இலங்கை பிரதான செய்திகள்

பொறுப்பு கூறுதல் முனைப்புக்கள் மந்த கதியில் தொடா்கின்றது – ஐ.நா அறிக்கையில் அல் ஹூசெய்ன் குற்றச்சாட்டு

தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்

இலங்கையில் பொறுப்பு கூறுதல் முனைப்புக்கள் மிகவும் மந்த கதியில் இடம்பெறுவதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சயிட் அல் ஹூசெய்ன் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினால் இலங்கை தொடர்பில் இன்றைய தினம் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் கால மாறு நீதிப்பொறிமுறைமை மிகவும் மெதுவாக மேற்கொள்ளப்படுகின்றது, நிலையான சமாதானத்தை எட்டும் நோக்கில் கடந்த கால குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறுதல் தொடர்பில் முழு அளவிலான திட்டங்கள் வகுக்கப்பட்டு அமுல்படுத்தப்படவில்லை.

மனித உரிமை விவகாரம் மற்றும் அரசியல் சாசன விவகாரங்களில் சாதகமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதனை மறுப்பதற்கில்லை, அது வரவேற்கப்பட வேண்டியதாகும். புதிய அரசியல் சாசனத்தை உருவாக்குதல் மற்றும் மனித உரிமை விவகாரங்களில் அரசாங்கம் சாதகமான முனைப்பை வெளிப்படுத்தியுள்ளது.  எனினும் காலமாறு நீதிப்பொறிமறைமை அமுலாக்கம் மிகுந்த மந்தகதியில் வருத்தமளிக்கும் வகையில் அமைந்துள்ளது.

ஐ.நா தீர்மானத்திற்கு அமைய பரிந்துரைகளை அமுல்படுத்துவதற்கும், மெய்யான முன்னேற்றத்தை ஏற்படுத்துவதற்கும் கூடிய வகையிலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை. 2002ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் இலங்கையின் நிலைமைகள் குறித்து அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை அமைப்புக்களுடன் இலங்கை காத்திரமான உறவுகளைப் பேணி வருகின்றமை வரவேற்கப்பட வேண்டியதாகும்.  அரசியல் சாசனத் திருத்தம், காணி மீளளிப்பு, காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் போன்ற முயற்சிகள் அங்கீகரிக்கப்பட வேண்டிய விடயங்களாகும். நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் செயலணி ஒன்றை அரசாங்கம் உருவாக்கியுள்ளது.

எவ்வாறெனினும்,; நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் மற்றும் பொறுப்பு கூறுதல் தொடர்பிலல் இதுவரை காலமும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் போதுமானவையல்ல. நடவடிக்கைகளை துரித கதியில் முன்னெடுக்க வேண்டும் என்ற முனைப்பு கிடையாத நிலை தொடர்கின்றது.

கட்சி அரசியல், அதிகார முரண்பாட்டு நிலைமை போன்றவற்றினால் பொறுப்பு கூறுதல் விவகாத்தில் நடவடிக்கை எடுப்பதில் சிரமங்கள் காணப்படுகின்றன. காலமாறு நீதிப் பொறிமுறைமை தொடர்பில் ஆளும் தரப்பினர் முன்னுக்கு பின் முரணான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

பல வழிகளில் இலங்கை அரசாங்கம் மனித உரிமைகளை மேம்படுத்தவும் பாதுகாக்கவும் முனைப்பு காட்டி வருகின்றது என சயிட் அல் ஹூசெய்ன் தெரிவித்துள்ளார். எனினும் மிகக் கடினமாக பெற்றுக்கொள்ளப்பட்ட வெற்றிகள் உரிய திட்டங்களின் அடிப்படையில் முன்னெடுக்கப்படாவிட்டால் அனைத்து வெற்றிகளும் வீணாகிவிடும்.

பொறுப்பு கூறுதல் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் ஆகியனவற்றுக்கு மிகவும் சிறந்த சந்தர்ப்பம் கிடைக்கப்பெற்றுள்ளது. அரசாங்கமும் இலங்கை மக்களும் இந்த சந்தர்ப்பத்தை சரியான முறையில் பயன்படுத்தி நீதியை நிலைநாட்டவும், நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் முயற்சிக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். சில முக்கியமான விடயங்கள் குறித்து இலங்கை  அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டுமென தெரிவித்துள்ளார்.

கலப்பு நீதிமன்றமொன்றை நிறுவி விசாரணைகளை நடத்துதல், தனியார் காணிகளை இராணுவத்தினர் வெளியேறுதல் உள்ளிட்டனவற்றுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.

இலங்கையில் தொடர்ந்தும் பாரியளவிலான மனித உரிமை மீறல்கள் இடம்பெற்று வருகின்றன. மனித உரிமை பாதுகாவலர்கள் கண்காணிக்கப்படுதல், பின்தொடர்தல், காவல்துறையினர் அதிக பலத்தைப் பயன்படுத்துதல், சித்திரவதைகளில் ஈடுபடுதல் போன்றன இடம்பெறுகின்றன. தடுத்து வைத்தல்கள் விசாரணைகளின் போது காவல்துறையினர் சித்திரவதைகளை மேற்கொள்வதனை தொடர்ந்தும் தமது வாடிக்கையாக கொண்டுள்ள நிலைமை தொடர்கின்றது.

குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறா நிலைமை தொடர்ந்தும் நாட்டில் நீடித்து வருகின்றது. இராணுவம், காவல்துறை, புலனாய்வுப் பிரிவு ஆகிய அனைத்து தரப்பினதும் குற்றச் செயல்கள், சித்திரவதைகள், பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபட்டால் கடுமையாக தண்டிக்கப்படுவர் என அவற்றுக்குப் பொறுப்பான தலைமை அதிகாரிகள் கடுமையான உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என அல் ஹூசெய்ன் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டால் எவ்வித தாமதமும் இன்றி முழு அளவில் விசாரணை நடத்தி தண்டனை விதிக்கப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். குற்றறச் செயல்களுக்கு தண்டனை விதிக்கப்படாத கலாச்சாரம் பல்வேறு நம்பிக்கையீனங்களை உருவாக்கியுள்ளது என குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் 22ம் திகதி ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் சயிட் அல் ஹூசெய்ன் இந்த அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளார்.
தமிழில்: GTN

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *