இலங்கை பிரதான செய்திகள்

கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலகத்தில் இரண்டு சிங்கள மொழி அலுவலக உதவியாளா்கள்

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலகத்தில் இரண்டு சிங்கள மொழி அலுவலக உதவியாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

அன்மையில் புதிதாக நியமிக்கப்பட்ட  இரண்டு இளைஞர்களுக்கும் கொஞ்சமும் தமிழ் தெரியாத நிலையில் நூறு  வீதம் தமிழ் பேசுகின்ற மக்கள் தங்களது  சேவையை பெற்றுக்கொள்கின்ற, முற்றுமுழுதாக தமிழ் அலுவலர்களை கொண்டுள்ள ஒரு அலுவலகத்தில் இரண்டு சிங்கள இளைஞர்கள் அலுவலக உதவியாளா்களாக நியமிக்கப்பட்டுள்ளமை மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

அலுவலக  உதவியாளா் பதவி என்பது க.பொ.த சாதாரண தர  தகைமைகளுடன் வழங்கப்படுகின்ற ஒரு ஒரு பதவி. கிளிநொச்சியில் ஆயிரக்கணக்கான இளைஞா்கள் க.பொ.த. சாதாரண தர பெறுபேறுகளுடன் வேலைவாய்ப்பின்றி காணப்படுகின்றனா். பல திணைக்களங்களில் இன்றும் பலா் நிரந்தர நியமனம் இன்றி அமைய அடிப்படையில் பணியாற்றி வருகின்றனா். இந்த நிலையில் இரண்டு நியமனங்களும் இடம்பெற்றிருப்பது நல்லாட்சி அரசின் நடவடிக்கைகள்  மீது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

இவ்வாறு நியமிக்கப்படுகின்றவா்கள் குறைந்தது ஆறுமாதங்கள் மட்டுமே இங்கு பணியாற்றுவதாகவும் பின்னா் இடமாற்றம் பெற்று  தென்னிலங்கைக்கு சென்றுவிடுவதாகவும் அவ்வாறு பல சம்பவங்கள் நடந்துள்ளன என்றும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனா்

கடந்த ஆட்சிக் காலத்தில் கூட இவ்வாறு சிங்கள மொழி அலுவலா்கள் வடக்கில்  சாதாரண பதிவிகளுக்கு நியமிக்கப்பட்டது கிடையாது. ஆனால் நல்லாட்சி அரசில் வடக்கில் உள்ள பல திணைக்களங்களில் பெரும்பாலான  சிங்கள மொழி அலுவலர்கள் தாராளமாக நியமிக்கப்பட்டு வருகின்றனா்.

குறிப்பாக வனவளத்திணைக்களம், புகையிரத திணைக்களம், வருமான வரித்திணைக்களம், மதுவரித்திணைக்களம் எனத் தொடங்கி தற்போது பிரதேச செயலங்கள் வரை வந்துள்ளது. தெற்கில் உள்ள சிங்கள மொழி இளைஞா்களுக்கு வடக்கில் உள்ள திணைக்களங்களில் இவ்வாறு நியமனங்கள் வழங்க்கப்படுவது போன்று வடக்கில் உள்ள இளைஞர்களுக்கு தெற்கில் உள்ள அலுவலங்களில் நியமனங்கள் வழங்க்கப்படுமா என மக்கள்  கேள்வி எழுப்புகின்றனா்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *