Home இலங்கை விக்னேஸ்வரனை நீதிமன்றத்தில்  நிற்க வைத்த அரசியல் – நிலாந்தன்…

விக்னேஸ்வரனை நீதிமன்றத்தில்  நிற்க வைத்த அரசியல் – நிலாந்தன்…

by admin

யுத்த காலங்களில் வடக்கு கிழக்கில் முக்கிய பொறுப்புக்களை வகித்தவரும் சமாதானப் பேச்சுக்களின் போது மிக முக்கியமான ஒரு பொறுப்பில் இருந்தவருமாகிய ஒரு மூத்த சிவில் அதிகாரி என்னிடம் பின்வருமாறு கேட்டார். ‘முதலமைச்சர் விக்னேஸ்வரனை நீதிமன்றத்தில் எழுந்து நிற்க வைத்ததை ஒரு தரப்பினரும் சில ஊடகங்களும் ரசிப்பது போல தெரிகிறது. சட்டத்தின் முன் அனைவரும் சமன்தான். ஒரு முன்னாள் நீதியரசராக இருந்தாலும் அவர் நீதிமன்ற ஒழுங்கிற்கு உட்பட்டவர்தான். ஆனால் அவர் ஒரு முன்னாள் நீதியரசர் மட்டுமல்ல ஒரு முதலமைச்சரும் கூட. இப்போதுள்ள தமிழ் தலைவர்களில் அவர் அதிகப்படியான வாக்கை பெற்றவர். அவரை அவமதிப்பது என்பது அவரைத் தெரிந்தெடுத்த மக்களையும் அவமதிப்பதுதான். அவருக்கு ஏற்பட்ட அவமானம் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட அவமதிப்பாகும். அவரை இவ்வாறு அவமதித்திருப்பது தமிழ்த்தரப்பே என்பது ஒரு கேவலமான விடயம். டெனீஸ்வரனின் விவகாரத்தில் அவர் கெட்டித்தனமாக நடந்திருந்திருக்கலாம். ஒரு தலைவராக அந்த விடயத்தில் அவர் வெற்றி பெறவில்லை. ஒரு நிர்வாகியாகவும் அவர் போதியளவு வெற்றி பெறவில்லை. எனினும் தமிழ் மக்களால் தெரிந்தெடுக்கப்பட்ட ஒரு முதலமைச்சரை இப்படி அவமதித்ததை தமிழ் மக்களின் ஒரு பகுதியினரே ரசிக்க கூடாது. அது வடமாகாண சபைக்கும் ஒரு அவமானம் தான்’ என்று.

ஏறக்குறைய இதே தொனிப்பட வடமாகாண சபை அவைத் தலைவர் சிவஞானம் அண்மையில் கருத்து தெரிவித்துள்ளார். ‘முதலமைச்சர் மீண்டும் ஒரு தடவை நீதிமன்றம் ஏறுவதை நான் விரும்பவில்லை. இச்சபையும் ஏற்றுக்கொள்ளாது’ என்று சிவஞானம் கூறினார்.

விக்னேஸ்வரன் தன்னை முதலாவதாக ஒரு நீதியரசர் என்றே குறிப்பிடுகிறார். அவருடைய உத்தியோகபூர்வ கடிதங்களிலும் அப்படித்தான் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அவருடைய உரைகள் அடங்கிய தொகுப்பிற்கும் ‘ஒரு நீதியரசர் பேசுகிறார்’ என்றுதான் தலைப்பிடப்பட்டுள்ளது. பயங்கரவாத தடைச்சட்டத்தை தன்னுள் கொண்டிருக்கும் ஒரு நீதி பரிபாலன கட்டமைப்பிற்குள் அவர் வகித்த பதவிகளைவிட்டு அவர் பெருமைப்படுவதை இக்கட்டுரை விமர்சனத்தோடுதான் பார்க்கிறது. பயங்கரவாத தடைச்சட்டத்தினை தன்னுள் கொண்டிருக்கும் வரை இலங்கை தீவின் நீதி பரிபாலன கட்டமைப்பைத் தமிழ் மக்கள் இன சாய்வுடையதாகவே பார்ப்பார்கள்.

எனினும் விக்னேஸ்வரன் தனது நீதியரசர் என்ற பிம்பத்தைதான் தன்னுடைய சிறப்பு அடையாளமாக கருதுகிறார். தன்னுடைய அரசியலுக்குரிய அடித்தளமாகவும் கருதுகிறார். ஆனால் அதே சட்டத்துறைக்குள் அவருடைய எதிரிகள் அவருக்குப் பொறி வைத்துவிட்டார்கள். அவர் இப்பொழுது ஒரு சட்ட பொறிக்குள் சிக்கியுள்ளார். தன்னுடைய பலம் என்று அவர் கருதும் ஒரு தளத்திலேயே அவருடைய மாணவர் ஒருவரும் வயதால் மிக இளைய தொழில்சார் சட்டத்தரணிகளும் அவரை சுற்றி வளைத்துள்ளார்கள். அவருடைய பதவிக்காலம் முடிந்த பின்னரும் அவர் வழக்குகளை எதிர்நோக்க வேண்டிய அளவுக்கு நிலமை வந்துவிட்டது. இச்சட்டப் பொறிக்குள் இருந்து விடுவதற்கு சட்டத்திற்குள்ளால் மட்டும் சிந்தித்தால் போதாது அதற்கும் அப்பால் ஒரு தலைவருக்குரிய துணிச்சலோடும் தீட்சட்ணியத்தோடும் வெட்டொன்று துண்டிரண்டாக முடிவுகளை எடுக்க வேண்டும். இதை ஒரு சட்டப்பிரச்சனையாக அணுகாமல் அரசியல் விவகாரமாக அணுக வேண்டும்.

அவர் தன்னுடைய பலம் என்று கருதும் அறத்தையும் நேர்மையையும் நீதியையும்தான் அவருடைய பலவீனம் என்று அவரை எதிர்ப்பவர்கள் நம்புகிறார்கள். அவரை முகநூலிலும் ஊடகங்களிலும் விமர்சிக்கும் பலர் தங்களைத் தாங்களே கண்ணாடியில் பார்ப்பதுமில்லை. தமது இறந்த காலத்தை தராசில் வைத்து நிறுப்பதுமில்லை. விக்னேஸ்வரனை எதிர்ப்பதனாலேயே தங்களுக்கு பிரபல்யமும் அந்தஸ்தும் கிடைத்துவிடும் என்று ஒரு பகுதியினர் கருதுகின்றனர். ஒரு நீதியரசராக அவரை நெருங்க முடியாத பலரும் அவர் முதலமைச்சராக சறுக்கும் இடங்களில் அவரை கீழ்த்தரமாக விமர்சித்து வருகிறார்கள். இவ்வாறு அவர் பலம் என்று கருதுவதையே அவருடைய பலவீனமாக கருதும் எதிர்த்தரப்பை அவர் எப்படி வெற்றி கொள்ளப் போகிறார்?

கடைசியாக நடந்த பேரவைக் கூட்டத்தில் அவர் முன்வைத்த நான்கு தெரிவுகளில் ஒன்றை சுமந்திரன் கெட்டித்தனமாக பற்றிப் பிடித்துக் கொண்டார். ஒரு மக்கள் அமைப்பைக் கட்டியெழுப்பி அதற்குத் தலைமை தாங்குவது என்பதே அது. விக்னேஸ்வரன் ஒரு வெகுசன அமைப்பை கட்டியெழுப்பினால் அதில் தானும் இணைய விரும்புவதாக சுமந்திரன் கூறுகிறார். விக்னேஸ்வரன் அத் தெரிவை தேர்ந்தெடுக்க மாட்டார் என்று சுமந்திரன் நம்புகிறார். இவ்விடயத்தில் சுமந்திரன் விக்னேஸ்வரனின் ஆளுமையை சரியாக விளங்கி வைத்திருக்கிறார் என்று எடுத்துக்கொள்ளலாமா? விக்னேஸ்வரனின் இறந்தகாலம் வாழ்க்கை ஒழுக்கம் என்பவற்றைத் தொகுத்து பார்க்கும் ஒருவர் சுமந்திரன் நம்புவது சரி என்ற முடிவிற்கே வருவார். தமிழ் மக்கள் பேரவையிலுள்ள முக்கியஸ்தர்களின் வாழ்க்கை ஒழுக்கம் இறந்தகாலம் துறைசார் நிலையான நலன்கள் போன்றவற்றை தொகுத்துப் பார்க்கும் எவரும் அப்படித்தான் முடிவெடுப்பார். ஒரு மக்கள் இயக்கத்திற்கு தலமை தாங்குவதற்கு தேவையான துணிச்சலும் ஒழுக்கமும் தன்னிடம் இருப்பதாக விக்னேஸ்வரனும் இதுவரையிலும் எண்பித்திருக்கவில்லை. பேரவையும் எண்பித்திருக்கவில்லை. என்றபடியால்தான் சுமந்திரன் அந்த சவாலை முன்வைக்கிறார்.

