பாதாள உலக குழு தலைவர் மாகந்துரே மதூசுடன் டுபாயில் கைதான பாடகர் அமல் பெரேரா மற்றும் அவரது புதல்வர் நதீமால் பெரேரா ஆகியோர் ஒத்தி வைக்கப்பட்ட தண்டனையுடன் நாட்டை வந்தடைவார்கள் என சட்டத்தரணி உதுல் பிரேமரத்ன தெரிவித்துள்ளார்.
குறித்த நபர்கள் இம்மாதம் 27 ஆம் திகதி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன் பயங்கரவாத தடுப்பு பிரிவின் முன்னாள் பிரதி காவல்துறை மா அதிபர் நாலக டி சில்வாவுடன் தாம் எந்தவித தொடர்புகளையும் கொண்டிருக்கவில்லை எனவும் நாடு திரும்பியதும் அது தொடர்பான விளக்கங்களை வழங்கவுள்ளதாகவும் அமல் பெரேரா தெரிவித்ததாகவும் சட்டத்தரணி உதுல் பிரேமரத்ன தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பாதாள உலக குழு தலைவர் மாகந்துரே மதூஸ் உள்ளிட்ட தரப்பினர் தொடர்பாக முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு உதவியளிப்பதற்காக காவல்துறை போதைப் பொருள் ஒழிப்பு பிரிவு, தீர்க்கப்படாத குற்றச் செயல்களை விசாரணை செய்யும் பிரிவு, குற்றத்தடுப்பு விசாரணை திணைக்களம் மற்றும் காவல்துறை விஷேட அதிரடிப்படையினரை உள்ளடக்கிய விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு செயலாளரினால் நியமிக்கப்பட்டுள்ள குறித்த குழுவில் ஐந்து அல்லது ஆறு பேர் அடங்கக் கூடும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது