Home இலங்கை யாழ் . போதனா மகப்பேற்று விடுதியில் காணப்படும் குறைப்பாடுகளை நிவர்த்தி செய்யுமாறு கோரிக்கை

யாழ் . போதனா மகப்பேற்று விடுதியில் காணப்படும் குறைப்பாடுகளை நிவர்த்தி செய்யுமாறு கோரிக்கை

by admin

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று விடுதியில் காணப்படும் குறைபாடுகள் தொடர்பாக சமூக நல அமைப்பு ,யாழ்ப்பாணம் மாவட்ட தேசிய மக்கள் சக்தியின்  நாடாளுமன்ற உறுப்பினர்களை  கடந்த திங்கட்கிழமை சந்தித்து கலந்துரையாடியதுடன் மகஜர் ஒன்றையும் கையளித்துள்ளனர்.
இதன் போது இது தொடர்பான உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ்ப்பாணம் மாவட்ட தேசிய மக்கள் சக்தியின்  நாடாளுமன்ற உறுப்பினர்களான வைத்தியர் ஸ்ரீபவானந்தராஜா மற்றும் றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி ஆகியோர் உறுதி அளித்துள்ளனர்
கையளிக்கப்பட் மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
யாழ். போதனா மருத்துவமனையில் கடந்த 14 வருடங்களாக உரிய வசதிகளைக் கொண்ட மகப்பேற்று விடுதி இல்லாத நிலை காணப்படுகிறது.
2012ஆம் ஆண்டு மருத்துவமனையில் இருந்த பழைய மகப்பேற்றுக் கட்டடத் தொகுதியின் மேற்தளக் கொங்கிறீற் கூரையின் சிறு பகுதி உடைந்து ஒரு கட்டிலின் மீது விழுந்தது. அவ்வேளை அக்கட்டிலில் இருந்த தாய் வெளியே சென்றமையால் எந்த வித ஆபத்தும் நிகழவில்லை. இவ்விடயம் அன்றைய மருத்துவமனை நிருவாகத்தால் உடனடியாக சுகாதார
அமைச்சுக்குத் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அக்கட்டடம் ஆபத்தானதென்று அரச பொறியியலாளர்களால் பரிந்துரைக்கப்பட்டு மகப்பேற்று விடுதி இடித்து அகற்றப்பட்டது.
அன்று முதல் மகப்பேற்றுக்கு வரும் கர்ப்பிணித்தாய்மார் சாதாரண மருத்துவ விடுதியில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். சாதாரண விடுதி மகப்பேற்றுக்குரிய முறையில் மாற்றப்பட்டு மகப்பேற்று விடுதிகள் தற்காலிகமாக உருவாக்கப்பட்டன.
தற்போது 5 அலகுகளைக் கொண்ட பெண்ணோயியல் மற்றும் மகப்பேற்று விடுதிகள் யாழ். போதனா வைத்தியசாலையில் மிகவும் நெருக்கடியான சூழலில் இயங்குகின்றன. இதனால் கடந்த 12 வருடங்களாக பல்வேறு அசௌகரியங்களைக் கர்ப்பிணித் தாய்மார் எதிர்நோக்குகின்றனர்.
தற்போது மகப்பேற்றுக்கு வரும் தாய்மாரின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், அவர்களுக்குப் போதிய இடவசதி இன்மை காணப்படுகிறது.  அத்துடன் வட மாகாணத்தின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் நோயாளிகள் இங்கு அனுமதிக்கப்படுவதால்,
ஒரு புதிய மகப்பேற்று வளாகம் அமைப்பது அவசியமாகியுள்ளது.

தற்போதைய தற்காலிக மகப்பேற்று விடுதிகளில் உள்ள பிரச்சினைகள்:
1. இடவசதியின்மை:
நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ற அளவில் கட்டில்கள் இல்லாததால், பலர் தரையில் தங்க வேண்டிய நிலைமை. சில சந்தர்ப்பங்களில் நிலத்திலும் இடம் இல்லாத நிலை காணப்படுகிறது.
கட்டில்களைச் சுற்றியுள்ள இடம் குறைவாக இருப்பதால், மருத்துவக் குழுவின் செயற்பாடுகள் மற்றும் மாணவர்களின் கற்றல் பாதிக்கப்படுகிறது. நோயாளிகளுக்குத் தனியுரிமை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

குழந்தைகளுக்குத் தனியான தொட்டில் (Baby Cot) இல்லாமல் தாயுடன் கட்டிலில் உறங்க வைக்க வேண்டி உள்ளது.

மகப்பேற்றுக்கு பின்னரான மனநோய்கள் தற்போது அதிகம் என்பதால் அவர்களைப் பராமரிப்பதற்கான தனிப்பகுதி இல்லாமை.
முதல் பிரசவத்துக்கு வரும் தாய்மார் பலர் மருத்துவமனையின் இந்த நெருக்கடியான சூழலைப் பார்த்து இரண்டாவது குழந்தை வேண்டாம் என்று தவிர்க்கும் நிலைக்குச் செல்கின்றனர். இது எமது சமூகத்துக்கு நாம் செய்யும் பெரும் அநீதியாகும்.
2. அவசர சிகிச்சைப் பிரிவு எதிர்நோக்கும் பிரச்சினைகள்:
மகப்பேற்று விடுதிகளுக்காக தனிப்பட்ட அறுவைச் சிகிச்சைக்கான அறை இல்லாததால், அவசர சிசேரியன் அறுவைச் சிகிச்சைக்காக அதிக நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது.
அறுவைச் சிகிச்சை அறைகள் தொலைவில் இருப்பதால், அவசர சிசேரியன் அறுவைச் சிகிச்சை தாமதமாகிறது.
அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் போதுமான கட்டில்கள் இல்லாமை.
புதிய மகப்பேற்று வளாகம் அமைப்பதற்கான பரிந்துரைகள்:
1. விடுதிகள் மற்றும் இடவசதி:
போதிய இடவசதியுடன் கட்டில்கள் அமைத்து, அனைத்து நோயாளிகளுக்கும் கட்டில் வழங்கக் கூடியதாக இருக்க வேண்டும்.
குழந்தைகளுக்கான தனித் தொட்டில் (baby cot) ஒவ்வொரு கட்டிலுக்கும் இணைக்க வேண்டும்.
மகப்பேற்றுக்குப் பின்னான விடுதிப் பகுதியில் மகப்பேற்றுக்கு பின்னான மன நோய் உள்ள நோயாளிகளைப் பராமரிப்பதற்கான தனிப்பகுதி அமைக்க வேண்டும்.
ஒவ்வொரு விடுதிக்கும் தனியான உயர்சார்பு அலகு மற்றும் தனிமைப்படுத்தல் அலகு அமைக்கப்பட வேண்டும்.
கருப்பையகப் புற்றுநோய்ப் பிரிவுக்கு மற்றும் கருவுறாமைப் பிரிவுக்கு தனி விடுதிகள் அமைத்தல் வேண்டும்.
அவசர சிகிச்சைப் பிரிவின் வசதிகள்:

மகப்பேற்று விடுதிகளுக்காகத் தனிப்பட்ட அறுவைச் சிகிச்சை அறைகள். அவசரச் சூழல்களில் நுணுக்கமாகச் செயல்படக்கூடியதான மருத்துவ மையக்கட்டமைப்பு.
போதுமான கட்டில் வசதிகள் கொண்ட அதி தீவிர சிகிச்சைப் பிரிவு (ICU)
3. புதிய வளாகத்தின் பயன்கள்
நோயாளிகள் மற்றும் குழந்தைகளுக்கான உயர்தர சிகிச்சை வசதிகள்.

தொற்று நோய்கள் பரவாமல் தடுக்கும் மேம்பட்ட இடவசதி.
உடனடி அவசர சிகிச்சை வசதிகளால் விரைவான உயிர் காக்கும் முயற்சி.

மருத்துவ மாணவர்கள் மற்றும் ஊழியர்களுக்கான சிறந்த கற்றல் மற்றும் வேலைச் சூழல் பெரும் எண்ணிக்கையிலான நோயாளிகளுக்கு சேவையளிக்கக்கூடிய திறன்.

யாழ் போதனா வைத்தியசாலைக்கு ஒரு புதிய மகப்பேற்று வளாகம் அமைப்பது அவசர தேவையாகும். இது வட மாகாண மக்களுக்கு உயர்தர மருத்துவ சேவையை வழங்குவது மட்டுமல்லாமல், அடுத்த தலை முறைகளின் நலனை உறுதிப்படுத்தும்

யாழ். போதனா மருத்துவமனை முதிராக் குழந்தைகள் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு (Neonatal Intensive Care Unit) மகப்பேற்று விடுதிக்கு அருகில் தற்காலிக விடுதி வழங்குதலும் அனைத்து வசதிகளும் கொண்ட மகப்பேற்று விடுதித் தொகுதி
அமைத்தலும்

யாழ்ப்பாணத்தில் அண்மையில் ஏற்பட்ட அனர்த்தின் போது
(2024 நவம்பர்) ஏற்பட்ட பெருவெள்ளத்தில் மருத்துவமனையின் முதிராக் குழந்தைகள் அவசர சிகிச்சைப் பிரிவினுள் வெள்ளம்
சென்றமையால் அதன் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டன. இதன் ஒரு பகுதியை விபத்து அவசர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதனால் தாய்மார் பாலூட்டுவதற்காக நீண்ட தூரம் நடக்க வேண்டிய நிலையில் மிகுந்த அசௌகரியத்துக்கு உள்ளாகினர். குழந்தைகளுக்கு ஏற்படும் அவசர நிலையில் மருத்துவர்களால், ஏனைய சுகாதாரப் பணியாளர்களால் உரிய நேரத்தில் சிகிச்சை வழங்க முடியாத நிலை ஏற்பட்டது.

தற்போது உள்ள முதிராக் குழந்தைகள் அவசர சிகிச்சைப் பிரிவுக் கட்டடம் ஆனது உடைத்து அகற்றப்பட்ட மகப்பேற்றுக் கட்டடத் தொகுதியின் ஒரு பகுதியாகும்.

அண்மைய வெள்ளத்தால் சுவர்களில் ஈரக் கசிவு ஏற்பட்டு மின் ஒழுக்கு ஏற்பட்டது.

சிகிச்சை பெறும் சிசுக்களும் சுகாதார அபாயகரமான பணியாளர்களும் உயிர் ஆபத்தான நிலையை எதிர்நோக்கினர்.

இவ்வருடம் மேலும் இரு புயல்கள் வட பகுதியைத் தாக்கும் என்றும் வானிலை எதிர்வு கூறல்கள் தெரிவிக்கின்றன.

எனவே, தற்போதுள்ள முதிராக் குழந்தைகள் அவசர சிகிச்சைப் பிரிவை மகப்பேற்று விடுதிகள் 20, 21, 22 அமைந்துள்ள மருத்துவ விடுதியின் அதே தளத்தில் தற்காலிகமாக இயக்குவதற்கு  நடவடிக்கை மேற்கொள்ள தங்களது ஆலோசனையையும் உதவியையும் எதிர்பார்க்கின்றோம் என அந்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More