இலங்கை பிரதான செய்திகள்

கதவடைப்பால் கிளிநொச்சியும் முடங்கியது – காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஏ9 வீதியில் போராட்டம்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்திற்கு வலுச் சேர்க்கும் முகமாக மேற்கொள்ளப்பட்ட முழுகதவடைப்பு போராட்டத்தினால் கிளிநொச்சியும் முழுமையாக முடங்கியதோடு வெறிச்சோடி காணப்பட்டது.

கிளிநொச்சியில் இன்று (27)  பாடசாலைகள், வியாபார நிலையங்கள், போக்குவரத்துகள், சந்தை நடவடிக்கைகள்   என எவையும் இயங்கவில்லை, மத்திய அரசின் கீழ் இயங்குகின்ற அரச திணைக்களங்கள்  திறந்திருந்த போதிலும் மக்கள் எவரும் செல்லாத நிலையில் செயற்பாடின்றி காணப்பட்டதோடு, பெரும்பாலான உத்தியோகத்தர்களும் பணி சமூகமளித்திருக்கவில்லை. மாகாண  அரசின் கீழ் இயங்குகின்ற  நிறுவனங்கள் மூடபட்டிருந்தன. இதனால்  இன்றைய தினம் அனைத்துச் செயற்பாடுகளும் செயலிழந்து காணப்பட்டன.

கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்னறில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஒரு மணித்தியாலயம் ஏ9 பிரதான  வீதியை மறித்து  காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களுக்கு தீர்வை  வழங்கு என கண்ணீருடன் கதறி அழுது ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர்

கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று 67 வது நாளாக தங்களது  கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டுவருகின்றனர். இந்த 67 நாட்களில் தங்களது போராட்டம் குறித்து அரசு  எவ்வித  அக்கறையும் இன்றி இருக்கிறது என்றும் எனவே தாங்கள் இனி தங்களின் போராட்ட வடிவத்தை மாற்றி தங்களுக்கான தீர்வு கிடைக்கும் வரை  அகிம்சை வழியில் போராட போவதாகவும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

காணாமலாக்கப்பட்ட தமது உறவுகள் தொடர்பில் விசாரணைகளை நடாத்தி உண்மையை கண்டறியுமாறு வடக்கு கிழக்கின் பல்வேறு பகுதிகளிலும் தொடராக போராட்டங்கள் தமிழ்  மக்களினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதேபோன்று அரசாங்கத்தினால் கையகப்படுத்தப்பட்டுள்ள பொது மக்களுக்குச் சொந்தமான ஆயிரக் கணக்கான ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு கோரியும் பல நாட்களாக இம் மக்கள் சத்தியாக்கிரகப் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். எனினும்  மக்களின் நியாயமான கோரிக்கைகள் தொடர்பில் அரசாங்கம் தொடர்ந்தும் அலட்சியப் போக்கை கடைப்பிடித்து வருவது கவலைக்கும் கண்டனத்துக்குமுரியதாகும்.    எனக் குறிப்பிடும்  உறவினர்கள்

இன்றை முழுமையான கதவடைப்பு போராட்டத்திற்கு ஒத்துழைப்பு தந்த பொது அமைப்புக்கள், வர்த்தக சமூகங்கள் கல்விச் சமூகம், தொழிற்சங்கங்கள், அரசியற் கட்சிகள், ஊடகங்கள் அனைத்துக்கும் நன்றிகளை தெரிவிப்பதாகவும் அவர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்

 

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *