இலங்கை பிரதான செய்திகள்

அரசியல் தீர்வானது தமிழ் மக்களுக்கு ஏற்புடையதாக இருக்க வேண்டும்- சிவில் சமூகப் பிரதிநிதிகளிடம் டக்ளஸ் :

தமிழ் மக்களின் நம்பிக்கையை வென்றெடுக்காமல், தேசிய நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப முடியாது. கேப்பாப்புலவு மக்களின் கோரிக்கைக்கு இதுவரையில் உரிய நியாயம் கிடைக்கவில்லை. அந்த மக்கள் புதிய நிலம் வேண்டுமென்றோ, நவீன வசதிகள் வேண்டுமென்றோ கோரிக்கை விடுத்து அங்கே வீதியில் குடும்பம் குடும்பமாக நின்று போராடவில்லை. தமது பூர்வீக நிலத்தையே தம்மிடம் மீண்டும் ஒப்படைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றார்கள். அவர்களின் கோரிக்கையை மறுப்பதற்கு எந்த நியாயமும் இல்லை என செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

அரசாங்கம் விவாதித்து வருகின்ற புதிய அரசியலமைப்புத் தொடர்பாகவும், அதை நிறைவேற்றுவதற்காக சர்வஜன வாக்கெடுப்புக்குப் போவது தொடர்பாகவும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நிலைப்பாட்டைத் தெரிந்து கொள்ளும் முகமாக கொழும்பிலுள்ள கட்சியின் அலுவலகத்திற்கு வருகை தந்த, புதிய அரசியலமைப்பிற்கான தேசிய இயக்கத்தின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும்  தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வொன்றைக் காண்பதற்கு தற்போதைய சூழலை அனைத்துத் தரப்பினரும் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் எனவும் இவ்விடயத்தில் நாம் உறுதியாக இருக்கின்றோம் எனவும் அவர் தெரிவித்தார்.

அரசியல் தீர்வு எவ்வாறானதாக அமைய வேண்டும் என்பது தொடர்பில் தேசிய இனப்பிரச்சினையோடு தொடர்புபட்ட அனைத்துத் தரப்பினருடனும் கலந்துரையாடப்பட வேண்டும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், தமிழ் மக்களிடம் ஒன்றையும், கொழும்பு அரசியல் தலைமைகளிடம் வேறொன்றையும் கூறிவருகின்றனர். இதனால் தமிழ் மக்களிடையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீதான அவநம்பிக்கையே அதிகரித்துள்ளது.

ஆகவே அரசு முன்வைக்கும் தீர்வுத் திட்டம் தொடர்பில், தமிழ் மக்களின் அபிப்பிராயங்கள் அறியப்பட வேண்டும். மக்களின் நம்பிக்கையையும், மனதையும் வென்றெடுக்க அரசாங்கம் தேசிய நல்லிணக்கத்தின் பெயரால் செய்யவேண்டிய காரியங்கள் அதிகமாகவே இருக்கின்றன. யுத்தமில்லாத சூழலில் படைத்தரப்பினர் வசமுள்ள, தமிழ் மக்களின் காணிகள் மீள ஒப்படைக்கப்படாமலிருப்பதும், தமிழ் அரசியல் கைதிகள் விவகாரத்திற்கு தீர்வு கிடைக்காமல் இருப்பதும், காணாமல் போனவர்கள் தொடர்பான கேள்விகளுக்கு நியாயமான பதிலளிப்பும், பரிகாரமும் கிடைக்காமலிருப்பதும், தமிழ் மக்களிடையே மேலும் அதிருப்தியையும், நம்பிக்கையீனங்களையுமே தோற்றுவித்துள்ளது.

இவ்வாறான பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகளை வழங்காமலும், தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை உள்ளடக்காமலும், தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வொன்றை வழங்க முடியும் என்று நம்பப்படுமானால் அது வெற்றியளிக்காது. எனவே முன்வைக்கப்படும் அரசியல் தீர்வானது சிங்கள மக்களுக்குப் போலவே, தமிழ் பேசும் மக்களுக்கும் ஏற்புடையதாக இருப்பது அவசியமாகும் என்பதே ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நிலைப்பாடாகும் எனவும் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

இந்தச் சந்திப்பில், புதிய அரசியலமைப்பிற்கான தேசிய இயக்கத்தின் சார்பில், பேராசிரியர் சரத் விஜேய சூரிய, கலாநிதி தேனுவர, சான் விஜயதுங்க, சமன் ரத்னாப்பிரிய ஆகியோரும், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் சார்பில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தனர்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *