இந்தியா பிரதான செய்திகள்

தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு ”ட்ராக்யோஸ்டமி’ எனப்படும் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மூச்சுத் திணறல் காரணமாகவும் நுரையீரல் தொற்றின் காரணமாகவும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவரும் தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு ”ட்ராக்யோஸ்டமி’ எனப்படும் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மு. கருணாநிதி வியாழக்கிழமையன்று இரவு 11.30 மணியளவில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையான காவிரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு தொண்டையிலும், நுரையீரலிலும் தொற்று ஏற்பட்டிருப்பதாகவும் அவருக்கு மருத்துவர் குழு சிகிச்சை வழங்கப்பட்டுவருவதாகவும் மருத்துவமனை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டது.

அதற்குப் பிறகு, வெள்ளிக்கிழமையன்று பிற்பகல் மருத்துவமனை வெளியிட்ட செய்திக் குறிப்பில், அவர் மூச்சுவிடுவதை எளிதாக்குவதற்காக ‘ட்ராக்யோஸ்டமி’ எனப்படும் சிகிச்சை செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும், அவரது உடல் நிலை சீராக இருப்பதாகவும் அவருக்கு ஆண்டிபயோடிக் மருந்துகள் வழங்கப்பட்டுவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ட்ராக்கியோஸ்டமி என்றால் என்ன ?

ட்ராக்கியோஸ்டமி என்பது, கழுத்தில் துளையிட்டு சுவாச உதவிகளை வழங்கும் ஒரு சிகிச்சை முறையாகும். கருணாநிதிக்கு ஒவ்வாமை ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் அதனால், அவரைப் பார்க்க வருவதைத் தவிர்க்க வேண்டுமென்றும் கடந்த அக்டோபர் 25-ஆம் தேதி திமுக சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டது.

அதற்கு பிறகு, கடந்த டிசம்பர் 1-ஆம் தேதியன்று, ஊட்டச்சத்து மற்றும் நீர்ச்சத்துக் குறைவுக்காக கருணாநிதி காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

பின்னர், கடந்த டிசம்பர் 7-ஆம் தேதியன்று, உடல் நலக்குறைவால் சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி வீடு திரும்பினார்.

டிசம்பர் 7-ஆம் தேதியன்று, காவேரி மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்தியறிக்கையில் ஊட்டச்சத்து மற்றும் நீர்சத்து உதவிக்காக அனுமதிக்கப்பட்ட கருணாநிதியின் ஆரோக்கியத்தில் கணிசமான அளவு முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் மீண்டும் உடல்நலம் பாதிக்கப்பட்ட கருணாநிதி 15ஆம் தேதியன்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இன்று பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கருணாநிதி சிகிச்சைபெற்றுவரும் மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்தனர். திராவிட இயக்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரான கருணாநிதிக்கு தற்போது வயது 93.

BBC

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *