பிபிசியின் இந்திய அலுவலகங்கள் மீதான வருமான வரித்துறையின் நடவடிக்கை குறித்து பிரிட்டன் நாடாளுமன்றத்தில் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.
கேள்விகளுக்கு பதிலளித்த பிரிட்டன் அமைச்சர் ஒருவர், இந்திய அரசாங்கத்துடன் தொடர்பில் இருப்பதாகவும், இந்த விஷயம் கவனத்தில் எடுக்கப்பட்டிருப்பதாகவும் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
ஜனநாயக யூனியனிஸ்ட் கட்சியை சேர்ந்த பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் ஜிம் ஷனான் நாடாளுமன்றத்தின் பொது அவையில், பிபிசி அலுவலகங்களில் நடைபெற்ற வருமான வரித்துறை ஆய்வு குறித்து ‘அவசர கேள்வி’ ஒன்றை முன் வைத்தார்,
இந்த விவகாரத்தில் இந்திய தூதரக உயர் ஆணையருக்கு சம்மன் வழங்கப்படுமா என்று ஸ்ட்ராங்ஃபோர்ட் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரான ஷனான் கேள்வி எழுப்பினார்.
இந்த விவகாரத்தை “உன்னிப்பாக” கவனித்து வருவதாக பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது.
‘இந்தியா: தி மோதி க்வெஸ்டின்’ என்று பெயரிடப்பட்ட நரேந்திர மோதியை விமர்சிக்கும் ஆவணப்படம் வெளியான பிறகு இந்த ஆய்வு நடவடிக்கை நடைபெற்றது குறித்து விமர்சகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
“நாட்டின் பிரதமரை விமர்சிக்கும் ஆவணப்படத்தை வெளியிட்ட பிறகு அச்சுறுத்துவதற்காக வேண்டுமென்றே மேற்கொண்ட நடவடிக்கை இது என்பது தெளிவாக தெரிகிறது” என்று ஷனான் தெரிவித்தார்.
“ஆவணப்படம் வெளியான பிறகு, அதை திரையிடுவதைத் தடுப்பதற்கு ஒருங்கிணைந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஊடக சுதந்திரம் மற்றும் பத்திரிகையாளர்கள் சுதந்திரம் ஒடுக்கப்பட்டுள்ளது”
“பல்வேறு பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவர்கள் ஆவணப்படத்தை பல்கலைக்கழக வளாகத்தில் ஒளிபரப்ப முடிவு செய்தபோது பத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். சில இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, இணைய வசதி பாதிக்கப்பட்டது”
“இது பத்திரிகையாளர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் மத சிறுபான்மையினரின் உரிமையை பறிக்கும் செயல். இந்த ஆய்வு நடவடிக்கை ஏழு நாட்களுக்கு முன்னதாக நடைபெற்றது. ஆனால் வெளியுறவு, காமன்வெல்த் மற்றும் வளர்ச்சி அலுவலகம் இது குறித்து எதுவும் பேசவில்லை. அரசும் இது குறித்து எந்த அறிக்கையும் வெளியிடவில்லை” என்று அவர் மேலும் பேசினார்.
“இந்த விவகாரம் தொடர்பாக இந்திய தூதரக உயர் ஆணையருக்கு சம்மன் வழங்கப்பட இருக்கிறதா, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சரிடம் விவகாரத்தை எழுப்பவுள்ளீர்களா என்பதை அமைச்சர் சொல்லமுடியுமா?” என்று ஷனான் வினவினார்.
லேபர் கட்சியைச் சேர்ந்த இந்திய வம்சாவளி உறுப்பினரான தன்மான்ஜித் சிங் தேசியும் இந்த விவகாரம் குறித்து கேள்வி எழுப்பினார்.
பின்னர் பேசிய வெளியுறவு அலுவலக அமைச்சர் டேவிட் ரூட்லி, “முழுமையான மூலோபாய கூட்டணி மற்றும் 2030க்கான இந்திய பிரிட்டன் எதிர்கால உறவு திட்டம் ஆகியவற்றின் வழிகாட்டுதல்களின்படி அமைந்திருக்கும் பரந்த ஆழமான இருதரப்பு உறவு பல்வேறு வகையான விவகாரங்களை பயனுள்ள வகையில் இந்திய அரசுடன் விவாதிக்க வழிவகுக்கிறது. இந்த விவகாரத்தை தொடர்ந்து நாங்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறோம்.” என தெரிவித்தார்.
“பிரிட்டனின் அரசாங்கத்தின் தலையீடு இல்லாமல் பிபிசி சுதந்திரமாக செயல்படக்கூடிய ஒரு நிறுவனம்” என்றும் அவர் தெரிவித்தார்.
“இந்தியாவின் வருமான வரித் துறையால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு குறித்து நான் எந்த கருத்தையும் தெரிவிக்க இயலாது. இந்திய அலுவலகங்களில் உள்ள தனது ஊழியர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு இந்த பிரச்னையை முடிந்தவரை விரைவில் தீர்ப்பதற்கு இந்திய அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து வருவதாக பிபிசி தெரிவித்துள்ளது.
“ஜனநாயகத்தில் சட்டத்தை மதிப்பது என்பது முக்கியமான ஓர் அம்சமாகும். அதேபோலதான் ஊடக சுதந்திரமும் பேச்சு சுதந்திரமும். இது நாட்டை மேலும் வலுவாக மாற்றுகிறது.” என்றார் அவர்.
நிழல் அமைச்சர் (எதிர்க்கட்சியை சேர்ந்த உறுப்பினர்) ஃபேபியன் ஹமில்டன், “உண்மையான ஊடக சுதந்திரத்தை கொண்ட ஜனநாயகத்தில், விமர்சனங்களை தேவையில்லாமல் ஒடுக்க முடியாது. பேச்சு சுதந்திரத்தை எந்த சூழ்நிலையிலும் காக்க வேண்டும்.” என்று தெரிவித்தார்.
மேலும்,”இந்த வருமான வரி நடவடிக்கை எதற்காக நடந்தது என அதிகாரிகள் கொடுத்த விளக்கத்தையும் தாண்டி இது கவலை அளிக்கும் ஒரு விஷயமாக உள்ளது,” என்று தெரிவித்தார்.
“பிபிசி சர்வதேச அளவில் உயர் தரத்தில் செயல்படக்கூடிய ஒரு மதிப்புமிக்க ஒளிபரப்பு சேவையாகவும் நம்பகமான செய்திகளை வழங்குவதற்காகவும் புகழ்பெற்றது. எந்த அச்சுறுத்தலும் இல்லாமல் பிபிசி தனது செய்திகளை வழங்க வேண்டும்” என்றார்.
வருமான வரித் துறை மற்றும் பிபிசி சொன்னது என்ன?
கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த சர் ஜூலியன் லெவிஸ், இந்த ஆய்வு நடவடிக்கை “மிகுந்த வருத்தமளிக்கும் ஒன்று” என தெரிவித்தார்.
கடந்த வாரம் டெல்லி மற்றும் மும்பையில் உள்ள பிபிசி அலுவலகங்களை ஐடி அதிகாரிகள் மூன்று நாட்களாக சோதனையிட்டனர்.
இந்தியாவின் மத்திய நேரடி வரிகள் வாரியம், “நிறுவனத்தின் செயல்பாடு குறித்து பல ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. அதில் வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து பெற்ற நிதியை இந்தியாவில் வருமானமாக காட்டவில்லை, அதற்கு வரியும் கட்டவில்லை” என்று தெரிவித்தது.
“பல மாறுபட்ட மற்றும் முரண்பாடுகள் கண்டறியப்பட்டுள்ளது. ஊழியர்களின் வாக்குமூலம், டிஜிட்டல் தடயங்கள் மற்றும் ஆவணங்கள் மூலமாக சேகரிக்கப்பட்ட “முக்கிய ஆதாரம்” முழுமையாக ஆய்வு செய்யப்படும்”
அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி வருவதாக பிபிசி தெரிவித்தது.
பிபிசி ஆவணப்படத்தில் என்ன இருந்தது?
2002ஆம் ஆண்டில் நடந்த குஜராத் கலவரத்தின் போது மோதியின் நடவடிக்கைகள் குறித்து கேள்விகளை எழுப்பும், பிரிட்டன் வெளியுறவு அலுவலகத்திலிருந்து பிபிசி பெற்ற ‘வெளியிடப்படாத அறிக்கையை’ ஆவணப்படம் எடுத்துக்காட்டுகிறது.
இந்து யாத்ரீகர்கள் சென்ற ரயிலுக்கு தீ வைக்கப்பட்ட மறுநாள் கலவரம் தொடங்கியது. டஜன் கணக்கானோர் அதில் கொல்லப்பட்டனர். அதைத் தொடர்ந்து நடந்த வன்முறையில் 1,000க்கும் மேற்பட்ட மக்களில் பெரும்பாலும் முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்.
அந்த வன்முறையில் “தண்டனை கிடைக்காத சூழலுக்கு” மோதியே “நேரடி பொறுப்பு” என்று வெளியுறவு அலுவலக அறிக்கை கூறுகிறது.
2005ஆம் ஆண்டில், “மத சுதந்திரத்தின் கடுமையான மீறல்களுக்கு” பொறுப்பாகக் கருதப்படும் வெளிநாட்டு அதிகாரிகளின் நுழைவைத் தடுக்கும் சட்டத்தின் கீழ் மோதிக்கு அமெரிக்கா விசா மறுத்தது.
இந்த விவகாரத்தில் நரேந்திர மோதி நீண்ட காலமாகவே தன் மீதான குற்றச்சாட்டுகளை நிராகரித்து வந்ததுடன் கலவரத்திற்கும் அவர் மன்னிப்பு கேட்கவில்லை. 2013இல், உச்ச நீதிமன்ற குழுவும் அவர் மீது வழக்குத் தொடர போதுமான ஆதாரங்கள் இல்லை என்று கூறியது.
THANKS BBC