இந்தியா பிரதான செய்திகள்

சசிகலாவிற்கு 4 வருட சிறைத்தண்டனை நீதிமன்றம் தீர்பளித்தது: 10 வருடங்களுக்கு அரசியலில் ஈடுபட முடியாது:-


சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ள சசிகலா உள்ளிட்ட மூவருக்கும் 4 வருட சிறைத்தண்டனையும் ஒவ்வொருவருக்கும் தலா 10 கோடி ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் எதிர்வரும் 10 வருடங்களுக்கு இவர்களுக்கு அரசியலில் ஈடுபட முடியாதென்றும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

10 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது.

சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு, 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள சசிகலா அடுத்த 10 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது.

இதனால் சசிகலாவின் அரசியல் வாழ்க்கை ஆரம்பமாகாமலே முடிவுக்கு வந்துள்ளது. முதல்வர் பதவியில் இருந்து பன்னீர்செல்வத்தை நீக்கி அந்தப் பதவியை குறுக்கு வழியில் பிடிக்க முனைந்த சசிகலா பாரிய சிக்கலில், அரசியல் வாழ்வின் எல்லையில் வந்து நிற்பதாக நோக்கர்கள் கூறுகின்றனர்.

குற்றவாளிகளை உடன் நீதிமன்றில் சரணடையுமாறு உத்தரவு:

சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டுள்ள அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சசிகலா உள்ளிட்ட மூவரையும் நான்கு வாரங்களுக்குள் நீதிமன்றில் ஆஜராகுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜெயலலிதா மரணமடைந்துவிட்டதால் இந்த வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

1991-1996 ஆம் ஆண்டில் முதல்வராக இருந்த ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா கடந்த 2014ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி , ஜெயலலிதா சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு சிறை தண்டனை விதித்தார் . இதனை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்ற மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த தனிநீதிபதி குமாரசாமி அனைவரையும் விடுதலை செய்தார்.

இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா அரசு மேல்முறையீடு செய்தது. இந்த மனுவை நீதிபதிகள் பினாக்கி கோஷ், அமித்வா ராய் அடங்கிய நீதிபதிகள் குழு  விசாரித்து தீர்ப்பை ஒத்தி வைத்தது. இவ்வழக்கின் தீர்ப்பை விரைந்து வழங்க கடந்த வாரம் கர்நாடகா அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே வலியுறுத்தி இருந்தார். அப்போது இன்னும் ஒருவாரத்தில் தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி பினாக்கி கோஷ் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *