரிக்கைக்கு அமைய இந்திய அரசாங்கம் வழங்கிய இந்த உதவிகளுக்காக மீண்டும் நன்றிகளை கூறிக்கொள்ள விரும்புகிறேன். என தெரிவித்தார்.