இந்தியா பிரதான செய்திகள்

“தொடர்ந்து இந்த வழக்கை நான் விசாரித்தால், ஜெயலலிதா உடலை தோண்டி எடுத்து உடற்கூறு செய்து விசாரிக்க உத்தரவிட்டிருப்பேன்” சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி:-

ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி தெரிவித்தார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், விசாரணை நடத்த வேண்டும் என்றும், ஜோன்ஸ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றில் மனு தாக்கல் செய்தார். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இறந்தபோது நீதிமன்றம் விசாரணை கமிஷன் அமைக்க உத்தரவிட்டதை போல இதிலும் உத்தரவிட வேண்டும் என மனுதாரர் கோரியிருந்தார்.

இந்த மனு, உயர் நீதிமன்ற விடுமுறைக்கால அமர்வு நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும், பார்த்திபன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு வழக்கறிஞர், இந்த விஷயத்தில் எந்த சந்தேகமும் இல்லை என்றார். ஆனால், ஜெயலலிதா மரணத்தில் தனக்கும் சந்தேகம் இருப்பதாக நீதிபதி வைத்தியநாதன் குறிப்பிட்டார்.

ஜெயலலிதா மருத்துவமனையில் சேர்ந்தது முதல் எந்த வித போட்டோ, வீடியோ ஆதாரமும் வெளியாகவில்லை, எனவேதான் தனக்கும் சந்தேகம் எழுகிறது எனவும், தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்துக்களை வெளியிட்ட அவர், ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் உள்ள நிலையில் மத்திய அரசு மவுனம் காப்பது ஏன்?. ஏனெனில் ஜெயலலிதா சிகிச்சை விவரம் மத்திய அரசுக்கு முழுமையாக தெரியும். மத்திய அரசுக்கு தெரிந்தும் வாயை திறக்காதது ஏன்? தமிழக அரசு இதுவரை ஆர்.டி.ஓ விசாரணைக்கு கூட உத்தரவிடவில்லை. தான் வழக்கை தொடர்ந்து விசாரித்தால் அது வேறு மாதிரி இருக்கும். ஜெயலலிதா உடலை தோண்டி எடுத்து உடற்கூறு செய்து விசாரிக்க உத்தரவிட்டிருப்பேன். ஆனால் இது விடுமுறைக்கால அமர்வு என்பதால், தொடர்ந்து விசாரிக்க முடியாது, எனக் கூறிய நீதிபதி வழக்கு விசாரணையை ஜனவரி 10ம் திகதிக்கு ஒத்தி வைத்தார். இந்த வழக்கில், மத்திய, மாநில அரசு வழக்கறிஞர்கள் ஆஜராகினர்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *