இலங்கை கட்டுரைகள் பிரதான செய்திகள்

மறந்து விட்டேமா கிழக்குப் பல்கலை துணைவேந்தர் ரவீந்திரநாத்தை? விசாரணை நடத்துமா அரசு? குளோபல் தமிழ் விசேட செய்தியாளர்

காணாமல் போய் இன்றுடன் 10 ஆண்டுகள் கடந்துவிட்டன
கொழும்பில் 2006 டிசம்பர் 15 இல் இலங்கை விஞ்ஞான முன்னேற்றச் சங்கக் கூட்டமொன்றில் கலந்துகொண்டு திரும்பியபோது இனம் தெரியாத ஆயுததாரிகளினால் கடத்தப்பட்ட கிழக்குப் பல்கலைக்கழக முன்னைநாள் துணைவேந்தர்  கலாநிதி சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் (பிறப்பு: பெப்ரவரி 22, 1951) காணாமல்போய் இன்றுடன் பத்து வருடங்கள் கடந்துவிட்டன.

கொழும்பில் 2006 டிசம்பர் 15 இல் இலங்கை விஞ்ஞான முன்னேற்றச் சங்கக்  மாநாட்டில் கலந்து கொண்டிருந்த போது தொலைபேசி அழைப்பொன்று அவருக்கு வந்ததது. அதனையடுத்து அவர் அங்கிருந்து வெளியேறியதாகவும் அவரைக் கடைசியாகக் கண்டவர்கள் கூறினர். இதன் பின்னர் ஒரு பல்கலைக்கழக துணைவேந்தர் என்றும் பாராது ஆயுததாரிகள் அவரைக் கடத்தினர்.

இவர் உபவேந்தர் பதவியில் இருந்து விலகினால் விடுவிக்கப்படுவார் என ஊடகங்களில் தகவல் வெளியிட்டு பதவியில் இருந்து விலகியபோதும் இன்னமும் விடுவிக்கப்படவோ அவரைப்பற்றிய தகவல்களோ  இதுவரையில் வெளியிடப்படவில்லை. கடத்தப்பட்ட ரவீந்திரநாத் வெலிகந்தவிற்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு 3 நாட்களின் பின்னர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

அவர் அநேகமாகக் கொல்லப்பட்டிருக்கலாம் என்றே அவரது உறவினர்கள் தெரிவித்தனர். பதவிப் பிரச்சினை என்ற பெயரில் நடைபெற்ற அரசியல் கொலை என்றும் இதனைக் குறிப்பிடுகின்றனர். அன்றைய அரசின் துணை இராணுவக் குழுவான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்களே இவரைக் கடத்தியிருக்கலாம் என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமையும் நினைவுகூரத்தக்கது.

இக்கடத்தல் குறித்து சர்வதேச மன்னிப்பு சபை வெளியிட்ட அறிக்கையில், “இராணுவத்தின் தீவிரக் கட்டுப்பாட்டுப் பகுதியில் இக்கடத்தல் நடைபெற்றுள்ளதால், பாதுகாப்புப் படையினருடன் நெருங்கிய தொடர்பில் உள்ளவர்களே இதனை மேற்கொண்டிருக்க வேண்டும் எனவும், இவர் சித்திரவதைக்குள்ளாக்கப்படும் ஆபத்து உள்ளதாகவும், ஏற்கனவே இதய நோய் உள்ளவர் என்பதால் இவரது உயிருக்கே இது ஆபத்தாக முடியலாம்” எனவும் எச்சரித்தது.

கிழக்குப் பல்கலைக்கழக ஆசிரியர்களும் ஊழியர்களும் இவரை விடுவிக்க்கோரி பணி நிறுத்தத்தை மேற்கொண்டனர். கிழக்குப் பல்கலையின் முன்னாள் உபவேந்தர் ரவீந்திரநாத்துக்கு என்ன நடந்தது? நீதி விசாரணை உடன் வேண்டும்! என  வந்தாறுமூலை வளாக முன்றலில் கடந்த வருடமும் கவனயீர்ப்புப் போராட்டம்  நடைபெற்றது. இவர் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புபட்டனர்  எனக் கூறப்படும் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் எனவும் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் வலியுறுத்தினர்.

ஒரு துணைவேந்தரே காணாமல் போகச் செய்யப்படக்கூடிய சூழல் என்பது ஜனநாயகம் வேருடன் அழிந்த கொடும் மனித உரிமைச் சூழல் என்பதை புரிந்துகொள்ள சரியான உதாரணமாகும். இது குறித்து இலங்கை அரசாங்கம் மௌளனமாக பத்து ஆண்டுகளைக் கடந்திருப்பது, என்பது, தமிழ் கல்வியியலாளர்களுக்குக்கூட எந்தப் பாதுகாப்பும் இந்த தீவில் இருக்கவில்லை என்பதை உணர்த்துகின்றது. இனவெறிக் கொலைகளுக்கு அனைத்து மட்டங்களும் பலிகொள்ளப்பட்டனர்.
இன்றைய சூழலில், கடந்த காலத்தில் இடம்பெற்ற ரவிராஜ் படுகொலை, யோசப் பரராஜயசிங்கம் படுகொலை போன்றவை குறித்து அரசாங்கம் விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில், கலாநிதி ரவீந்திரநாத் காணாமல் போகச் செய்யப்பட்டமை குறித்தும் சுயாதீன நீதி விசாரணை ஒன்றை அரசாங்கம் முன்னெடுத்து, துணைவேந்தரை கடத்திக் காணாமல் ஆக்கப்பட்டதன் பின்னணியை அம்பலப்படுத்தி, குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என்பதுவே அனைவரதும் எதிர்பார்ப்பாகும்.
குளோபல் தமிழ் விசேட செய்தியாளர்

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *