இலங்கை பிரதான செய்திகள்

நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வு தொடர்பான தேசிய கொள்கையை அமைச்சரவை ஏற்பு

நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வு தொடர்பான தேசிய கொள்கை பத்திரத்தை, தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சர் என்ற முறையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் என்ற முறையில் அமைச்சர் மனோ கணேசனும் கூட்டாக அமைச்சரவையில் கடந்த அமைச்சரவை கூட்டத்தில் சமர்பித்துள்ளனர். இந்த அமைச்சரவை பத்திரத்தை அமைச்சரவை ஏகமனதாக ஏற்றுக்கொண்டுள்ளது. அமைச்சரவை சம்பிரதாயத்தின்படி எதிர்வரும் 9ம் திகதி செவ்வாய்கிழமை நடைபெறவுள்ள அடுத்த அமைச்சரவை கூட்டத்தின் பின் இந்த தேசிய கொள்கை முழுமையாக நடைமுறைக்கு வரும் வண்ணம் அனைத்து அமைச்சுகளுக்கும், அரச நிறுவனங்களுக்கும், ஊடகங்களுக்கும் அனுப்பி வைக்கப்படும். எதிர்காலத்தில் நாட்டின் நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வு தொடர்பான அனைத்து நடைமுறைகளும் இந்த தேசிய கொள்கையின்படியே முன்னெடுக்கப்படும்.  

இது தொடர்பில் கருத்து தெரிவித்த தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் கூறியதாவது,

கடந்த வருடம்  செப்டம்பர் மாதம் 9ம் திகதி, தேசிய நல்லிணக்க கொள்கை என்ற பெயரில் ஒரு பத்திரம் ஜனாதிபதியால் சமர்பிக்கப்பட்ட போது, அது முழுமையானதல்ல என நான் அமைச்சரவையில் ஆட்சேபனை தெரிவித்திருந்தேன். அதை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி, அந்த அமைச்சரவை பத்திரத்தை திருத்தி சமர்பிக்கும்படி கூறியிருந்தார். இதையடுத்து எனது அமைச்சின் செயலாளர் ரஞ்சித் உயங்கொடவும்,  தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சின் செயலாளர் சிவஞான சோதியும் அமைச்சு அதிகாரிகளுடன் இணைந்து, எனது ஆலோசனைகளின்படி புதிய திருத்தப்பட்ட பத்திரத்தை தயாரித்துள்ளனர். இந்த பத்திரமே இப்போது அமைச்சரவையினால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.  

இந்த தேசிய கொள்கை பத்திரத்தில், நாட்டில் நல்லிணக்கம், சகவாழ்வு, சமாதானம், ஐக்கியம் ஆகியவற்றை ஏற்படுத்தும் முகமாக, சமவுரிமை, மனித உரிமைகள், மொழி உரிமைகள், தேசிய சகவாழ்வு மற்றும் பன்மைதன்மை, உரித்துடைமை, நீதி மற்றும் ஆளுகை, வாழ்வாதார அபிவிருத்தி, சமூகவுணர்வு, இடைக்கால நீதி, ஆண் பெண் பால் நிலை ஆகிய விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இந்த நாட்டில் ஒன்றுக்கு மொழிகள் பேசப்படுவதையும், ஒன்றுக்கு மேற்பட்ட மதங்கள் கடைபிடிக்கப்படுவதையும், ஒன்றுக்கு மேற்பட்ட இனங்கள் வாழ்வதையும் இன, மத, மொழி, சமூக, அரசியல், பொருளாதார காரணிகளால் வரலாற்றுரீதியாக பல்வேறு பிரிவுகள் தேசிய வாழ்விலிருந்து புறந்தள்ளப்பட்டுள்ளமையையும், தேசிய நல்லிணக்கம் சகவாழ்வுக்கு முன்னோடியாக தேசிய மும்மொழிக்கொள்கை கடைபிடிக்கப்பட வேண்டும் என்பதையும், இந்த தேசிய கொள்கை ஏற்றுக்கொண்டுள்ளது.

இந்த தேசிய கொள்கை பற்றிய முழுமையான விபரங்கள் எதிர்வரும் 9ம் திகதி செவ்வாய்கிழமை நடைபெறவுள்ள அடுத்த அமைச்சரவை கூட்டத்தின் பின் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.                   

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *