இலக்கியம் இலங்கை பிரதான செய்திகள்

கேப்பாபுலவு கவிதைகள் – தீபச்செல்வன்

 

கேப்பாபுலவு – 1
 
முன்பொருகாலத்தில் எனது தேசம் கடலாலானது
இப்போது இராணுவத்தினாலானது
எனது தொன்மங்களின்மீதெழுப்பட்ட  இராணுவமுகாங்கள்
எனது வீட்டின் தளபாடங்களிலானது

எப்போழுதும் வீழா நந்திக்கடலருகே
பூவரசம் தடிகளில் செய்த வில்லினால்
இராணுவமுகாமை நோக்கி
அம்பெய்கிறான் கேப்பாபுலவுச் சிறுவன்.

பனியும் வெயிலும் தின்றது
குழந்தையரின் புன்னகையை
எனினும், வாடிய மலரைப்போல
மரங்களின் கீழே தூங்கும் தொட்டில்களில்
அவர்களுமை சுற்றி வளைத்தே உறங்குகின்றனர்

துப்பாக்கிகளுக்கு அஞ்சாது
வெஞ்சினத்துடன் கொதித்தெழுகின்றனர் எம் பெண்கள்
வற்றாப்பளைக் கண்ணகிபோல
போராளிகளின் கவிதையில் வரும் பாத்திரங்கள்போல

பள்ளிக்கூடம் செல்ல மறந்த எம் சிறுவர்கள்
பாடினர் – கேப்பாபுலவுமீதான பாடல்களை
கற்றனர் – எப் பள்ளியும் கற்க முடியாத பாடத்தை

ஆக்கிரமிப்பு எதிரிப் படையே
கவர்ந்தவெம் நிலங்களை விட்டு உடனே வெளியேறு
இனி எனது தேசம்
கடலாலும் ஒரு பகுதி நிலத்தாலும் சூழ்ந்திருக்கட்டும்!

கேப்பாபுலவு – 2

சனங்கள்
காடுகளில்
கிராமம் எனப்படும்
மாதிரிகளில்இராணுவம்
முகாங்களாக்கப்பட்ட
சனங்களின்

கிராமத்தில்

எல்லாமும்
மாதிரிகளாக்கப்பட்ட தேசத்தில்
மாதிரிகளாக்கப்பட இயலாதவையும் உண்டு

சனங்களை
சனங்களின் குரல்களை

வயிறு பற்றியெரிய
அனல் வெயிலை கிழித்தபடி
குரலெடுக்கிறாள்
கேப்பாபுலவு பெண்யொருத்தி
‘ஆம்! வெளியேறு எதிரிப்படையே
இராணுவமுகாமாக்க முடியாத
எம் நிலத்தை விட்டு!’
-தீபச்செல்வன்

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *