இந்தியா

மதுக்கடைக்கெதிராக போராட்டிய பெண்கள் மீது தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பில் மனித உரிமைகள் ஆணையம் தமிழக அரசிடம் விளக்கம் கோரியுள்ளது

தமிழ்நாடு திருப்பூர் அருகே மதுபானக்கடைக்கெதிராக போராட்டம் நடத்திய பெண்கள் மீது தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பாக  விளக்கமளிக்குமாறு தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் கடிதம் அனுப்பி உள்ளது.

குடியிருப்புகளுக்கு மத்தியில் தமிழக அரசு புதிதாக மதுபானக் கடை ஒன்றை நேற்று ஆரம்பித்ததனைத் தொடர்ந்து அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட்ட போதும்  உடன்பாடு ஏற்படாததால், பொதுமக்கள் தொடர்ந்து போராடினர். இதனால் அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி விரட்டியடித்தனர். அப்போது ஈஸ்வரி என்ற 45 வயது பெண்ணின் கன்னத்தில் திருப்பூர் கூடுதல் காவல்துறை அதிகாரியான  பாண்டியராஜன் தாக்குதல் மேற்கொண்டார்.பாண்டியராஜன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றில்  வழக்கும் தொடரப்பட்டுள்ளது.

இந்நிலையில், பெண்கள் மீது போலீசார் தாக்குதல் மேற்கொண்டமை குறித்து தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், தமிழக டி.ஜி.பி. ராஜேந்திரன் மற்றும் மாவட்ட எஸ்.பி. ஆகியோருக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம்  2 வாரங்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு கடிதம் அனுப்பி உள்ளது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *