யாழில். மோட்டார் சைக்கிளில் சென்ற யுவதி ஒருவரை வழிமறித்த கும்பல் ஒன்று அவரது மோட்டார் சைக்கிளை தீ வைத்து கொளுத்தி விட்டு தப்பி சென்றுள்ளது.
ஆனைக்கோட்டை மூன்றாம் கட்டையடியை சேர்ந்த 24 வயது யுவதி ஒருவர் யாழ்.நகர் பகுதியில் உள்ள இரும்பகம் ( ஹாட்வெயார்) ஒன்றில் பணிபுரிகிறார். இன்று வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணியளவில் கடையில் இருந்து ஆனைக்கோட்டையில் உள்ள தனது வீடு நோக்கி சென்று கொண்டிருந்த போது , அவரது வீட்டுக்கு அருகில் வழிமறித்த மூன்று பேர் கொண்ட கும்பல் ஒன்று , யுவதியுடன் முரண்பட்டுள்ளது.
பின்னர் யுவதியை தாக்க முற்பட்ட போது யுவதி அவ்விடத்தில் மோட்டார் சைக்கிளை கைவிட்டு விட்டு அருகில் இருந்த வீட்டிற்குள் பாதுகாப்பு தேடி ஓடியுள்ளார்.
அதன் போது குறித்த கும்பல் மோட்டார் சைக்கிளை தீ மூட்டி கொளுத்தி விட்டு அவ்விடத்திலிருந்து தப்பி சென்றுள்ளது.
அதன் பின்னர் அயலவர்கள் ஒன்றிணைந்து மோட்டார் சைக்கிளின் தீயை அணைத்தனர். இருந்த போதிலும் மோட்டார் சைக்கிளில் பகுதிகளவில் எரிந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் மானிப்பாய் காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து , சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்தனர்