தமிழ் தேசிய கூட்டமைப்பு புலி நீக்க அரசியலையோ , தமிழ் தேசிய நீக்க அரசியலையோ முன்னெடுக்கவில்லை. மரத்தில் குருவிச்சைகள் வளரலாம். அதற்காக மரத்தை வெட்டாது. குருவிச்சையை வெட்ட வேண்டும். என தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் , யாழ்.தேர்தல் மாவட்ட வேட்பாளருமான ஈ. சரவணபவன் தெரிவித்துள்ளார்.
யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார்.
அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
தமிழ் மக்களின் உரிமைகளை பெற நாளும் உழைத்துக்கொண்டு தான் இருக்கிறோம். கடந்த காலங்களில் பேரினவாத அரசாங்கம் எல்லாவற்றையும் தமிழர்களுக்கு கிடைக்காமல் தடுத்தது. அந்த நேரங்களில் எமது பொருளாதாரம் கல்வி என்பன மிகவும் பின் தங்கி போனது. தற்போதைய நிலையில் நாம் மக்களுக்கான அபிவிருத்தியையும் நாம் முன்னெடுத்து செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். அதற்காக நாம் இணங்க அரசியலை முன்னெடுத்து செல்ல போவதில்லை.
எமக்கான அரசியல் தீர்வுக்கான அரசியலமைப்பின் திருத்தம் தொடர்பிலான நகல்கள் மீதான விவாதங்கள் நடைபெற விருந்த தருணத்தில் தான் பாராளுமன்றம் கலைக்கப்பட்டது. எமக்கான பல தீர்வுகள் கடைசி நேரங்களில் இவ்வாறு இல்லாமல் கை நழுவி போயிருக்கிறது. நாங்கள் ஏற்க கூடிய தீர்வொன்றை பெற்றுக்கொள்ள என்ன முடியுமோ அதனை எம்மால் தொடர்ந்து முன்னெடுக்க முடியும்.
சுமந்திரனுக்கு வாக்களிக்க வேண்டாம் என செய்தி வெளியிட்டமை தொடர்பில்,
சுமந்திரனுக்கு வாக்களிக்க வேண்டாம் என ஒருவர் ஊடக சந்திப்பில் கூறிய கருத்தை தான் உதயனும் செய்தி வெளியிட்டு இருந்தது. உதயன் மாத்திரமல்ல ஏனைய ஊடகங்களிலும் அந்த செய்தி வெளியாகி இருந்தன. ஆனால் உதயனில் வெளிவந்த செய்தியை மாத்திரம் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டமை தொடர்பில் அதனை முக்கியத்துவம் கொடுத்து காவி சென்றவரை தான் கேட்க வேண்டும்.
நல்லதை வெளியிட்டால் அதனை அப்படியே ஏற்றுக்கொள்ளவதும், விமர்சித்தால் அதற்கு எதிராக கருத்து கூறுவதும் வழமையாக வந்து விட்டது. ஆனால் அரசியல் வாதிகளிடம் முதிர்ச்சி தன்மை உடையவராக நடந்து கொள்ள வேண்டும்.
என் மீது நீண்டகாலமாக ஆதாரமற்ற குற்றசாட்டு முன் வைக்கப்படுகின்றது.
என் மீதே பல ஆதாரங்கள் இல்லாத குற்றசாட்டுக்களை முன் வைக்கின்றார்கள். நான் ஒரு நிதி நிறுவனத்தின் இயக்குனர் என டக்ளஸ் பொய் குற்றசாட்டை தொடர்ந்து முன் வைத்து வருகின்றார். கல்வி யறிவு குறைந்தவர்களுக்கு விளக்கம் சொல்ல முடியாது என விட்டு விட்டேன். இப்போது சில தவ்வல்கள் அதனை காவி திரிகிறார்கள். என் மீது சந்தேகம் கொண்டவர்கள் அந்த நிதி நிறுவனம் தொடர்பில் மத்திய வங்கியிடம் பதிவுகள் இருக்கின்றது அதுகளை பரிசோதித்து பார்க்கலாம்.
ஆயுதம் ஏந்தி போராட வைத்தது யார் ?
நாங்கள் ஆயுதம் ஏந்தி போராட வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு தள்ளப்பட்டோம். எம் மீது ஆயுதம் கொண்டு அடக்கு முறைகளை பிரயோகித்ததால் தான் ஆயுதம் ஏந்தினோம். ஆயுதம் ஏந்திய பின்னர் தான் அரசாங்கம் இறங்கி வந்தது. எங்களுக்காக அவர்கள் அர்ப்பணிப்புக்களை செய்துள்ளனர். அவர்களை விமர்சிக்க கூடாது. அவர்கள் எங்கே விட்டு சென்றார்களோ அங்கிருந்து நாம் இலக்கை நோக்கி நகர வேண்டும். ஆயுத போராட்டத்தை மக்களும் ஏற்றுக்கொண்டார்கள், அதனால் தான் அவர்களை காட்டி கொடுக்காமல் மக்கள் பாதுகாத்தனர்.
சாத்வீக முறையில் தொடங்கி ஜனநாயக வழிக்கு சென்ற பின்னரே ஆயுத போராட்டத்தை நோக்கி நகர்ந்தார்கள். பின்னர் அது கள்ளம் கபட தனமாக மௌனிக்கப்பட்டது. மக்களுக்கு உரிமைகளை பெற்றுக்கொடுக்க சேவை செய்ய என வந்தவர்கள் நாம் கவனமாக முதிர்ச்சியான தகவல்களை அவர்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும்.
தமிழரசு கட்சி யாரையும் விலக்கவில்லை
தமிழரசு கட்சி யாரையும் விலக்கவில்லை. கட்சியில் இருந்து சென்றவர்கள் எல்லாம் தாமாக விலகி சென்றவர்கள். ஆனாலும் கட்சியை விட்டு யாரையாவது விலக்குவது தொடர்பில் கட்சி தலைவர் செயலாளர் தான் முடிவெடுக்க முடியும்.
அரசாங்கம் புலி நீக்க அரசியலை முன்னெடுக்கிறது.
கரும்புலிகள் தினத்தன்று குடாநாட்டில் இராணுவம் குவிக்கப்பட்டு , அன்றைய தினம் அது பற்றி எவரும் பேச நினைவு கூற விட கூடாது என்பதில் முனைப்பாக இருந்தார்கள். நினைவேந்தல்கள் புலிகளை மீள் நினைவூட்டும் என யோசிக்கின்றார்கள். புலி நீக்க அரசியல் செய்வதற்கு அது தடங்கலாக இருக்க போகிறது.
இந்த அரசாங்கம் புலி நீக்க அரசியல் மற்றும் தமிழ் தேசிய நீக்கம் ஆகியவற்றை முன்னெடுத்துள்ளார். அதன் முதல் கட்டமாக ஊடக அடக்குமுறைகளையும் ஆரம்பித்துள்ளார்கள். தேர்தல் காலங்களில் என்ன செய்ய போகின்றார்கள் என தெரியவில்லை. இக்கால கட்டத்தில் விளைவுகள் பாரதூரமாக இருக்கலாம்.
ஊடக அடக்குமுறைகள் ஆரம்பம்.
கடந்த காலத்தில் மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாகவும் , கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்த போது உதயன் உட்பட ஊடகங்கள் மீது வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டு இருந்தது. உதயன் மீதான வன்முறைகளுக்கு எதிராக எந்த விசாரணைகளும் முன்னெடுக்கப்படவில்லை. இது தொடர்பில் வெளிநாடுகளுக்கும் அறிவித்தோம். பிரிட்டனின் அப்போதைய பிரதமர் உதயன் அலுவலகத்திற்கு வந்தும் நேரிலும் பார்த்து சென்றார். தான் விசாரணைக்காக அழுத்தம் கொடுப்பேன் எனவும் உறுதி அளித்தார். ஆனால் இதுவரை எதுவும் நடக்கவில்லை.
இனிவரும் காலங்களில் வர போகும் அடக்குமுறைகளில் இருந்து ஊடகவியலாளர்கள் தம்மை பாதுகாத்து கொள்ள முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும். அடக்கு முறைகளுக்கு எதிராக வெளிநாடுகள் காது கொடுத்து கேட்பார்கள். நாம் கொடுக்கும் தகவல்களை ஆவணப்படுத்துவார்கள் அவ்வளவே. அதனால் ஆக போவது எதுவுமில்லை.
இங்கே அரசாங்கத்திற்கு வேலை செய்யும் சில அரசியல் வாதிகளும் உண்டு. அதனை ஊடகவியலாளர்கள் சிந்தித்து தம் பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள்.
ஏழு ஆசனங்களையும் வெல்லுவோம்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு நிச்சயமாக யாழ்.தேர்தல் மாவட்டத்தில் உள்ள ஏழு ஆசனங்களையும் வெல்லும். இது நிச்சயம். கூட்டமைப்புக்குள் சில பிரச்சனைகள் உள்ளது என்பது உண்மை ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் பிரச்சனை உண்டு. அதே போன்றே இதுவும் ஆனாலும் கூட்டமைப்பில் உள்ள அனைவரது இலக்கும் ஒன்று அதனை நோக்கியே அனைவரும் பயணிக்கிறோம். அதில் நாம் அனைவரும் தெளிவாக இருக்கின்றோம்.
யாழ்.மாவட்டத்தை பொறுத்த வரையில் ஐக்கிய தேசிய கட்சிக்கு இருந்த வாக்குகள் இரண்டாக பிளவு பட போகின்றது. ஐக்கிய தேசிய கட்சிக்கு சஜித்தின் கட்சிக்கும் என. அதேபோல சிறிலங்கா சுதந்திர கட்சிக்கு உள்ள வாக்குகள் , சுதந்திர கட்சிக்கு , வாசுதேவாவின் கட்சிக்கு , பெரமுன மற்றும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சிக்கு பிரி பட போகிறது.
அடுத்தது தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வாக்குகள் தான் முன்னணியினருக்கும் முன்னாள் வடமாகாண முன்னாள் முதலமைச்சரின் கட்சிக்கும் பிரி பட போகின்றது. எனவே தமிழ் தேசிய கூட்டமைப்பு ஏழு ஆசனங்களையும் வெல்லும். இந்த என்னுடைய கணிப்பு பொய்க்காது என நம்புகிறேன்.
பிரதமருக்கு பிரதம ஆசிரியர் மாம்பழம் கொடுக்கவில்லை.
உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் பிரதமர் மஹிந்த ராஜபக்சவிற்கு மாம்பழம் கொடுக்கவில்லை. கொடுத்தது நிறைவேற்று ஆசிரியர். அவர் பிரதமர் அலுவலகத்தில் வேலை செய்யும் தனது நண்பருக்கு கொடுத்த மாம்பழம். அதுவும் பிரதமர் அலுவலகத்திற்கு வெளியே வைத்து கொடுக்கப்பட்டது. அது எவ்வாறு உள்ளே வந்தது, எப்படி அவர் கைகளால் பிரதமருக்கு கொடுக்க வைக்கபப்ட்டது என்பது தொடர்பில் அறிந்து கொண்டோம். ஆனால் அதனை பொது வெளியில் கூற விரும்பவில்லை. மாம்பழம் கொடுத்த கதை இரண்டு நாள் சமூக ஊடகங்களில் வெளிவந்தன. பின்னர் அவற்றை காணவில்லை மாம்பழங்கள் அழுகி விட்டன போல
குருவிச்சையை வெட்டி விடுங்கள்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு புலி நீக்க அரசியலையோ , தமிழ் தேசிய நீக்க அரசியலையோ முன்னெடுக்கவில்லை. அது சில நடைமுறைகளை பார்த்து சிலர் தவறாக புரிந்து கொண்டுள்ளார்கள். . மரத்தில் குருவிச்சைகள் வளரலாம். அதற்காக மரத்தை விட்டாது. குருவிச்சையை வெட்ட வேண்டும். என தெரிவித்தார், #குருவிச்சை #தமிழ்தேசியகூட்டமைப்பு #சரவணபவன் #கரும்புலிகள்