இலங்கை பிரதான செய்திகள்

யாழ்ப்பாண கோட்டையில் இருந்து இராணுவம் வெளியேறுமா ? தொல்லியல் திணைக்களம் நடவடிக்கை எடுக்குமா ?


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

தொல்லியல் திணைக்களத்தின் கட்டுபாட்டில் உள்ள யாழ்ப்பாண ஒல்லாந்தர் கோட்டையினுள் இராணுவத்தினர் தொடர்ந்து நிலை கொண்டுள்ளனர். யாழ்ப்பாண கோட்டையானது ஆசியாவிலையே சிறந்ததொரு கோட்டை என ஆய்வாளர்கள் குறிப்பிட்டு உள்ளனர். தற்போது கோட்டையுள்ள பகுதியில் முதலில்  போர்த்துக்கேயர்கள் கோட்டையை வடிவமைத்தனர்.

அதன் பின்னர் ஒல்லாந்தர் 1658 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 22ஆம் திகதி போர்த்துக்கேயர்களிடம் இருந்து கோட்டையை கைப்பற்றிய மறுநாள் அக் கோட்டையை இடித்தழித்து விட்டு  தற்போது உள்ள ஐங்கோண வடிவிலான கோட்டையை நிர்மாணித்தனர். ஒல்லாந்தர் காலத்தின் பின்னர் ஆங்கிலேயர்களால் கோட்டை கைபற்றப்பட்ட பின்னர் இலங்கை சுதந்திரம் அடையும் வரையில் ஆங்கிலேயரின் கைகளில் கோட்டை இருந்தது.

அதன் பின்னரான கால பகுதியில் உள்நாட்டு யுத்தம் ஆரம்பான கால பகுதிகளில் 1984 – 1987 ஆம் ஆண்டு கால பகுதியில் கோட்டை இலங்கை இராணுவத்தினர் வசம் இருந்தது. அதன் பின்னர் 1989ஆம் ஆண்டு இந்திய இராணுவம் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறிய பின்னர் கோட்டையில் நிலை கொண்டிருந்த இலங்கை இராணுவத்தினர் மீது போராட்ட இயக்கம் தாக்குதல் தொடுத்தன.

பல மாத கோட்டை முற்றுகை தாக்குதலின் பின்னர் கோட்டையில் இருந்த இலங்கை இராணுவம் வெளியேறியது. அதனை தொடர்ந்து யாழ்ப்பாண கோட்டை ஆதிக்க சின்னமாக கருதி விடுதலைப்புலிகளால் இடித்தழிக்கப்பட்டது.

அதன் பின்னர் 1995 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளிடம் இருந்து இலங்கை இராணுவத்தினர் யாழ்ப்பாணத்தை கைப்பற்றிய பின்னர் மீண்டும் கோட்டையை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். அதனை தொடர்ந்து 15 வருட காலமாக இராணுவத்தினர் கோட்டையில் நிலை கொண்டு இருந்தனர்.

யுத்தம் நிறைவடைந்த பின்னர் 2010ஆம் ஆண்டு கால பகுதியில் நெதர்லாந்து அரசாங்கம் இடித்தழிக்கப்பட்ட யாழ்ப்பாண கோட்டையை புனரமைப்பு செய்வதற்கு நிதியுதவி வழங்க முன்வந்து. 104 மில்லியன் நிதியுதவி வழங்கியது.

அதனை தொடர்ந்து கோட்டையின் புனரமைப்பு பணிகள் தொடங்கியதும் இராணுவத்தினர் கோட்டைக்குள் செல்வதற்கு அனுமதி வழங்கினார்கள்.

அதன் பின்னரான கால பகுதியில் தென்னிலங்கை சுற்றுலா பயணிகள் யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலா மேற்கொள்ள தொடங்கியதும், யாழ்ப்பாண கோட்டை சுற்றுலா தளமாக மாற்றம் பெற்றது. அதனை தொடர்ந்து யாழில் உள்ளவர்களுக்கும் யாழ்ப்பாண கோட்டை முக்கிய சுற்றுலா தளாமாக காணப்படுகின்றது.

தற்போது யாழ்பாண கோட்டை முற்று முழுதாக இலங்கை தொல்லியல் திணைக்களத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது. தொல்லியல் சின்னமாக பாதுகாக்கபட்டு வருகின்றது.

அந்நிலையில் கடந்த 21 வருடகாலமாக இலங்கை இராணுவத்தினர் கோட்டை பகுதியில் நிலை கொண்டு உள்ளனர். தொல்லியல் திணைக்களத்தினால் கோட்டை தொல்லியல் சின்னமாக பாதுகாக்கப்பட்டு வருகின்ற நிலையில் கோட்டையின் ராணி மாளிகை அமைந்துள்ள பகுதியில் தொடர்ந்து இலங்கை இராணுவத்தினர் நிலை கொண்டு உள்ளனர்.

இராணுவத்தினர் தற்போது நிலை கொண்டுள்ள ராணி மாளிகை தொல்லியல் மற்றும் தேசிய மரபுரிமை சின்னமாகும். அவற்றினை உரிமை கோருவது , சேதப்படுத்துவது என்பன  தொல்லியல் சின்னங்களை பாதுகாக்கும் பொருட்டு உள்ள தொல்பொருள் சட்டத்தின் கீழ் தண்டனைக்கு உரிய குற்றமாகும்.

தொல்லியல் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தொல்லியல் சின்னமான ராணி மாளிகையில் தொடர்ந்து இராணுவத்தினர் நிலை கொண்டு உள்ளனர். அது தொடர்பில் தொல்லியல் திணைக்களத்தினர் நடவடிக்கை எடுப்பார்களா ? இராணுவத்தினர் அப்பகுதியில் இருந்து வெளியேறுவார்களா ?

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *