வடக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வீடமைப்பு வேலைத்திட்டம் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைக்கு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தீர்வு காண்பார் என அமைச்சரவைப் இணைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
அந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில், சீனா மற்றும் இந்திய நிறுவனங்களுடன் பிரதமர் பேச்சு நடத்தி, அமைச்சவையில் அறிக்கை ஒன்றை சமர்பிக்கவுள்ளார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்
40,000 வீடுகளை அமைப்பதற்கு இந்திய நிறுவனம், கடந்த அரசாங்க காலத்தின் போது இணக்கம் தெரிவித்திருந்தநிலையில், தற்போது சீனா 1.3 மில்லியனில் வீடுகளை அமைத்துக்கொடுக்க முன்வந்துள்ளது. இந்தப் பணியை சீனாவுக்கு வழங்குவதாக இல்லை இந்தியாவுக்கு வழங்குவதாக என்பது தொடர்பில் சிக்கல் எழுந்துள்ளது எனவும் இது இராஜதந்திர ரீதியாக அணுக வேண்டிய பிரச்சினை என்பதால் குறித்த இரு நிறுவனங்களுடனும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கலந்துரையாடி முடிவுகளை மேற்கொள்ளவுள்ளார் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை போதைப்பொருள் கடத்தல்காரர்களான குற்றவாளிகளுக்கு மரணதண்டனையை நடைமுறைப்படுத்துவதற்குத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளமையினால் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி.பிளஸ் சலுகைகளை இழப்பதற்கான வாய்ப்பு குறித்த எச்சரிக்கை குறித்து கவலைப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.