இலங்கை பிரதான செய்திகள்

18ஆவது நாளாகவும் வீதியில்தான் இருக்கிறோம் – குமுறும் கேப்பாபுலவு மக்கள்:

 

எங்கள் பூர்வீக நிலத்தை மீட்பதற்காக 18ஆவது நாளாகவும் வீதியில்தான்தான் இருக்கிறோம் என்று கூறுகின்றனர் கேப்பாபுலவு மக்கள். முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாலவு மக்கள் தமது பூர்வீக நிலங்களை விடுவிக்க வலியுறுத்தி கடந்த ஒன்பது வருடங்களாக பல்வேறு வகையிலும் போராடி வருகிறார்கள். முப்பது நாட்கள் தொடர் போராட்டத்தின் பின்னர் பிலக்குடியிருப்பு காணிகள் விடுவிக்கப்பட்டன.
இந்த நிலையில் கேப்பாபுலவு பிரதேசத்தில் விடுவிக்கப்படாத 482 ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு கேப்பாப்புலவு பூர்வீக கிராம மக்கள் 18 நாளாகவும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதேவேளை இந்த மக்கள் முன்னெடுத்த  உணவுத் தவிப்புப் போராட்டத்தை கைவிட்டு, தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமது சொந்த நிலங்களை கையகப்படுத்தியுள்ள இராணுவத்தினர் அதனை விடுவிக்கவேண்டுமெனக்கோரியே இப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
கேப்பாபுலவில் அமைத்துள்ள முல்லைத்தீவு இராணுவத்தலைமையகத்துக்கு முன்பாக தொடர் போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர். இதேவேளை இந்தப் போராட்டத்தை தடுத்து நிறுத்துமாறு இராணுவத்தினர் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கின்போது, அவ்வாறு தடைவிதிக்க முடியாதென்று நீதிமன்றம் குறிப்பிட்டிருந்ததும் குறிப்பிடப்படத்தக்கது.
இராணுவத்தின் தொடர் கண்காணிப்பு அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள் என்று பலதரப்பட்டவர்களும் பல்வேறு சிரமங்களின் மத்தியில் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இராணுவத்தின் நில ஆக்கிரமிப்புக்கு எதிரான குரல்களை வலுவாக இந்த மக்கள் எழுப்புகின்றனர். அத்துடன் சிறுவர்கள் இராணுவ ஆக்கிரமிப்புக்கு எதிராகவும் தமது கிராமம் பற்றியும் பாடல்களை பாடி போராடுகின்றனர்.
128 குடும்பங்களிற்கு சொந்தமான 482 ஏக்கருக்கு அதிகமான காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. கேப்பாப்புலவு கிராம சேவகர் பிரிவில் கேப்பாப்புலவு பூர்வீக கிராமம், சீனியா மோட்டை, பிலக்குடியிருப்பு, சூரிபுரம் போன்ற கிராமங்கள் காணப்படுகின்ற நிலையில் இதில் அனைத்து கிராமங்களிலும் இராணுவம் நிலைகொண்டுள்ளதோடு கேப்பாப்புலவு பூர்வீக கிராமம் தவிர்ந்த ஏனைய அனைத்து கிராமங்களிலும் பெருமளவான பகுதிகள் இராணுவத்தால் ஏற்கனவே விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கேப்பாப்புலவு பூர்வீக கிராமத்தில் பிரதான வீதியை மறித்து குடியிருப்பு காணிகள், வீடுகள், பாடசாலை, வணக்கஸ்தலங்கள், விளையாட்டு மைதானங்கள், தோட்ட நிலங்கள், வயல் நிலங்கள் என அனைத்தையயும் கையகப்படுத்தி 10 இற்கும் மேற்பட்ட இராணுவத்தின் பிரதான படைப்பிரிவுகளை அமைத்து பல இராணுவ முகாம்களை இராணுவம் அமைத்துள்ளது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *