அமைச்சர்கள், அமைச்சுக்கள் எதிர்வரும் ஓராண்டு காலத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வாகனங்களை இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட உள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.
அத்துடன் அரச துறை உத்தியோகத்தர்கள் 06 மாதங்களுக்கு வாகன இறக்குமதி செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் என்று நிதியமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதேவேளை வாகன இறக்குமதிக்காக கடன் பத்திரம் ஆரம்பிக்கும் போது அவற்றின் பெறுமதியின் 200 வீத பணம் வைப்புச் செய்யப்பட வேண்டும் என்றும் நிதியமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அத்துடன் கொள்வனவு செய்யும் வாகனத்தின் மொத்தப் பெறுமதியில் 70 வீதத்தை லீசிங் செய்ய இதுவரை அனுமதிக்கப்பட்ட போதும், தற்போது அந்த தொகை 50 வீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
இதற்கு மேலதிகமாக தொலைக்காட்சி, குளிரூட்டிகள், கைத்தொலைபேசிகள், பாதனி வகைகள், வாசனைத் திரவியங்கள் உள்ளிட்ட பொருட்கள் இறக்குமதிக்காக கடன் பத்திரம் ஆரம்பிக்கும் போது 100 வீத பண வைப்பு காட்டப்பட வேண்டும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதேவேளை எதிர்வரும் ஒன்றரை ஆண்டு காலத்துக்கு அமைச்சர்களுக்கோ அல்லது அமைச்சுக்கோ புதிய வாகனங்கள் வௌிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதை முழுமையாக தடை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர கூறியுள்ளார். இந்த நாட்டு பொருளாதாரத்தை பலப்படுத்துவதற்காக எதிர்வரும் நாட்களில் மேலும் முக்கிய பல தீர்மானங்கள் எடுக்க வேண்டி ஏற்படும் என்றும் நிதியமைச்சர் கூறியுள்ளார். மாத்தறை றாகுல வித்தியாலயத்தில் நடைபெற்ற பரிசளிப்பு நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.