இக்கட்டுரையின் தொடக்கத்தில் கூறப்படட சிவில் அதிகாரி பல மாதங்களுக்கு முன்பு என்னிடம் சொன்னார் ‘விக்கி ஒரு மக்கள் இயக்கத்துக்கு தலைமை தங்குவது நல்லது. அந்த இயக்கம் தமிழ் வாக்காளர்களின் அபிப்பிராயத்தைத் தீர்மானிக்கும் சக்தி மிக்கதாக இருக்க வேண்டும். அதாவது தேர்தல் அரசியலைக் கட்டுப்படுத்த வல்லதாக இருக்க வேண்டும்’ என்று. ஆனால் விக்னேஸ்வரானால் அப்படியொரு மக்கள் இயக்கத்தைக் கட்டியெழுப்ப முடியுமா? இக்கட்டுரை எழுதும் இக்கணம் வரையிலும் விக்கி ஒரு தேர்தல் மைய அரசியல்வாதியாகவே தெரிகிறார். தமிழ் மக்கள் பேரவையும் அதிகபட்சம் ஒரு பிரமுகர் மைய அமைப்பாகவே தெரிகிறது.

‘சில நாட்களுக்கு முன் வவுனியாவிலுள்ள ஒரு நண்பர் கைபேசியில் கதைத்தார். விக்னேஸ்வரன் மாகாண சபைக்கு அதிகாரம் இல்லை என்று கூறுகிறார். அண்மையில் ஒரு மாகாண சபை ஊழியரின் திருமணத்திற்கு செல்வதற்காக அவர் சபை அமர்வை தவிர்த்தார். இது பற்றி நிருபர்கள் கேட்ட போது திருமணம் வாழ்க்கையில் ஒரு முறைதான் வருமென்று கூறினார். அதாவது ஒரு திருமண நிகழ்வை விடவும் சபை அமர்வை முக்கியமில்லை என்று கருதுகிறார். அப்படியென்றால் அதிகாரமற்றதும் முக்கியத்துவமற்றதுமாகிய ஒரு மாகாண சபையில் மறுபடியும் முதலமைச்சராக வர அவர் ஏன் விரும்புகிறார்? ‘ என்று. தமிழ் மக்கள் பேரவையை சேர்ந்த ஒரு செயற்பாட்டாளரும் இடைக்கிடை என்னிடம் கூறுவார் ‘விக்கியை முதலமைச்சராக்குவதுதான். பேரவையின் இலட்சியம் என்றிருக்கக் கூடாது’ என்று. ஆனால், அதிகாரமற்றதே எனினும் ஒரு முதலமைச்சராக விக்னேஸ்வரன் இருப்பதனால்; நன்மைகள் உண்டு என்று நம்புவோர்; பின்வரும் காரணங்களைச் சுட்டிக்காட்டுகிறார்கள்.

1. அந்த இடத்திற்கு பிழையான ஒருவர் வருவதைத் தடுக்கலாம். அதாவது மாகாண சபைக்கு அதிகாரம் உண்டு என்று நம்பும் ஒருவர் அந்த இடத்தை அடைந்தால் அது தமிழ் மக்களுக்களின் தன்னாட்சிக் கோரிக்கையை பலவீனப்படுத்திவிடும். 13வது திருத்தத்தில் போதியளவு அதிகாரம் இருப்பின் தமிழ் மக்கள் நந்திக் கடற்கரையைக் கடந்து வந்திருக்கத் தேவையில்லை. எனவே உச்சமான தன்னாட்சி அதிகாரங்களைக் கேட்டு எதிர்க்குரல் கொடுக்கும் ஒருவரே முதலமைச்சராக வரவேண்டும்.
2. ஒரு முதலமைச்சராக விக்னேஸ்வரன் முன்வைக்கும் எதிர்க்கருத்துக்களுக்கு ஓர் அங்கீகாரம் உண்டு. சட்டவாக்க வலுவுடையது என்று கூறப்படும் ஓர் அவையின் முதல்வர் அதன் சட்டவாக்க வலு போதாது என்று கூறும் போது அதை உலகம் கவனிக்கும். மேலும் முதலமைச்சர் என்ற பதவி வழி சந்திப்புக்களுக்கூடாக தமிழ் மக்களின் அபிலாசைகள் வெளிகொண்டு வரப்படும்.
3. ஒரு முதலமைச்சராக இருந்து கொண்டு ஒரு பேரவை போன்ற அமைப்பிற்கு அவர் தலைமை தாங்கும் போது அதற்கு ஓர் அந்தஸ்த்து கிடைக்கும். பேரவை ஒரு கட்சியில்லை என்றே அவர் கூறுகிறார். எல்லாத் தரப்பும் இடை ஊடாடும் பரப்பு அது. அது கறுப்பு வெள்ளைப் பரப்பல்ல. ஒப்பீட்டளவில் சாம்பல் நிற பண்பு அதிகமுடைய ஒரு பரப்பு அது. அப்படி ஓர் அமைப்பு தமிழ் மக்களுக்கு அவசியம.; அதில் ஆயிரம் விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டம் எனும் நெருப்பை அணையாது பாதுகாத்து உரிய அடுத்த கட்டத் தலைமையிடம் ஒப்படைக்கப் பேரவை போன்ற அமைப்பு அவசியம். விக்னேஸ்வரனைப் போன்ற பிரமுகர் மைய அரசியல்வாதிகளும் அவசியம்.  யுத்தத்தில் இனப்படுகொலை மூலம் தோற்கடிக்கப்பட்ட ஒரு மக்கள் கூட்டம்,தொடர்ந்தும் யுத்தமற்ற வழிகளில் கட்டமைப்பு சார் இனப்படுகொலைக்கு உள்ளாகிவரும் ஒர் அரசியற் சூழலில் யுத்தத்தை உடனடுத்து வரும் காலத்தின் அரசியல் இப்படித்தான் இருக்கும்.இது ஒரு இடைமாறு காலகட்டம். இந்த இடைமாறு காலகட்டத்தில் பாதுகாப்பான இறந்த காலத்தைப் பெற்ற பிரமுகர்களே தலைவர்களாக இருப்பர்.இவர்கள் உரிமைப் போராட்டத்தின் நெருப்பை குறைந்த பட்சம் அணையவிடாது பாதுகாத்தாலே போதும்.
4. ஏற்கனவே கூறப்பட்டது போல விக்னேஸ்வரன் ஒரு பிரமுகர் மைய அரசியல்வாதிதான். அவருடைய கொள்ளளவு அவ்வளவுதான். அவரிடம் அதிகமாக எதிர்பார்க்கக் கூடாது. ஓர் இடைமாறு கால கட்டத்தின் நேர்மையான குரல் அவர். இவ்இடைமாறு கால கட்டத்தில் நெருப்பை அணைய விடாமல் பாதுகாத்தாலே போதும். அதை ஒரு முதலமைச்சராக இருந்து கொண்டுதான் செய்ய முடியும் என்றால் ஒரு கட்டம் வரை தமிழ் மக்கள் அதை ஒரு இடைமாறு காலகட்ட ஏற்பாடாக ஏற்றுக்கொள்ளலாம்.
5. அவர் ஒரு முதலமைச்சராக வந்தால் அது தமக்கு பாதகமானது என்ற கருதியதால் தான் ஒரு மக்கள் இயக்கத்திற்கு தலைமை தாங்குமாறு சுமந்திரன் கேட்கிறார். இதை மறு வழமாக சொன்னால் எதை அவரால் செய்ய முடியுமோ அதைச் செய்யாது எது அவரால் முடியாதோ அதை ச்செய்யுமாறு தூண்டுகிறார். தேர்தல் மைய அரசியலை விடவும் மக்கள் மைய அரசியல் கடினமானது என்று அவர் கருதுகிறார். விக்னேஸ்வரனை தேர்தல் மைய அரசியலில் இருந்து அகற்றுவதால் வரக்கூடிய நன்மைகளை கருதி அவர் அவ்வாறு கூறுகிறார். அதாவது தேர்தல் களத்தில் நிற்கும் விக்னேஸ்வரனுக்கு அவர் பயப்படுகிறார் என்று பொருள்.

எனவே தனது பலமெது? பலவீனமெது? எனக் கண்டு அதற்குரிய முடிவை விக்னேஸ்வரன் எடுக்க வேண்டும். அவருடைய பதவியின் இறுதிக் கட்டத்தில் அவர்; பலம் என்று கருதிய ஒரு களத்திலேயே அவருக்குப் பொறி வைக்கப்பட்டிருக்கிறது. அவர் அவமதிக்கப்படுகிறார்.இந்தஇடத்தில் அவர் தனது மெய்யான பலத்தை கண்டுபிடிக்க வேண்டும். அவரை நேசிக்கும் மக்களே இப்பொழுது அவருடைய மெய்யான பலம். அவரை அவமானப்படுத்துவோருக்கு எதிரான தோற்கடிக்கப்பட முடியாத பலமும் அதுதான். ஒரு முதலமைச்சராக மீண்டும் தெரிவு செய்யப்பட்டால் அது தமக்கு பாதகமானது என்று கருதுபவர்கள் அவரைத் தேர்தல் அரங்கிலிருந்து அகற்றத் துடிக்கிறார்கள். கெட்டிக்காரத் தலைவர்கள் எப்பொழுதும் எதிரி விரும்புவதை செய்வதில்லை.

Spread the love
 
 
      

Related News

3 comments

Logeswaran September 16, 2018 - 1:04 pm

விக்னேஸ்வரன் அறிவு, அனுபவம், திறமை, உறுதி, நேர்மை, துணிவு மற்றும் வெளிப்படைத்தன்மை கொண்டவர்.

அவர்
1.ஒரு நீதிபதி,
2.சட்ட நிபுணர்,
3.முதல் அமைச்சர்.
4.மக்கள் பலம் கொண்டவர்,
5.மக்கள் குரலாய் இருப்பவர்,
6.அதிக வாக்குகளை பெற்றவர்,
7.தேர்தல் விஞ்ஞாபனத்தை மதிப்பவர்,
8.கலந்துரையாடி விவாதம் செய்யக்கூடியவர்,
9.உள்ளூர் மற்றும் உலகளவில் மதிக்கப்படுபவர்,
10.பல பண்பாட்டு சமுதாயத்தில் பணியாற்றி வாழ்ந்தவர்,
11.தமிழ், ஆங்கிலம் மற்றும் சிங்கள மொழிகளில் மிகவும் சரளமாக உள்ளவர்,
12.தமிழர்களின் உரிமைகள் மற்றும் அரசியல் தீர்வை எடுக்க துணிவாக தூண்டுகின்றவர்,
13.சிலரின் எதிர்ப்புக்கும் மத்தியிலும் மாகாண சபையை தன்னால் இயன்ற அளவு நடத்தியவர் மற்றும்
14.ஆபத்து இருந்தும் மனித உரிமை மீறல்கள் மற்றும் கொடூர குற்றங்கள் பற்றி விழிப்புணர்வை உருவாக்குகின்றவர்.

தமிழ் இனத்தின் நன்மைக்கு அவர் பெரிய அளவில் பயன்படக்கூடியவர். அவருக்கு எதிராக வழக்கு தொடர்வது வருந்தத்தக்கது.

சமீபத்தில் விக்னேஸ்வரன் கூறியது: “மேன்முறையீட்டு நீதிமன்றக் கருத்தின் படி எந்த ஒரு அமைச்சரையும் நியமிக்கவோ, பதவிநீக்கவோ எனக்குரித்தில்லை. ஆளுநருக்கே அந்த அதிகாரம் உண்டு. அவ்வாறு நீதிமன்றத் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே அந்தப் பணியைச் செய்யவேண்டியவர் ஆளுநரே. ஆனால் நீதிமன்றை அவமதித்த குற்றச்சாட்டு என் மீது சுமத்தப்பட்டுள்ளது”. சிங்கள நீதி மன்றத்தில் நீதி கிடைக்காமல் போகலாம். இதை மாற்றி அமைக்க சம்பந்தப்பட்டவர்கள் ஒரு உடன்படிக்கைக்கு வந்து வழக்கை திரும்பப் பெற வேண்டும்.

Reply
LUJA September 18, 2018 - 5:51 am

இருந்தும் என்ன நிர்வாக திறன் இல்லையே. அவரிடம் எந்தவிதமான ஆளுமை திறனும் இல்லை. இருந்தால் வெளிப்படுத்தியிருக்கமாட்டாரா?

Reply
Logeswaran September 18, 2018 - 6:32 pm

ஆரம்பத்தில் மாகாண சபையை நிர்வகிப்பது எப்படி மற்றும் ஆளுமையை எப்படி முன்னேற்றுவது என்பது பற்றி அனைத்து முதலமைச்சர்களுக்கும் அரசாங்கம் பட்டறைகளை நடத்த வேண்டும்.

பொறுப்புகளை பட்டியலிட்டு ஒத்த அதிகாரத்தை முதலமைச்சர்களிடம் அரசாங்கம் ஒப்படைக்க வேண்டும்.

இதன் பின் நிர்வாகம் மற்றும் ஆளுமைத் திறனை செயல்திறனுடன் வெளிப்படுத்துவது இலகுவாக இருக்கும்.

Reply

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More