இந்தியா பிரதான செய்திகள்

அரசுத் திட்டங்களில் ஜெயாவின் படங்களை பயன்படுத்த தடை கோரிய வழக்கு.. விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது:-


தமிழக அரசின் நலத்திட்டங்களில் ஜெயலலிதாவின் புகைப்படங்களை பயன்படுத்தத் தடைகோரிய வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு விட்ட ஜெயலலிதாவின் புகைப்படங்கள், தமிழக அரசின் நலத்திட்டங்களான அம்மா மருந்துக் கடை, அம்மா உணவகம், அம்மா உழவர் சந்தை உள்ளிட்டவற்றில் பயன்படுத்தி வருவதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில் பாமகவைச் சேர்ந்தவரும், சமூகநீதிக்கான வழக்கறிஞர்கள் பேரவையின் தலைவருமான கே.பாலு சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:- சொத்து குவிப்பு வழக்கில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேர் குற்றவாளிகள் என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அளித்துள்ளது. ஜெயலலிதா மரணமடைந்துவிட்டதால், அவருக்கான தண்டனை மட்டுமே கைவிடப்பட்டுள்ளது.. ஆனால், அவர் குற்றவாளிதான் என்பதை சுப்ரீம் கோர்ட் உறுதி செய்துள்ளது. அதேநேரம், ஊழல் வழக்கில் குற்றவாளியான ஜெயலலிதாவின் படம் அரசு அலுவலகங்களிலும், பள்ளிப் பாடப் புத்தகங்களிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பல்வேறு திட்டங்களை ஜெயலலிதாவின் பெயரில் அறிவித்துள்ளார். இது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது. உச்சநீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஒரு குற்றவாளியின் புகைப்படமும், பெயரும் அரசின் பல திட்டங்களுக்கு வைக்கப்படுகின்றன. எனவே, ஜெயலலிதாவின் பெயர் மற்றும் புகைப்படங்களை அகற்ற வேண்டும் என்று தமிழக தலைமைச் செயலாளர், ஆளுநரின் முதன்மைச் செயலாளர், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோருக்கு மனு அனுப்பியுள்ளேன். அதில், அம்மா உணவகம், அம்மா குடிநீர், அம்மா உப்பு உள்ளிட்ட திட்டங்களிலும், பொதுமக்களுக்கு வழங்கப்படும் மிக்சி, கிரைண்டர், சைக்கிள், புத்தகப் பை உள்ளிட்ட பொருட்களிலும் உள்ள ஜெயலலிதா புகைப்படத்தையும், பெயரையும் அகற்ற வேண்டும். தற்போது மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் சமாதியை பிரம்மாண்டமாக கட்ட தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதற்கு தமிழக அரசுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும். இதுதொடர்பாக நான் கொடுத்த மனுவை பரிசீலிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. இதே கோரிக்கையை வலியுறுத்தி மக்கள் அதிகாரம் என்ற அமைப்பினர் கடந்த திங்கள்கிழமை தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *