இந்தியா பிரதான செய்திகள்

தமிழகத்தில் ஒரே நாளில் 8 விவசாயிகள் மரணம் – 3 நாட்களில் 29 விவசாயிகள் பலி:-


தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் 8 விவசாயிகள் மரணம் அடைந்துள்ளனர். கடந்த 3 நாட்களில் 29 விவசாயிகள் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பருவமழை பொய்த்துப்போனதால் விவசாயிகள் பயிரிட்ட நெற்பயிர்களும், மஞ்சள் பயிர்களும் கருகியதால் விவசாயிகள் விஷம் குடித்தும், தூக்குப் போட்டும் உயிரை மாய்த்துக்கொண்டு வருகின்றனர்.

தமிழகத்தில் மட்டும் கடந்த 5 ஆண்டுகளில் 2500க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாக புள்ளிவிபரம் கூறுகிறது.

தண்ணீர் இன்றி பயிர்கள் கருகியதால் அதிர்ச்சியில் விவசாயிகள் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. பெரும்பாலான தற்கொலைகளுக்கு கடன் சுமைதான் காரணம் என்பதே உண்மை. கடலூர் மாவட்டம் ஆழங்காத்தான் கிராமத்தில் விவசாயி செந்தமிழன், நாகை மாவட்டம் அறுபதாம்கட்டளையில் விவசாயி தம்புசாமி, திருவாரூர் மாவட்டம் புத்தகலூர் கிராமத்தில் விவசாயி வடமலை, திருவண்ணாமலை மாவட்டம் செல்லங்குப்பத்தில் விவசாயி மண்ணு, ராமநாதபுரம் மாவட்டம் கழுதி அருகே வாகைகுளத்தில் விவசாயி அழகர்சாமி, கடலூர் மாவட்டம் ஆலங்காத்தான் பகுதியைச் சேர்ந்த, திருவாரூர் மாவட்டம் பாண்டுகுடியில் விவசாயி ஒருவர், திருவாரூர் மாவட்டத்தில் ஒரே நாளில் இரண்டு விவசாயிகள் என இவர்கள் அனைவரும் மாரடைப்பால், அல்லது தற்கொலையால் மரணமாகியுள்ளனர். மேலும் விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் விவசாயி முருகன், நெற்பயிர் கருகியதால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தமிழகத்தில் கடந்த 3 நாட்களில் உயிரிழந்த விவசாயிகள் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளதாகவும், இதுவரை 71 விவசாயிகள், தமிழகத்தில் பலியாகியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *