இலங்கை பிரதான செய்திகள்

யாழில் இருந்து சிதம்பரத்திற்கு கப்பல் சேவை ?

திருவாதிரை திருவிழாவுக்குச் சைவர்களுக்காகச் யாழில் இருந்து  சிதம்பரத்துக்குக் கப்பல் சேவை நடாத்த இலங்கை இந்திய அரசுகள் கூட்டு முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக ஈழம் சிவசேனை அமைப்பாளர் மறவன்புலவு சச்சிதானந்தன் அறிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பிலையே அவ்வாறு அறிவித்து உள்ளார். குறித்த செய்திக் குறிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது ,
புத்தர்கள் வழிபாட்டுப் பயணமாகக் கயா செல்ல அரசு வசதிகள் செய்கிறது. கிறிஸ்தவர்கள் வழிபாட்டுப் பயணமாக எருசலேம் செல்ல அரசு வசதிகள் செய்கிறது. இஸ்லாமியர் வழிபாட்டுப் பயணமாக மக்கா செல்ல அரசு வசதிகள் செய்கிறது.
சைவர்கள் வழிபாட்டுப் பயணமாகத் திருவாதிரைக்குச் சிதம்பரம் செல்ல அரசு வசதி செய்யவேண்டுமென வடக்கு ஆளுநரிடம் சிவசேனை கோரியது.இது தொடர்பில் இலங்கை வெளிநாட்டமைச்சருக்கு கடிதத்தை ஆளுநர் அனுப்பியிருந்தார். சைவர்களுக்காகத் திருவாதிரைக்குச் சிதம்பரத்துக்குக் கப்பல் விட பாதுகாப்பு அமைச்சுக்கும் கலாச்சார அமைச்சுக்கும் கடிதம் எழுதியிருந்தார்.
இதன் முடிவாக காங்கேசன்துறை காரைக்கால் கப்பல் சேவை திருவாதிரைக்குக் சாத்தியக்கூறு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2000 ஆண்டுகளுக்கு மேலாக ஈழத்துச் சைவர்களும் திருவாதிரை நாளில் சிதம்பரத்தில் கூடி வழிபட்டு வருவதாகவும் ஈழத்தவர் தங்குவதற்காக, ஞானப்பிரகாசர் குளத்தைச் சுற்றி ஈழத்தவர் தம் செலவில் அமைத்து அறம் வளர்க்கும் 30 திருமடங்கள் சிதம்பரத்தில் 300 ஆண்டுகளுக்கு மேலாக உள்ளதாகவும் அச்செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *