உலகம் பிரதான செய்திகள்

122 ஊடகவியலாளர்களை பலியெடுத்த 2016 விடைபெற்றுச் சென்றது:-


உலகம் முழுவதும் 2016ம் ஆண்டு 122 ஊடகவியலாளர்கள் உயிரிழந்துள்ளனர். இதில் 93 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். மற்றவர்கள் விபத்துகள், இயற்கைச் சீற்றங்களில் சிக்கி உயிரிழந்தவர்கள் ஆவர். இவர்களில் இந்தியாவில் மட்டும் 5 பத்திரிகையாளர்கள் கொலை செய்யப்பட்டனர்.

உலக தர வரிசையில் ஈராக்கிலேயு, அதிக அளவிலான ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். உலக அளவில் 23 நாடுகளில் ஊடகவியலாளர்கள் கொலை, குண்டு வீச்சுத் தாக்குதல், போரின் போது நடந்த தாக்குதல் என குறி வைக்கப்பட்டு கொல்லப்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளதாக சர்வதேச பத்திரிகையாளர்கள் சம்மேளணம் தனது ஆண்டு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

குறிப்பாக ஆப்பிரிக்கா, ஆசியா பசிபிக், அமெரிக்கா, ஐரோப்பா, மத்திய கிழக்கு, அரபு நாடுகலில் உள்ள 23 நாடுகளில் அதிக அளவில் ஊடகவியலாளர்கள் குறி வைத்துக் கொல்லப்பட்டுள்ளனர்.

இருப்பினும் 2015ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2016 ஆம் அண்டு ஊடகவியலாளர்கள் கொலைகள் குறைவடைந்துள்ளன. 2015ம் ஆண்டு 112 பேர் கொல்லப்பட்டனர். ஆனால் இது கடந்த ஆண்டு 93 ஆக குறைந்திருந்தது

ஈராக்கிலேயே அதிக ஊடகவியலாளர்கள்,  15 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அடுத்த இடத்தில் ஆப்கானிஸ்தான் 13 கொலைகள், மெக்ஸிகோ 11 கொலைகளுடன் உள்ளன.

ஏமன் நாட்டில் 8 பத்திரிகையாளர்களும், கவுதமாலாவில் 6, சிரியாவில் 6 பேரும் கொல்லப்பட்டனர். இந்தியா, பாகிஸ்தானில் தலா 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

கொலை தவிர இயற்கை சீற்றம் மற்றும் விபத்துக்களில் உயிரிழந்தவர்கள் வரிசையில் அதிகபட்சமாக பிரேசில் நாட்டைச் சேர்ந்த 20 விளையாட்டு செய்தியாளர்கள் கொலம்பியாவில் நடந்த விமான விபத்தில் உயிரிழந்தனர். அதேபோல 9 ரஷ்ய செய்தியாளர்கள் ராணுவ விமான விபத்தில் உயிரிழந்தனர்.

சர்வதேச ஊடகவியலாளர்கள் சம்மேளனம் 140 நாடுகளைச் சேர்ந்த 6 லட்சம் பத்திரிகையாளர்களை உறுப்பினராகக் கொண்ட அமைப்பாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *