Home உலகம் கூண்டுகளின் யுகம் முடியட்டும்!

கூண்டுகளின் யுகம் முடியட்டும்!

by admin

விலங்குகளை சிறு கூண்டுகளில் வாழ் நாள் பூராகவும் அடைத்துவைத்துப் பின்னர் கொல்லுகின்ற வேளாண் பண்ணை முறைகளுக்கு எதிராக ஜரோப்பாவில் தொடக்கப்பட்ட மக்கள் இயக்கம் ‘End the Cage Age’. “கூண்டு யுகம் முடிவுக்கு” என்ற அர்த்தம் தருகின்ற அந்த இயக்கம் விலங்குகளை கூண்டுகளில் அடைத்துத் துன்புறுத்துவதற்கு எதிராக ஐரோப்பா எங்கும் 1.4மில்லியன் கையொப்பங்களைச் சேகரித்துள்ளது.

கோழிகள், வாத்துக்கள், பன்றிகள், முயல்கள், ஆடுகள், பசுக்கன்றுகள் போன்றவற்றை மனிதாபிமானத்துக்குப் புறம்பான வழிகளில் வாழ் நாள் முழுவதும் சிறிய கூண்டுகளில் அடைத்து வைக்கின்ற தீவிர கூண்டுப் பண்ணை முறைகளைச் சட்ட ரீதியாகத் தடை செய்வதை இந்த இயக்கம் வலியுறுத்துகிறது.

ஒன்றிய நாடுகளில் இந்த இயக்கம் முன்னெடுத்த மக்கள் ஆதரவுப் பிரசாரம் காரணமாக இந்த விவகாரம் நாடாளுமன்றங்களின் விவாதங்களுக்கு வந்துள்ளது. ஜரோப்பாவில் 2027 ஆம் ஆண்டுக்குள் கூண்டுப் பண்ணைகளை முடிவுக்குக் கொண்டு வருவது என்ற பிரேரணைக் குப் பெரும்பான்மையான ஆதரவு கிடைத்துள்ளது.

ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் விவசாயக் குழுவில் (European Parliament’s Agriculture Committee) நடந்த வாக்கெடுப்பில் அதற்கு ஆதரவாக 39வாக்குகளும் எதிராக 4 வாக்குகளும்கிடைத்துள்ளன.

அடுத்தமாதம் நடைபெற வுள்ள ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் அமர்வில் இந்தப் பிரேரணையின் வெற்றி உறுதிப்படுத்தப்படும். ஆண்டுதோறும் மில்லியன் கணக்கான விலங்குகளைக் கூண்டுகளில் அடைக்கின்ற பண்ணை முறைகளைப் பேணி வருகின்ற பல நாடுகளின் நாடாளுமன்றங்களிலும் அது வாக்கெடுப்புக்கு விடப்பட வேண்டி உள்ளது.

அதன் பிறகு கூண்டுப் பண்ணை முறைமை 2027 ஆம் ஆண்டுக்குள் படிப்படியாக முடிவுக்குக் கொண்டு வரப்படும். உயிரினங்களை மிக நெருக்கமாக கூண்டுகளில் அடைப்பது வைரஸ் போன்ற தொற்று நோய்கள் பரவுவதற்கு வாய்ப்பாகின்றது.

உலகில் அடுத்தபெரும் தொற்று நோய் (pandemic) கூண்டுகளில் அடைத்துத் தீவிரமாக இனப்பெருக்கம் செய்யப்படும்(intensive farming)கோழிப் பண்ணைகளில் இருந்து தோன்றக் கூடும் என்று சூழலியல் மற்றும் தொற்று நோயியலாளர்கள் நம்புகின்றனர்.

உலகின் மொத்த விலங்கினங்களின்பத்து மடங்கு அதிகமான உயிரினங்களும் பறவைகளும் வேளாண் பண்ணை களிலும் மூடப்பட்ட கூண்டுகளிலும்வாழ்கின்றன. கூண்டுகளில் வளரும்விலங்குகளது தலைமுறைகள் வேகமாக மரபுமாற்றங்களுக்கு உள்ளாகுகின்றன. அது புதிய வைரஸ் கிரிமிகளைஎதிர்க்கும் சக்தியைக் குறைத்துவிடலாம்.

அத்துடன் விலங்குகளில் இருந்து வைரஸ் மனிதருக்குக் கடத்தப்படுவதற்கு கூண்டுப் பண்ணைகள் சாதகமான நிலையை தோற்றுவிக்கின்றன.கோவிட் 19 போன்ற அடுத்த புதிய “தொற்று நோய்ப் புயல்கள்” இத்தகைய கூண்டுப் பண்ணைகளில் இருந்து தோன்றக் கூடும். – இவ்வாறு நிபுணர்கள் எதிர்வு கூறுகின்றனர். பல நாடுகளிலும் மக்கள் உள்ளிருப்புக்கட்டுப்பாடுகளில் இருந்து வெளியே வந்து சுதந்திர வாழ்வைச் சுவாசிக்கத்தொடங்குகின்றனர்.

இந்தத் தருணத்தில் விலங்குகள், பறவைகளின் வாழ்வை முடக்கிவைக்கின்ற நிரந்தரமான “லொக்டவுண்” கூண்டுகள் முடிவுக்குக் கொண்டுவரப்படவேண்டும் என்று விலங்குகளது உரிமை பேணும் அமைப்புகள் குரல் எழுப்பி உள்ளன.

——————————————————————

குமாரதாஸன். பாரிஸ்.26-05-2021

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More