இலங்கை பிரதான செய்திகள்

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயம் திறந்து வைக்கப்பட்டுள்ளது

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயம் யாழ்.மறைமாவட்ட ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகாச அண்டகையினால் வெள்ளிக்கிழமை காலை திறந்து வைக்கப்பட்டு உள்ளது.  அதனை தொடர்ந்து யாழ்.மறைமாவட்ட ஆயரின் தலைமையில் காலை 9 மணியளவில் கூட்டு திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்திற்கு அருகில் புதிதாக இலங்கை கடற்படையினரால் நிர்மாணிக்கப்பட்ட ஆலயமே  திறந்து வைக்கப்பட்டது.

குறித்த ஆலயம் கடந்த 7ம் திகதி திறந்து வைக்க இருந்த நிலையில் தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதாவின் திடீர்மரணத்தை அடுத்து ஆலய திறப்பு விழா தள்ளி வைக்கப்பட்டு இருந்த நிலையில் ஆலய திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஆலய திறப்பு விழா நிகழ்வில் ,  இலங்கை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜயகுணரத்ன , வடமாகாண ஆளூநர் ரெஜினோல்ட் குரே , யாழ்.மாவட்ட அரச அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் , இந்திய துணை தூதரக அதிகாரி ஏ.நடராஜான், கடற்படை தளபதிகள் , கடற்படையினர் ,   இலங்கை மற்றும் இந்தியா அருட்தந்தையர்கள் , அருட்சகோதரர்கள் ,மற்றும்  பங்கு மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இந்தியாவில் இருந்து ஆலய திறப்பு விழாவுக்கு வருவதற்காக 100 பேருக்கு இந்திய மத்திய அரசாங்கம் அனுமதி வழங்கி இருந்தது. இருந்த போதிலும் திறப்பு விழாவில் மூன்று படகுகளில் 82 பேரே வருகை தந்து இருந்தனர். நெடுந்தீவு பங்கில் இருந்து 120 பேர் ஆலய திறப்பு விழாவுக்கு வருகை தந்து இருந்தனர்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *