இலங்கை கட்டுரைகள் பிரதான செய்திகள்

உழைப்பதற்கு அஞ்சுபவர்களல்ல நிலைமாறு கால நீதியும் பொருத்தமான உதவிகளும் வழங்கப்பட வேண்டும்

உழைப்பதற்கு அஞ்சுபவர்களல்ல நிலைமாறு கால நீதியும் பொருத்தமான உதவிகளும் வழங்கப்பட வேண்டும் என அமரா பெண் தலைமைதாங்கும் குடும்ப ஒன்றியப் பெண்கள் கோரியிருக்கின்றார்கள்.
சொல்லில் அடங்காத பிரச்சினைகளை எதிர்கொண்டாலும், உழைப்பதற்கு நாங்கள் அஞ்சுபவர்களல்ல. பொருத்தமான வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட வேண்டும். நீதிக்கான நிலைமாறுகால முறைமையின் கீழ் பல வழிகளிலும் பாதிக்கப்பட்டுள்ள எங்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்று யாழ்ப்பாணத்தில் பெண் தலைமை தாங்கும் குடும்ப ஒன்றியங்களின் தேசிய மாநாட்டில் ஒன்று கூடிய பெண் தலைமை தாங்கும் குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் கோரியிருக்கின்றார்கள்.
விழுது ஆற்றல் மேம்பாட்டு மையம் மற்றும் பெண்கள்,  பெண்கள் அபிவிருத்திக்கான போக்கஸ் ஆகிய நிறுவனங்களின் அனுசரணையில் இந்தத் தேசிய மாநாடு யாழ்ப்பாணம் டில்கோ விருந்தகத்தில் நடைபெற்றது.
விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் தலைமையக திட்ட அலுவலர் இந்துமதி ஹரிஹரதாமோதரன் நிகழ்வுக்குத் தலைமை தாங்கினார்.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், புத்தளம், திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய வடகிழக்கு மாகாண மாவட்டங்களுடன், காலி, மொனராகலை, பதுளை, குருணாகல், அனுராதபுரம் போன்ற நாட்டின் ஏனைய மாவட்டங்களைச் சேர்ந்த பெண் தலைமை தாங்கும் குடும்ப ஒன்றியங்களின் பிரதிநிதிகள் பெரும் எண்ணிக்கையில் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
நல்லிணக்க வழிமுறையின் முன்னேற்றப்பாதையில், பெண் தலைமை தாங்கும் குடும்பங்களை வலுப்படுத்தும் நோக்கத்திலான இந்த மாநாட்டில் குடும்பத் தலைமை தாங்கும் பெண்கள் ஒன்றியங்கள் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்தக்  கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
நாட்டிலே இடம்பெற்ற 30 வருட கால யுத்தம் எங்கள் அன்புக்குரிய உறவுகளை எம்மிடமிருந்து பறித்துவிட்டது, ஆனாலும், நாம் தளராமல், எங்கள் குடும்பங்களை நிர்வகிக்க வேண்டிய நிலையில் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களாக அடையாளப்படுத்தப்பட்டு, எங்களது தேவைகளை பூர்த்தி செய்வதற்கு வழியின்றியும், பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு வழியின்றியும் காலத்துடன் போராட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.
எங்களது பாதுகாப்பு இன்று வரை உறுதிப்படுத்தப்படவில்லை.
அதிலும், நாம் வடக்கு கிழக்கில் இன்றுவரை போதிய வசிப்பிட வசதிகளின்றி, அல்லல்படுகின்றோம். உரிய சமூக அடிக்கட்டுமாண வசதிகளின்றி, போர் முடிந்த பிற்பாடும், நாம் அல்லலுறுகின்றோம். பாதுகாப்பு வலயங்களில் எமது காணிகள் அகப்பட்டுள்ளதனால் வாழ்விட வசதிகளின்றி பொருளாதார முயற்சிகளினை மேற்கொள்ளவும் வழியின்றி நாம் தவிக்கின்றோம்.
எமது பிரச்சினைகளைக் கூறுவதற்கு நாம் காவல்துறையினை நாடும் போது, நாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் சொல்லில் அடங்காதவை. வீட்டுத் திட்டங்கள் எமக்குப் போதுமானவையாகவும், பொருத்தமானவையாகவும் ஏற்படுத்தித் தரப்பட வேண்டும்.
நாம் உழைப்பதற்கு அஞ்சுபவர்களல்ல. ஆனாலும், எமக்குரிய வாழ்வாதார முயற்சிகள் பொருத்தமானவையாக ஏற்படுத்தித் தரப்பட வேண்டும். அதற்கான பயிற்சிகள் முதலீடுகள், ஏனையோரைப் போன்று எமக்கும் வழங்கப்பட வேண்டும்.
நாம் பெண் தலைமைதாங்கும் குடும்பங்களாக இருப்பதனால், வாழ்வாதார உதவித் திட்டங்களில் வயது, பாராபட்ச நிலைமைகள் முதன்மையான காரணிகளாக நோக்கப்படுகின்றன. இவற்றுக்கான மாற்று வழிமுறைகள் கவனத்திற்குட்படுத்தப்பட வேண்டும்.
பெண் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கான விசேட ஓய்வூதியத் திட்டம் அல்லது அதற்குப் பதிலாக விசேட திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டு, அதனைப் பெறும் தகுதி எமக்கு வழங்கப்பட வேண்டும்.
எங்கள் பிள்ளைகளுக்கான விசேட கல்விச் சலுகைகைள நாம் கோரி நிற்கின்றோம். பாதிக்கப்பட்ட எங்கள் பிள்ளைகளுக்கான உளவியல் தேவைகள் குறித்து, ஆற்றுப்படுத்தல் திட்டங்களை அமுல்படுத்துமாறு கேட்கின்றோம்.
எங்கள் பிரதேசங்களில் எமக்கான சுகாதார வசதிகளை, நாம் பெறுவதற்கான முன்னுரிமை வழங்கப்படுவதுடன், எமது ஆரோக்கியம் பேணும் வகையில் அமைந்த சத்துணவுத் திட்டங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும்.
எங்களது சமூக, கலசார உரிமைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும். காணாமல் ஆக்கப்பட்ட எங்கள் உறவுகளின் உண்மை நிலைமை பற்றி, எமக்குக் காலதாமதமின்றி, அறியத்தரப்பட வேண்டும். உறவுகளை இழந்த பாதிக்கப்பட்டுள்ள எங்களுக்கான நீதி வழங்கப்பட வேண்டும். பக்கசார்பின்றி விசாரணைகள் இடம்பெற்று நீதி வழங்கப்பட வேண்டும்.
இழப்பீடுகளை பெறுவதற்கான ஏற்பாடுகள் துரிதமாக்கப்பட வேண்டும். கற்றுக்கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழுவினால், முன்மொழியப்பட்டு, பொருத்தமான சிபாரிசுகள் துரிதகதியில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
மொத்தத்தில் எங்களது சமூக பொருளாதார அரசியல் பண்பாட்டு உரிமைகளை நாம் அனுபவிக்கும் விதத்தில் எமது வேண்டுகோள்களை கவனத்தில் எடுத்து, எங்களது வாழ்வில் மறுமலர்ச்சியினை ஏற்படுத்துமாறு வேண்டிக்கொள்கின்றோம்.
நிலைமாறுகால நீதியினை நாம் பெற்றுக்கொள்ள உதவுமாறு அனைத்துத் தரப்பினரையும் முப்பதினாயிரம் அங்கத்தவர்களைக் கொண்ட அமரா குடும்ப தலைமை தாங்கும் பெண்கள் ஒன்றியத்தினராகிய நாம் வேண்டி நிற்கின்றோம்.இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிக்கை வடிவிலான இந்த வேண்டுதல் நிகழ்வில் கலந்து கொண்டிருந்த வடமாகாண அரச அதிகாரிகள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் வடமத்திய மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் மற்றும் உள்ளிட்ட முக்கியஸ்தர்களிடம் வைபவரீதியாகக் கையளிக்கப்பட்டுள்ளது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *