இலங்கை கட்டுரைகள் பிரதான செய்திகள்

உருத்திரபுரம் பிரதான வீதியின் உயர்ந்த பாலம் திட்டமிடலின் குறைபாடே – மக்கள் விசனம்

கிளிநொச்சி கரடிபோக்குச் சந்தியிலிருந்து உருத்திரபுரம் நோக்கிச் செல்லும் பிரதான வீதியில் பற்றிமா றோ.க. பாடசாலைக்கு அருகில்  அருமைக்கப்பட்டுள்ள உயர்ந்த பாலம் பொறியியல் திட்டமிடலின் குறைபாடு என பிரதேச மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

குறித்த பாலம் அண்மையில் அமைக்கப்பட்ட பாலம் எனவும் அதனூடான போக்குவரத்து கடினமானதாகவும், ஆபத்தானதாகவும் உள்ளது என தெரிவிக்கும் பிரதேச மக்கள்  வீதி , பாலங்கள் என்பன அமைக்கப்படுவது மக்களின் இலகுவான, பாதுகாப்பான போக்குரவத்திற்கே  எனவும் எனினும் குறித்த  பாலத்தின் ஊடான பயணம் அவ்வாறு இல்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

மேலும்  ஒடுங்கிய பாலமாகவும் ஒரு வாகனம் மாத்திரமே செல்லக் கூடியதாகவும் உள்ளது எனவும் சிறிய வான் ஒன்று செல்கின்ற போது எதிர் பக்கத்திலிருந்து வருகின்ற ஒரு முச்சக்கர வண்டி கூட பாலத்தின் ஊடாக  கடந்து செல்லமுடியாத அளவுக்கு அமைக்கப்பட்டுள்ளதாகவும் பாலத்தின் உயரமும் வீதியிலிருந்து சடுதியாக உயர்ந்து செல்கிறது எனவும்  பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த இடத்தில் அந்தளவு உயரத்தில் பாலம் அமைக்க வேண்டிய தேவை இல்லை எனவும்  இருப்பினும் அவ்வாறு உயரமானஅளவில் பாலம் அமைக்கப்பட்டிருந்தால் அதற்கேற்ற வகையில் வீதிக்கும் பாலத்திற்குமான சரிவு ஒரு சீராக அமைக்கப்பட்டிருக்க வேண்டும் எனவும்   ஆனால் குறித்த பாலத்தின் சரிவானது சடுதியாக காணப்படுவது ஒட்டுமொத்த வாகனங்களின்  பயணத்திற்கு ஆபத்தானதாக உள்ளது எனவும்  குறிப்பாக துவிச்சக்கர வண்டி இரு சக்கர உழவு இயந்திரம் என்பவற்றுக்கு மிகவும் ஆபத்தானதாக காணப்படுகிறது எனவும்  பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தை பொறுத்தவரை வீதி அபிவிருத்தியாக இருக்கட்டும்,  வாய்க்கால்கள், பாலங்கள் உள்ளிட்ட உட்கட்டுமானப் பணிகளில்  மக்களின்  அனுபவ அறிவை துறைசார் அதிகாரிகள் பெற்றுக்கொள்வது கிடையாது எனவும்  அவர்கள் தாங்கள் கற்றவற்றை பயன்படுத்தி பணிகளை மேற்கொண்டுவிட்டுச் சென்றுவிடுகிறார்கள் எனவும் இதனால் பல உட்கட்டுமானப் பணிகள் வெற்றியளிக்கவில்லை எனவும் பொது மக்கள்  குற்றம் சுமத்தியுள்ளனர்.


இதேவேளை   நவீன தொழிநுட்ப வளர்ச்சி போதுமானதாக வளர்ச்சியடையாத காலத்தில் அமைக்கப்பட்ட பல பாலங்கள் உள்ளிட்ட உட்கட்டுமான அபிவிருத்திகள் இன்றும் நல்ல முறையில் காணப்படுகிறது என்றும் பொது மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்

தங்களின் பிரதேசங்கள் தொடர்பில் பல வருட அனுபவங்களை கொண்ட பொது மக்களின் அனுபவ அறிவை அதிகாரிகள் புறக்கணித்தமையினால் தோல்வியில் முடிந்த பல திட்டங்கள் மாவட்டத்தில் உள்ளன எனவும் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதேவேளை உதாரணமாக நீர்ப்பாசன வாய்க்காலுடன் செல்கின்ற வீதியை புனரமைக்கின்ற போது நீர்ப்பாசனத் திணைக்களம், வீதி அபிவிருத்தி திணைக்களம், வீதி அபிவிருத்தி அதிகார சபை அல்லது பிரதேச  சபை என்பன ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டு கலந்து பேசி பணிகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் எனினும்; அவர்கள் அவ்வாறு செய்வதில்லை எனவும் இதனால்  பல திட்டங்கள் முழுமையடையாமல் உள்ளன எனவும் பொது மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

எனவே   அமைக்கப்பட்ட  உருத்திரபுரம் வீதியில் உள்ள உயரமான பாலத்தில்  பாதுகாப்பான போக்குவரத்தை மேற்கொள்ளும் வகையில் பாலத்தின் இரண்டு பக்கங்களிலும் உள்ள வீதிக்கும் பாலத்திற்குமான சரிவை சீராக அமைத்துதருமாறு பொது மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *